நைமிசாரண்யம் இன்று... |
உண்மையாக வியாசர் முதலில் இருபத்துநாலாயிரம் {24,000} செய்யுள்களில்தனிபட்ட பகுதிகளை {அத்யாயங்களைக்} கொண்ட பாரதத் தொகுப்பையே செய்தார்; அவ்வளவு மட்டுமே கல்விமான்களால் {உண்மையான} பாரதம் என்றழைக்கப்படுகிறது.(101) அதன்பிறகு அவர், அறிமுகம் மற்றும் அந்தப் பகுதிகளின் பொருளடக்கத்துடன் கூடிய நூற்றைம்பது {150} செய்யுள்களில் ஒரு சுருக்கத்தை இயற்றினார்[5].(102) இதை அவர், முதலில் தமது மகன் சுகருக்குக் கற்பித்தார்; அதன் பிறகு அவர், அதே தகுதிகளைக் கொண்ட தமது பிற சீடர்களுக்கு அதைக் கொடுத்தார்.(103)
அதன் பிறகு அவர், அறுபது நூறாயிரம் (அறுபது லட்சம் 60,00,000} செய்யுள்களுடன் {கிரந்தஸங்கியைகளுடன்} கூடிய மற்றொரு தொகுப்பைச் செய்தார்.
அவற்றில், முப்பது நூறாயிரத்தை {முப்பது லட்சத்தை 30,00,000} தேவர்களின் உலகம் அறிந்திருக்கிறது;(104)
பதினைந்து நூறாயிரத்தை {பதினைந்து லட்சத்தை 15,00,000} பித்ருக்களின் உலகம் அறிந்திருக்கிறது;
பதினான்கு நூறாயிரம் {பதினான்கு லட்சம் 14,00,000} கந்தர்வர்களுக்கு மத்தியில் அறியப்பட்டிருக்கிறது,
அதேவேளையில் ஒரு நூறூயிரமானது {ஒரு லட்சமானது 1,00,000} இந்த மனிதகுல உலகால் அறியப்பட்டிருக்கிறது.(105)
தேவர்களுக்கு அவற்றை {மஹாபாரதச் சுலோகங்களை} நாரதர் உரைத்தார், பித்ருக்களுக்குத் தேவலரும், கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களுக்குச் சுகரும்வெளியிட்டனர்;(106)
நீதியுடன் கூடிய கொள்கைகள் கொண்டவரும், வேதங்களை அறிந்தர் அனைவரிலும் முதன்மையானவருமான வியாசரின் சீடர்களில் ஒருவரான வைசம்பாயனரால்இவ்வுலகில் அவை உரைக்கப்பட்டன. சௌதியாகிய நானும், அந்த ஒரு நூறாயிரம் {ஒரு லட்சம் 1,00,000} செய்யுள்களையும் மீண்டும் சொல்லப் போகிறேன் என்பதை அறிவீராக.(107)
துரியோதனன், ஆசையால் உண்டாக்கப்பட்ட ஒரு பெரும் மரமாவான், கர்ணனே அதன் தண்டாவான்; சகுனி அதன் கிளைகளாவான்; துச்சாசனனே அதன் கனியும், மலர்களுமாவான்; பலவீனனான திருதராஷ்டிரனே அதன் வேராவான்.(108) {இந்த ஸ்லோகம் கங்குலியின் பதிப்பில் இல்லை}
யுதிஷ்டிரன் அறம் மற்றும் நல்லொழுக்கம் கொண்ட ஒரு பெரும் மரமாவான்,அர்ஜுனன் அதன் தண்டாவான், பீமசேனன் அதன் கிளைகளாவான், மாத்ரியின் மைந்தர்கள் இருவரும் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்} அதில் முழுதாக வளர்ந்த கனியும் மலர்களுமாவர். கிருஷ்ணன், பிரம்மன் மற்றும் பிராமணர்கள் அந்த மரத்தின் வேராவர்.(109)
பாண்டு தன் விவேகத்தாலும், ஆற்றலாலும் பல நாடுகளை அடக்கி, ஒரு விளையாட்டு வீரனாக, முனிவர்களுடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட காட்டில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட போது, தன் இணையோடு புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மானைக் கொன்றதால், மிகக் கடுமையானதும், தன் குடும்பத்து இளவரசர்கள் {பாண்டவர்கள்} வாழ்ந்தவரை, அவர்களது நடத்தைக்கு எச்சரிக்கையாக அமைந்ததுமான தீப்பேறு ஒன்றை அடைந்தான்.(110,111) அவர்களது {அந்த இளவரசர்களின்} தாய்மார் {குந்திமற்றும் மாத்ரி}, விதிகளை நிறைவேற்றும்பொருட்டு {பாண்டுவின் குலம் அழிந்து போகாமல் இருப்பதற்காக}, தேவர்களான தர்மன் {யமதர்மராஜன்}, வாயு, சக்ரன் {இந்திரன்}, தெய்வத்தன்மை கொண்ட அசுவினி இரட்டையர்கள் ஆகியோரைத் தங்கள் அரவணைப்புகளுக்கு மாற்றாக ஏற்றுக்கொண்டனர்[6].(112) அவர்களது வாரிசுகள் {பாண்டவர்கள்} தாய்மாரின் கவனிப்பின் கீழ், தவசிகள் சமூகத்தில், புனிதமான சோலைகள் மற்றும் அறவோருக்குச் சொந்தமான, தனிப்பட்ட, புனிதமான வசிப்பிடங்களில் வளர்ந்து வந்தபோது, தங்கள் முடிகளைத் தங்கள் தலைகளில் முடிந்து கட்டிக் கொண்டவர்களாகவும் {சடை தரித்தவர்களாகவும்}, பிரம்மச்சரிய வழக்கம் கொண்ட மாணவர்களாகவும் யாரைப் பின்தொடர்ந்து சென்றார்களோ, அந்த முனிவர்களால் அவர்கள், திருதராஷ்டிரன் மற்றும் அவனது மகன்களின் முன்னிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.(113-114) "இந்த எங்கள் சீடர்கள்" என்று சொன்ன அவர்கள் {முனிவர்கள்}, "உங்கள் மகன்களும், உங்கள் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர்; இவர்கள் பாண்டவர்களாவர்" என்றும் சொன்னார்கள். {பிறகு} இதைச் சொன்ன அந்த முனிவர்கள் மறைந்து போனார்கள்.(115)
அவர்கள் பாண்டுவின் மகன்களாக முனிவர்களால்} அறிமுகப்படுத்தப்பட்டதைக் கௌரவர்கள் {குருஜாங்கல நாட்டு மக்கள்} கண்ட போது, புகழ்பெற்ற {உயர்ந்த} வகுப்பைச் சார்ந்த குடிமக்கள் மிகவும் மகிழ்ச்சியாகக் கூச்சலிட்டனர்.(116) எனினும் சிலர், “அவர்கள் பாண்டுவின் மகன்கள் அல்ல” என்றனர்; சிலர் “அவர்களே {மகன்களே}” என்றனர்; மேலும் சிலரோ, அவன் {பாண்டு} இறந்து நெடுங்காலமானதைக் கண்டு, “அவர்கள் அவனது {பாண்டுவின்} வாரிசாக எவ்வாறு இருக்க முடியும்?” என்று கேட்டனர்.(117) இருப்பினும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும், "அனைத்து வகையிலும் அவர்களுக்கு நல்வரவு! தெய்வீக முன்னறிவாலேயே {காலம் நல்லதாக இருப்பதாலேயே} பாண்டுவின் குடும்பத்தை நாம் காண்கிறோம். அவர்களது வரவு நல்வரவாகவே அறிவிக்கப்பட வேண்டும்" என்ற கூக்குரல்கள் கேட்கப்பட்டன.(118) இந்த இசைவுப்பேரொலிகள் நின்றதும், சொர்க்கத்தின் அனைத்துப் புள்ளிகளிலும் {அனைத்துத் திசைகளிலும்} எதிரொலித்தவையான, கண்களுக்குப் புலப்படாத ஆவிகளின்[7]பாராட்டுகள், மிகப்பெரியனவாக இருந்தன. அங்கே இனிய நறுமணமிக்க மலர்களின் மழையும், சங்குகள் மற்றும் துந்துபிகளின் ஒலியும் இருந்தன. அந்த இளம் இளவரசர்களின் {பாண்டவர்களின்} வருகையின் போது இத்தகு ஆச்சரியங்கள் நடந்தன.(119,120) அந்தச் சந்தர்ப்பத்தில், குடிமக்கள் தங்கள் நிறைவை வெளிப்படுத்தும் வகையில், அவர்கள் அனைவரின் மகிழ்ச்சி நிறைந்த ஒலியானது, பாராட்டுகளாகப் பெருகி, சொர்க்கங்களையே {வானத்தையே} எட்டும் வகையில் மிகப் பெரியதாக இருந்தது.(121)
வேதங்களையும், பல்வேறு சாத்திரங்களையும் முழுமையாகக் கற்ற பாண்டவர்கள், எவரிடமும் எந்த அச்சவுணர்வுமின்றி, அனைவராலும் மதிக்கப்பட்டு அங்கே {ஹஸ்தினாபுரத்தில்} வசித்து வந்தனர்.(122) முக்கியமான மனிதர்கள், யுதிஷ்டிரனின் தூய்மையிலும், பீமசேனனின் பலத்திலும், அர்ஜுனனின் வீரத்திலும்,(123) மூத்தோருக்கு அடங்கி நடக்கும் குந்தியின் கவனிப்பிலும், இரட்டையரான நகுலன் மற்றும் சகாதேவனின் பணிவிலும் நிறைவடைந்தனர்; அவர்களது வீர அறங்களால் {நல்லொழுக்கங்களால்} மக்கள் அனைவரும் {அவர்களிடம்} மகிழ்ச்சியடைந்தனர்.(124) சிறிது காலங்கழித்து, அர்ஜுனன், ராஜாக்களின் {மன்னர்களின்} கூட்டத்திற்கு மத்தியில், ஒரு ஸ்வயம்வரத்தில் {தன்னேற்பில்}, வில்லாண்மையில் {வில்வித்தையில்} மிகக் கடினமான அருஞ்செயல் ஒன்றைச் செய்து, கிருஷ்ணை {திரௌபதி} என்ற கன்னிகையை அடைந்தான்.(125) இந்தக் காலத்திலிருந்தே அவன் {அர்ஜுனன்} இவ்வுலகின் வில்லாளிகள் அனைவருக்கும் மத்தியில் மிகவும் மதிக்கப்படலானான்; போர்க்களங்களிலும் அவன், அந்தச் சூரியனைப் போல, எதிரிகளால் கடினமானவனாகக் காணப்பட்டான்.(126) அண்டை {நாடுகளின்} இளவரசர்கள் அனைவரையும், கருத்திற்கொள்ளத்தக்க அனைத்து இனங்களையும் வென்ற அவன் {அர்ஜுனன்}, ராஜா (தன் அண்ணன்) {யுதிஷ்டிரன்}, ராஜசூயம் என்று அழைக்கப்பட்ட பெரும் வேள்வியை நடத்துவதற்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றினான்.(127)
வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அறிவாலோசனைகள் {நல்ல உபாயங்கள்}, பீமசேனன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் வீரம் {சக்தி} ஆகியவற்றின் மூலம், (மகதத்தின் மன்னன்) ஜராசந்தனையும், செருக்குமிக்கச் சைத்யனையும் {சேதி நாட்டு மன்னன் சிசுபாலனையும்} கொன்று, தகுதிகள் கடந்த நிலையை அடைந்த யுதிஷ்டிரன், பொருள்கள் {அன்னம்}, காணிக்கைகள் {தக்ஷிணைகள்} ஆகியவை நிறைந்த மகத்தான ராஜசூய வேள்வியைச் செய்யும் உரிமையை அடைந்தான்.(128,129) இந்த வேள்விக்குத் துரியோதனன் வந்தான்; காணிக்கைகள், விலைமதிப்புமிக்கக் கற்கள் {முத்துக்கள்}, தங்கம் மற்றும் ரத்தினங்களையும்; பசுக்கள், மாடுகள், யானைகள், குதிரைகள் ஆகிய செல்வங்களையும்; ஆர்வத்தைத் தூண்டும் இழைமங்கள் {துணிகள்}, ஆடைகள் மற்றும் மேலாடைகளையும்; விலைமதிப்பற்ற சால்வைகள், விலங்கின் மென்மயிர் ஆடைகள், ரங்குவின் {ரங்கு என்ற மானின்} தோலாலான விரிப்புகளையும்; சுற்றிலும் சிதறிக் கிடக்கும் பாண்டவர்களின் பரந்த செல்வத்தையும் அவன் {துரியோதனன்} கண்டபோது, பொறாமையால் நிறைந்து, மிகவும் மகிழ்ச்சியற்றவனானான் {உற்சாகத்தை இழந்தவனானான்}.(130-132) தெய்வீக சபையின் பாணியில், (அசுரத்தச்சன்) மயனால்நேர்த்தியாகக் கட்டப்பட்ட சபா மண்டபத்தைக் கண்ட போது அவன் சினத்தால் எரிந்தான்.(133) அந்தக் கட்டடத்திற்குள் உள்ள குறிப்பிட்ட கட்டடக்கலை மாயங்களால் குழம்பத் தொடங்கிய போது, இழிந்த பரம்பரையைச் சேர்ந்த ஒருவனைப் போல அவன் {துரியோதனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் பீமசேனனால் ஏளனம் செய்யப்பட்டான்[8].(134)
பல்வேறு இன்பநுகர் பொருள்கள், பல்வேறு விலைமதிப்பற்ற பொருள்கள் ஆகிவற்றைப் பகிர்ந்தளிக்கும்போது, குறைவடைந்தவனாகவும், குருதியற்றவனாகவும், வெளிறியவனாகவும் அவனது மகன் {துரியோதனன்} மாறிக்கொண்டிருப்பதாகத் திருதராஷ்டிரனிடம் தெரிவிக்கப்பட்டது.(135) சில காலம் கழித்து, அந்தத் திருதராஷ்டிரன், தன் மகன் {துரியோதனன்} மீது கொண்ட பாசத்தின் காரணமாக, (பாண்டவர்களுடன்) அவர்கள் {கௌரவர்கள்} பகடை விளையாட தன் ஒப்புதலை அளித்தான். இதை அறியவந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} மிகவும் கோபமடைந்தான்.(136) இதனால் நிறைவையிழந்த {அதிருப்தியடைந்த} அவன், சச்சரவுகளைத் தவிர்க்க ஏதும் செய்யாமல், அந்த விளையாட்டையும், அதனால் எழுந்தவையும், நியாயப்படுத்தப்பட முடியாதவையும், பயங்கரமானவையுமான பரிமாற்றங்களைப் புறக்கணித்தான்;(137) விதுரன், பீஷ்மர், துரோணர், சரத்வானின் மகனான கிருபர் ஆகியோர் இருந்தாலும், அதை {அந்த விளையாட்டைத்} தொடர்ந்து வந்த பயங்கரப் போரில் அவன் {கிருஷ்ணன்} க்ஷத்திரியர்களைத் தங்களுக்குள் ஒருவரையொருவர் கொல்லச் செய்தான்.(138)
{குருக்ஷேத்திரப் போரின் முடிவில்} பாண்டவர்களின் வெற்றி குறித்த தீய செய்தியைக் கேட்டவனும், துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோரின் தீர்மானங்களை நினைத்துப் பார்த்தவனுமான திருதராஷ்டிரன்,(139) சிறிது நேரம் சிந்தித்து, சஞ்சயனிடம் பின்வருமாறு பேசினான்: "ஓ! சஞ்சயா, நான் சொல்லப்போகும் அனைத்தையும் கவனித்தால் {கவனத்துடன் கேட்டால்}, என்னை நீ வெறுக்க மாட்டாய்.(140) சாத்திரங்களை நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவு மற்றும் நல்லறிவைக் கொண்டவனாகவும் நீ இருக்கிறாய். நான் எப்போதும் போரை விரும்பியதில்லை, என் குல அழிவிலும் நான் மகிழ்ச்சி கொண்டதில்லை.(141) என் சொந்தப் பிள்ளைகள் மற்றும் பாண்டுவின் பிள்ளைகள் ஆகியோருக்கிடையில் எனக்கு {எப்போதும்} எந்த வேறுபாடுமில்லை.(142) நான் கிழவன் என்பதால், என் மகன்கள், தங்கள் விருப்பபடிக்கு ஏறுக்குமாறானவர்களாகி என்னை இகழ்ந்தனர். பார்வையற்றவனான நான், என் பரிதாப நிலையினாலும், தந்தை பாசத்தாலும் அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்.(143)
சிந்தையற்ற {புத்தியில்லாத} துரியோதனனிடம் எப்போதும் வளர்ந்த மடமையின் பின்னால் சென்று நானும் மூடனானேன். பாண்டு மகன்களின் பெரும் செல்வங்களைக் காணச் சென்ற என் மகன் {துரியோதனன்}, மண்டபத்தில் {மண்டபத்தின் படிகளில்} ஏறிச் சென்ற போது, அவனது தடுமாற்றத்திற்காக ஏளனம் செய்யப்பட்டான்.(144)அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவனும், களத்தில் பாண்டுவின் மகன்களை வெற்றிகொள்ள இயலாதவனுமான அவன் {துரியோதனன்}, தானே படைவீரனாக இருப்பினும், தன் சொந்த முயற்சியால் நற்பேற்றை அடைய விரும்பாமல், காந்தாரத்தின் மன்னனுடைய {சகுனியுடைய} உதவியோடு, பகடையெனும் ஒரு நியாயமற்ற விளையாட்டை நடத்தினான்.(145,146) ஓ! சஞ்சயா, அதன்பேரில் நடந்தவையும், என் அறிவுக்கு எட்டியவையுமான அனைத்தையும் கேட்பாயாக. நான் சொல்லும் அனைத்தையும் நீ கேட்கும்போதே, அவை அனைத்தையும் நீ நினைத்துப் பார்த்தால், முன்கண்டுணரும் {தீர்க்கதரிசனக்} கண்களைக் கொண்ட ஒருவனாக என்னை நீ அறிவாய்.(147)
எப்போது அர்ஜுனன் வில்லை வளைத்து, ஆவலுடன் இலக்கைத் துளைத்து, அதைத் தரையில் வீழ்த்தினான் என்றும், கூடியிருந்த இளவரசர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கன்னிகையான கிருஷ்ணையை {திரௌபதியை} வெற்றிகரமாகக் கொண்டு சென்றான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(148)
எப்போது மது குலத்தைச் சேர்ந்த சுபத்திரை,வலுக்கட்டாயமாகக் கைப்பற்றப்பட்ட பிறகு, துவாரகை நகரத்தில், அர்ஜுனனால் திருமணம் செய்யப்பட்டாள் என்றும், விருஷ்ணி குலத்தின் இரு வீரர்களும் (சுபத்திரையின் சகோதரர்களான கிருஷ்ணனும், பலராமனும்) அதற்காகக் கோபமடையாமல் இந்திரப்பிரஸ்தத்திற்குள் நண்பர்களாக நுழைந்தனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(149)
எப்போது அர்ஜுனன், தன் தெய்வீகக் கணையைக் கொண்டு, தேவர்களின் மன்னனான இந்திரனால் பொழியப்பட்ட மழையைத் தடுத்தான் என்றும், காண்டவத்தின் காட்டை {காண்டவவனத்தை} அக்னிக்குக் கொடுத்து, அவனை நிறைவுகொள்ளச் செய்தான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(150)
எப்போது ஐந்து பாண்டவர்களும், தங்கள் தாயான குந்தியுடன் அரக்கு வீட்டில் இருந்து தப்பித்தனர் என்றும், அவர்களுக்கான ஏற்பாடுகளை நிறைவேற்றுவதில் விதுரன்ஈடுபட்டான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(151)
எப்போது அர்ஜுனன், அரங்கில் உள்ள இலக்கைத் துளைத்துத் திரௌபதியை வென்றான் என்றும், துணிச்சல்மிக்கப் பாஞ்சாலர்கள், பாண்டவர்களைச் சேர்ந்தனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(152)
எப்போது மகத அரசகுலத்தில் முதன்மையானவனும், க்ஷத்திரியர்களுக்கு மத்தியில் சுடர்விடுபவனுமான ஜராசந்தன், வெறுங்கரங்களைக் கொண்டே பீமனால் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(153)
எப்போது பாண்டு மகன்கள் தங்கள் பொதுப்போர்த்தொடரில் {திக்விஜயத்தில்} நிலத்தின் தலைவர்களை வென்று, மகத்தான ராஜசூய வேள்வியைச் செய்தனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(154)
எப்போது திரௌபதி, கண்ணீரால் தடைபட்ட தன் குரலுடனும், இதயம் நிறைந்த வேதனையுடனும், தூய்மையற்ற {தீட்டுக்} காலத்தில், ஒற்றையுடுப்புடன் சபைக்கு இழுத்து வரப்பட்டாள் என்றும், பாதுகாவலர்களைக் கொண்டவளானாலும், பாதுகாவலர்களற்றவளைப் போல நடத்தப்பட்டாள் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(155)
எப்போது தீயவனும், பொல்லாதவனுமான துச்சாசனன், அவளது {திரௌபதியின்} அந்த ஒற்றையாடையை உருவ முயன்று, அவளது மேனியில் இருந்து ஒரு பெரும் துணிக்குவியலை மட்டுமே உருவி, அதன் முனையை அடைய முடியாமல் போனான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(156)
எப்போது யுதிஷ்டிரன், பகடையாட்டத்தில் சௌபலனால் {சகுனியால்} வீழ்த்தப்பட்டு, அதன் விளைவாக அவனது நாட்டை இழந்தும், ஒப்பற்ற ஆற்றலையுடைய அவனது தம்பிமாரால் கவனிக்கப்பட்டான் {சேவகம் செய்யப்பட்டான்} என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(157)
எப்போது நல்லோரான பாண்டவர்கள், துன்பத்துடன் அழுதுகொண்டே, தங்கள் அண்ணனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து காட்டுக்குச் சென்றனர் என்றும், தங்கள் நலமின்மையைத் தணிக்கப் பல்வேறு வகைகளில் முயன்றனர் என்றும் கேட்டேனோ, ஓ சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(158)
எப்போது யுதிஷ்டிரன், ஸ்நாதகர்களாலும், பிச்சை பெற்று வாழும் உன்னத மனம் கொண்ட பிராமணர்களாலும் காட்டுக்குள் பின்தொடரப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(159)
எப்போது அர்ஜுனன், ஒரு மோதலில், வேடனின் வடிவில் இருந்தவனும், தேவர்களுக்குத் தேவனுமான திரையம்பகனை (முக்கண்ணனை) {சிவனை} நிறைவு செய்து, பாசுபதம் என்ற பெரும் ஆயுதத்தை அடைந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(160)
எப்போது நீதிமானும், புகழ்பெற்றவனுமான அர்ஜுனன், தேவலோகங்களுக்குச் சென்று, இந்திரனிடமே தெய்வீக ஆயுதங்களை அடைந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(161)
எப்போது அர்ஜுனன், அதன் பிறகு காலகேயர்களையும், தேவர்களால் பாதிப்படைய முடியாதவர்களும், தாங்கள் அடைந்திருந்த வரத்தால் செருக்குடன் இருந்தவர்களுமான பௌலோமர்களையும் வென்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(162)
எப்போது எதிரிகளைத் தண்டிப்பவனான அர்ஜுனன், அசுரர்களின் அழிவுக்காக இந்திரலோகத்திற்குச் சென்று வெற்றியோடு திரும்பினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(163)
எப்போது பீமனும், பிருதையின் (குந்தியின்) பிற மகன்களும், வைஸ்ரவணனுடன் {குபேரனோடு} சென்று மனிதர்களால் அடைய முடியாத நாட்டை அடைந்தனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(164)
எப்போது என் மகன்கள், கர்ணனின் ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்டுச் சென்று, தங்கள் கோஷயாத்திரை பயணத்தின் போது, கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டனர் என்றும், அர்ஜுனனால் விடுவிக்கப்பட்டனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(165)
எப்போது தர்மன் (நீதிதேவன்), யக்ஷனின் வடிவில் வந்து, யுதிஷ்டிரனிடம் குறிப்பிட்ட கேள்விகளை முன்வைத்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(166)
எப்போது என் மகன்கள், விராடனின் ஆட்சிப்பகுதிகளுக்குள், தங்கள் மாற்றுவடிவத்தில் திரௌபதியுடன் வசித்த பாண்டவர்களைக் கண்டுபிடிக்கத் தவறினர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(167)
எப்போது என் தரப்பின் முக்கிய மனிதர்கள் அனைவரும், விராடனின் ஆட்சிப்பகுதிகளில் வசித்தவனும், ஒரே தேரில் வந்தவனுமான உன்னதமான அர்ஜுனனால் வெல்லப்பட்டனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(168)
எப்போது மதுகுலத்தவனும், ஓர் அடியால் மொத்த உலகத்தையும் மறைத்தவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களின் நன்மையில் இதயப்பூர்வமான ஆர்வம் கொண்டிருந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(இந்த ஸ்லோகம் மன்மதநாததத்தரின் பதிப்பில் சுலோகம் எண் 171-ஆக இருக்கிறது)
எப்போது மத்ஸ்யத்தின் {மத்ஸ்ய நாட்டின்} மன்னன் {விராடன்}, நல்லொழுக்கம் கொண்ட தன் மகள் உத்தரையை, அர்ஜுனனுக்குக் கொடுக்க முன்வந்தான் என்றும், அர்ஜுனனோ அவளை {உத்தரையைத்} தன் மகனுக்காக {அபிமன்யுவிற்காக} ஏற்றான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(169)
எப்போது யுதிஷ்டிரன், பகடையில் வீழ்த்தப்பட்டும், செல்வத்தை இழந்தும், நாடு கடத்தப்பட்டும், தன் தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்டும் கூட, ஏழு அக்ஷௌஹிணிகள் கொண்ட ஒரு படையைத் திரட்டினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(170)
எப்போது நாரதர், கிருஷ்ணனும், அர்ஜுனனுமாக இருப்போர் நரனும் நாராயணனுமாவர் என்றும், பிரம்மலோகத்தில் அவர்கள் ஒன்றாக இருந்ததைத் தாம் கண்டதாக அறிவித்ததையும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(172)
எப்போது கிருஷ்ணன், குருக்களிடம் {கௌரவர்களிடம்} மனிதகுலத்தின் நன்மைக்காக வந்து, அமைதியை ஏற்படுத்த விரும்பினான் என்றும், {ஆனால்} தான் வந்த நோக்கத்தை அடைய முடியாமல் திரும்பினான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(173)
எப்போது கர்ணனும், துரியோதனனும் கிருஷ்ணனைச் சிறைபிடிக்கத் தீர்மானித்தபோது, அவன் {கிருஷ்ணன்} மொத்த அண்டத்தையும் தன்னில் வெளிப்படுத்தினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(174)
எப்போது கிருஷ்ணன் புறப்படும் நேரத்தில், சோகத்தால் நிறைந்து, அவனது தேரின் அருகே நின்ற பிருதை (குந்தி), அவனால் {கிருஷ்ணனால்} ஆறுதலளிக்கப்பட்டாள் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(175)
எப்போது வாசுதேவன், சந்தனுவின் மகனான பீஷ்மர் ஆகியோர் பாண்டவர்களின் ஆலோசகர்களாக் இருந்தார்கள் என்றும், பரத்வாஜரின் மகனான துரோணர் அவர்களுக்கு ஆசி வழங்கினார் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(176)
எப்போது கர்ணன் பீஷ்மரிடம், "நீர் போரிடும் வரை நான் போரிட மாட்டேன்" என்று சொல்லிப் படையை விட்டு சென்றுவிட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(177)
எப்போது, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், அளவிலா ஆற்றலைக் கொண்ட காண்டீவ வில்லும் என இம்மூன்று பயங்கர சக்திகளும் ஒன்றாகச் சேர்ந்தன என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(178)
எப்போது அர்ஜுனன், குற்றவுணர்வுக்கு ஆட்பட்டுர தன் தேரில் மூழ்கிப் போக இருந்த {அழுதுகொண்டிருந்த} சமயத்தில், கிருஷ்ணன் அவனுக்கு உலகங்கள் அனைத்தையும் தன் உடலுக்குள் காட்டினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(179)
எப்போது எதிரிகளைத் துணையற்றவர்களாகச் செய்யும் பீஷ்மர், போர்க்களத்தில் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் தேர்வீரர்கள் கொன்றும், குறிப்பிட்டோரில் (பாண்டவர்களில்) ஒருவரையேனும் கொல்லவில்லை என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(180)
எப்போது கங்கையின் நீதிமிக்க மகனான பீஷ்மர், போர்க்களத்தில் தம்மைக் கொல்லும் வழிகளைக் குறிப்பிட்டார் என்றும், மேலும் அது {பீஷ்மரின் அழிவு} மகிழ்ச்சிநிறைந்த பாண்டவர்களால் நிறைவேற்றப்பட்டது என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(181)
எப்போது அர்ஜுனன் தன் தேருக்கு முன்னணியில் சிகண்டியை நிறுத்திக் கொண்டு, எல்லையில்லா வீரம் கொண்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவருமான பீஷ்மரைக் காயப்படுத்தினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(182)
எப்போது வயது முதிர்ந்த வீரரான பீஷ்மர், சோமகக் குலத்தை எண்ணிக்கையில் ஒரு சிலராகக் குறைத்தும், பல்வேறு காயங்களால் வெற்றிகொள்ளப்பட்டுக் கணைகளின் படுக்கையில் கிடந்தார் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(183)
எப்போது தண்ணீருக்கான தாகத்துடன் தரையில் கிடந்த பீஷ்மர், அர்ஜுனனை வேண்டிக்கொண்டதும், தரையைத் துளைத்து அவரது தாகத்தை அவன் {அர்ஜுனன்} தணித்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(184)
எப்போது குந்தி மகன்களின் {பாண்டவர்களின்} வெற்றிக்காக இந்திரன், சூரியனுடன் மற்றும் வாயு ஆகியோர் கூட்டணியாக ஒருங்கிணைந்தனரோ, ஊனுண்ணும் விலங்குகள் (அவர்களது {மேற்கண்ட மூன்று தேவர்களின்} மங்கலமற்ற இருப்பால்) நம்மை {சகுனங்களால்} அச்சுறுத்தினவோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(185)
எப்போது அற்புதப் போர்வீரரான துரோணர், களத்தில் நடந்த போரில் பல்வேறு வழிமுறைகளை வெளிப்படுத்தியும், பாண்டவர்களில் மேன்மையானவர்கள் {முக்கியமானவர்கள்} எவரையும் கொல்லமுடியவில்லையோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(186)
எப்போது நமது படையைச் சேர்ந்தவர்களும், அர்ஜுனனை வீழ்த்துவதற்காக நியமிக்கப்பட்டவர்களும், மஹாரதர்களுமான சம்சப்தகர்கள் அனைவரும், அர்ஜுனனாலேயே கொல்லப்பட்டனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(187)
எப்போது பிறரால் ஊடுருவப்பட முடியாதவையும், நன்கு ஆயுதம் தரித்த பரத்வாஜராலேயே {துரோணராலேயே} காக்கப்பட்டவையுமான நமது படைகளின் நிலைகளைச் சுபத்திரையின் துணிச்சல்மிக்க மகன் {அபிமன்யு}, தனியொருவனாகத் தாக்கி அதனுள் நுழைந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(188)
எப்போது அர்ஜுனனை வெற்றிக் கொள்ள முடியாத நமது மஹாரதர்கள், களிப்பான முகங்களுடன் சிறுவன் அபிமன்யுவால் சூழப்பட்டு மொத்தமாகக் கொல்லப்பட்டனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(189)
எப்போது குருட்டுக் கௌரவர்கள், அபிமன்யுவைக் கொன்றுவிட்டு மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர் என்றும், அதன்பேரில் கோபமடைந்த அர்ஜுனன், சைந்தவனை {ஜெயத்ரதனைச்} சுட்டும் வகையில் கொண்டாடப்படும் தன்னுரையைப் பேசினான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(190)
எப்போது அர்ஜுனன் சைந்தவனை {ஜெயத்ரதனைக்} கொல்ல சபதம் செய்து, தன் எதிரிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தனது அந்தச் சபதத்தை நிறைவேற்றினான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(191)
எப்போது அர்ஜுனனுடைய குதிரைகள் களைப்படைந்ததும், வாசுதேவன் {கிருஷ்ணன்} அவற்றை விடுவித்து, நீரருந்தச் செய்து, மீண்டும் கொண்டு வந்து அவற்றுக்குச் சேணம் பூட்டி, முன்பு போலவே வழிகாட்டத் தொடங்கினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(192)
எப்போது குதிரைகள் களைப்படைந்ததும், தன் தேரிலேயே நின்ற அர்ஜுனன், தன்னைத் தாக்கியோர் அனைவரையும் தடுத்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(193)
எப்போது விருஷ்ணி குலத்தின் யுயுதானன் {சாத்யகி}, துரோணரின் படையைக் குழப்பத்தில் ஆழ்த்தி, யானைகளின் முன்னிலையிலும் தாங்க முடியாத ஆற்றலை வெளிப்படுத்தி, கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் இருந்த இடத்திற்குச் சென்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(194)
எப்போது கர்ணன், பீமனைத் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தும், தன் வில்லின் முனையால் அவனை இழுத்தும், அவமானப்படுத்தும் வகையில் மட்டும் பேசிவிட்டு, அவனைத் தப்பிச் செல்ல அனுமதித்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(195)
எப்போது துரோணர், கிருதவர்மன், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ரத்தின் வீர மன்னன் (சல்லியன்) ஆகியோர் சைந்தவன் {ஜெயத்ரதன்} கொல்லப்படுவதைப் பொறுத்தார்கள் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(196)
எப்போது இந்திரனால் (கர்ணனுக்குக்) கொடுக்கப்பட தெய்வீக சக்தியை {ஈட்டி போன்ற ஆயுதத்தை}, மாதவன் {கிருஷ்ணன்} தனது தீயத் திட்டங்களால், அச்சந்தரும் முகத்தோற்றம் கொண்ட ராட்சசன் கடோத்கசனின் மீது ஏவச்செய்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(197)
எப்போது கர்ணனுக்கும், கடோத்கசனுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில், போரில் அர்ஜுனனை நிச்சயம் கொன்றிருக்கக்கூடிய அந்தச் சக்தியை {ஈட்டி போன்ற ஆயுதத்தைக்} கடோத்கசன் மீது கர்ணன் ஏவினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(198)
எப்போது திருஷ்டத்யும்னன், இறக்கத் தீர்மானித்த துரோணர், தமது தேரில் தனியாக இருந்த போது, போர் விதிகளை மீறிக் கொன்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(199)
எப்போது மாத்ரியின் மகனான நகுலன், மொத்தப் படையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே துரோணர் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} தனிப்போரில் ஈடுபட்டு, அவனுக்கு இணையாகத் தன்னை வெளிக்காட்டி, சுற்றிலும் தன் தேரில் வட்டமாகச் சுழன்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(200)
எப்போது துரோணர் இறந்ததன் பேரில், அவரது மகன் {அஸ்வத்தாமன்} நாராயணம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்தியும், பாண்டவர்களின் அழிவை அடையத் தவறினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(201)
எப்போது பீமசேனன், எவராலும் தடுக்கப்பட முடியாதபடி போர்க்களத்தில், தன் தம்பியான துச்சாசனனின் குருதியைக் குடித்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(202)
எப்போது எல்லையற்ற துணிச்சல் கொண்டவனும், போரில் வெல்லப்பட முடியாதவனுமான கர்ணன், தேவர்களாலேயே புரிந்து கொள்ள முடியாததும், சகோதரர்களுக்கிடையில் நடந்ததுமான அந்தப் போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(203)
எப்போது நீதிமானான யுதிஷ்டிரன், வீரனான துரோணர் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, துச்சாசனனையும், சீற்றமிக்கக் கிருதவர்மனையும் வெற்றிக் கொண்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(204)
எப்போது துணிச்சல்மிக்கவனும், போரில் கிருஷ்ணனையே எதிர்க்கத் துணிந்தவனுமான மத்ர மன்னன் {சல்லியன்}, யுதிஷ்டிரனால் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(205)
எப்போது மாயசக்தி கொண்டவனும், விளையாட்டு {சூதாட்டம்} மற்றும் வழிவழியான பகைக்கு வேராக இருந்தவனுமான தீய சுபலன் {சகுனி}, சகாதேவனால் போரில் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(206)
எப்போது களைப்படைந்த துரியோதனன், ஒரு தடாகத்துக்குச் சென்று, அதன் நீருக்குள் புகலிடத்தை அமைத்துக் கொண்டு, தன் பலத்தையும், தேரையும் இழந்தவனாக அங்கே தனியாகக் கிடந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(207)
எப்போது பாண்டவர்கள், வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} அந்தத் தடாகத்துக்குச் சென்று, அதன் கரையில் நின்று கொண்டு, அவமதிப்புகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத என் மகனிடம் {துரியோதனனிடம்} அவமதிப்பாகப் பேசத் தொடங்கினர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(208)
எப்போது கதாயுதங்களுடன் கூடிய ஒரு மோதலில், பல்வேறு புதிய (தாக்குதல் மற்றும் தற்காத்தல்) முறைகளுடன் கூடிய சுழற்சியை வெளிக்காட்டிய அவன் {துரியோதனன்}, கிருஷ்ணனின் ஆலோசனைகளின்படி நியாயமற்ற வழியில் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(209)
எப்போது துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்}, பிறரும் {கிருபரும், கிருதவர்மனும்}, உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலர்களையும், திரௌபதியின் மகன்களையும் கொன்று, பயங்கரமானதும், இகழ்வைத் தருவதுமான {அருவருப்பானதுமான} ஒரு செயலைச் செய்தனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(210)
எப்போது பீமசேனனால் பின்தொடரப்பட்ட அஸ்வத்தாமன், ஐஷீகம் என்றழைக்கப்பட்ட முதன்மையான ஆயுதத்தை வெளிப்படுத்தி, (உத்தரையின்) கருவறையில் இருந்த கருவை {பரீக்ஷித்தைக்} காயப்படுத்தினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(211)
எப்போது (அஸ்வத்தாமனால் வெளியிடப்பட்ட) பிரம்மசிரஸ் ஆயுதத்தை, "சஷ்டி" என்ற சொல்லைச் சொல்லி மற்றொரு ஆயுதத்தால் அர்ஜுனன் தடுத்தான் என்றும், அஸ்வத்தாமனின் தலையில் ஆபரணம் போல இருக்கும் குருப்பு ஒன்றை அவன் {அஸ்வத்தாமன்} கொடுக்க வேண்டியிருந்தது என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(212)
எப்போது விராடன் மகளின் {உத்தரையின்} கருவறையில் இருந்த கருவானது, அஸ்வத்தாமனின் வலிமைமிக்க ஆயுதத்தால் காயப்படுத்தப்பட்டது என்றும், துவைபாயனரும் {வியாசரும்}, கிருஷ்ணனும் அவனுக்கு {அஸ்வத்தாமனுக்குச்} சாபமளித்தனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(213)
ஐயோ! பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பெற்றோர், சகோதரர்கள் மற்றும் சொந்தங்களை இழந்தவளான காந்தாரியின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. பாண்டவர்களால் செய்யப்பட்டப் பணி கடினமானதாக இருக்கிறது; எந்த எதிரியுமற்ற ஓர் அரசானது அவர்களால் மீட்கப்பட்டிருக்கிறது.(214)
ஐயோ! போரானது பத்து பேரை மட்டுமே உயிருடன் விட்டு வைத்துள்ளது என்று நான் கேட்டேன்: நம் தரப்பில் மூவரும், பாண்டவர்களின் தரப்பில் எழுவரும், அந்தப் பயங்கரப் போரில் பதினெட்டு அக்ஷௌஹிணிகளின் க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.(215) என்னைச் சுற்றிலும் இருளாக இருக்கிறது, பொருத்தமான மயக்கம் என்னைத் தாக்குகிறது: ஓ சூதா, சுயநினைவு என்னைவிட்டு அகல்கிறது, என் மனமும் சஞ்சலமடைகிறது" என்றான் {திருதராஷ்டிரன்}".(216)
சௌதி சொன்னார், "இவ்வார்த்தைகளால் தன் விதியை நொந்து கொண்ட திருதராஷ்டிரன், கடும் வேதனையை அடைந்து, சிறிது நேரத்திற்கு உணர்வை இழந்தவனானான்; எனினும் புத்துயிரடைந்த அவன், பின் வரும் வார்த்தைகளை சஞ்சயனிடம் பேசினான்.(217)
{திருதராஷ்டிரன் சஞ்சயனிடம்}, "இவ்வாறு நடந்த பிறகு, ஓ! சஞ்சயா, தாமதமில்லாமல் என் உயிருக்கு ஒரு முடிவைக் கொடுக்க விரும்புகிறேன்; இனியும் அதைப் பேணிக் காப்பதற்கான சிறு பயன் ஒன்றையும் நான் காணவில்லை" என்றான்".(218)
சௌதி சொன்னார், "அறிவாளியான கவல்கணன் மகன் (சஞ்சயன்), கலங்கிப் போயிருந்த பூமியின் தலைவன் {திருதராஷ்டிரன்}, இவ்வாறு பேசிக்கொண்டும், வருந்திப்புலம்பிக் கொண்டும், பாம்பொன்றைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டும், மீண்டும் மீண்டும் மயங்கிக் கொண்டும் இருந்தபோது, ஆழ்ந்த பொருள் கொண்ட இவ்வார்த்தைகளில் {அவனிடம்} பேசினான்.(219)
{சஞ்சயன்}, ஓ! ராஜாவே {திருதராஷ்டிரரே}, பரந்துபட்ட முயற்சிகளைச் செய்த பெரும் பலமிக்க மனிதர்களைக் குறித்து வியாசரும், ஞானியான நாரதரும் பேசியதை நீர் கேட்டீர்;(220) தகுந்த குணங்களுடன் பிரகாசித்தவர்களும், தெய்வீக ஆயுதங்களின் அறிவியலை நன்கறிந்தவர்களும், மகிமையில் இந்திரனின் சின்னங்களுக்கு ஒப்பானவர்களும், பெரும் அரச குடும்பங்களில் பிறந்தவர்களுமான மனிதர்கள்;(221) நீதியால் உலகை வென்று, தகுந்த காணிக்கைகளை (பிராமணர்களுக்கு) அளித்துப் பெரும் வேள்வியைச் செய்தவர்களான அவர்கள், இவ்வுலகில் பெரும் புகழை அடைந்தும், இறுதியில் காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கினர் {இறக்கவே செய்தனர்}.(222,223)
வீரமான மஹாரதனான {வலிமைமிக்கத் தேர்வீரனான} சைப்யன், வெற்றியாளர்களுக்கு மத்தியில் பெரியவனான சிருஞ்சயன், சுஹோத்ரன், ரந்திதேவன், பெரும்புகழைக் கொண்ட {உசிக்கின் மகனாகிய} கக்ஷீவான், பாஹ்லீகன், தமனன், {சைத்யன்,} சர்யாதி, அஜிதன், நளன், எதிரிகளை அழிப்பவரான விஸ்வமித்திரர், பெரும் பலம் கொண்டவனான அம்பரீஷன், மருத்தன், மனு, இக்ஷ்வாகு, கயன், பரதன், தசரதன் மகனான இராமன்,சசவிந்து {சசிபிந்து}, பகீரதன், பெரும் பேறு பெற்ற கிருதவீரியன், ஜனமேஜயன், வேள்விகளைச் செய்வதற்குத் தேவர்களாலேயே துணைபுரியப்பட்டவனும், வசிப்பிடங்கள் மற்றும் வசியாயிடங்கள் ஆகியவற்றுடன் கூடிய பூமாதேவியின் மேனி எங்கும் வேள்விப்பீடங்கள் மற்றும் வேள்வி மரங்கள் {யூபஸ்தம்பம்} ஆகியவற்றால் குறிப்பிட்டவனும், நல்ல செயல்களைச் செய்தவனுமான யயாதி ஆகியோர் அப்படிப்பட்டோரே.(224,227) முன்பொரு சமயம், தன் பிள்ளைகளின் இழப்பால் மிகவும் துன்பப்பட்ட சைப்யனுக்கு இந்த இருபத்துநான்கு, ராஜாக்களும் தெய்வீக முனிவரான நாரதரால் குறிப்பிடப்பட்டனர்.(228)
இவர்களைத் தவிர, இன்னும் பலம் நிறைந்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், உன்னத மனம் கொண்டவர்களும், ஒவ்வொரு தகுந்த குணத்தாலும் ஒளிர்ந்தவர்களுமான வேறு ராஜாக்களும் இவர்களுக்கு முன்னே சென்றிருக்கின்றனர் {இறந்திருக்கின்றனர்}.(229) அவர்கள் பூரு, குரு, யது, சூரன், பெரும் புகழைக் கொண்ட விஸ்வகஸ்வன்; அணுஹன், யுவனாஸ்வன், ககுத்ஸ்தன், விக்ரமி, ரகு; விஜயன், விதிஹோத்ன், அங்கன், பவன், சுவேதன், பிருபத்குரு {பிருஹத்குரு}; உசீனரன், சத-ரதன், கங்கன், துலிதுஹன், துருமன்; தம்போத்பவன், பரன், வேனன், ஸகரன், ஸங்கிருதி, நிமி; அஜயன், பரசு, புண்டரன், சம்பு, புனிதமான தேவ-விரதன்; தேவாஹுயன் {தேவாஹ்வயன்}, {சுப்ரதிமன்,} சுப்ரதீகன், பிருஹத்-ரதன்; மஹாத்சாகன், வினிதாத்மன், சுக்கிரது, நிஷாதர்களின் மன்னன் நளன்; சத்தியவிரதன், சாந்தபயன், சுமித்திரன், தலைவன் சுபலன்; ஜானுஜங்கன், அனரண்யன், அர்க்கன், பிரியபிருத்யன், சுசி-விரதன், பலபந்து, நிராமர்த்தன், கேதுசிருங்கன், பிருஹத்பலன்; திருஷ்டகேது, பிருஹத்கேது, திருப்தகேது, நிராமயன்; அவிக்ஷித், சபலன், தூர்த்தன், கிருதபந்து, திருதே-சுத்தி; மஹாபுராணனன் சம்பவ்யன், பிரத்யங்கன், பரஹன், சுருதி ஆவர்.(230-236)
ஓ! தலைவா, இவர்களும், இன்னும் வேறு ராஜாக்களும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும், பத்து லட்சம் கணக்கிலும், பெரும் சக்தியும், அறிவும் வாய்ந்த இளவரசர்களும், பெரும் இன்பங்களை விட்டுத் தங்கள் {உமது} மகன்களைப் போலவே மரணத்தைச் சந்தித்தனர்.(237,238) அவர்களது நல்ல செயல்கள், வீரம், ஈகை, மகிமை, நம்பிக்கை, உண்மை, தூய்மை, எளிமை மற்றும் கருணை ஆகியவை, பெரும் கல்விமான்களான புனிதமான புலவர்களால் உலகின் முற்காலப் பதிவுகளில் வெளியிடப்பட்டன. உன்னதமான ஒவ்வொரு நற்குணத்துடனும் கூடிய அவர்களும் தங்கள் உயிரைவிட்டனர்.(239)
உமது மகன்கள், பேரார்வம், பேராசை மற்றும் தீய மனநிலை ஆகியவற்றால் தூண்டப்பட்ட தீயவர்களாகவே இருந்தனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் சாத்திரங்களை அறிந்தவராகவும், நுண்ணறிவும், ஞானமும் கொண்டவராக இருக்கிறீர்; சாத்திரங்களால் வழிநடத்தப்படுவதைத் தங்கள் அறிவாகக் கொண்டோர், தீயூழில் ஒருபோதும் மூழ்குவதில்லை.(240,241) ஓ! இளவரசரே {திருதராஷ்டிரரே}, விதியின் மென்மையையும், வன்மையையும் நீர் அறிந்தவராக இருக்கிறீர்; எனவே உமது பிள்ளைகளைப் பாதுகாப்பதைக் குறித்துக் கவலை கொள்வது உமக்குத் தகாது; மேலும் நடக்க வேண்டியவற்றுக்காக வருந்தாமலிருப்பதே உமக்குத் தகும்:(242) தன் ஞானத்தைக் கொண்டு விதியின் கட்டளைகளை எவரால் திசைதிருப்ப முடியும்? வருங்காலத் தேவைக்காக ஒருவனுக்காகக் குறிக்கப்பட்ட பாதையில் இருந்து எவனாலும் விலக முடியாது.(243)
இருப்பு மற்றும் இல்லாமை, இன்பம் மற்றும் துன்பம் ஆகிய அனைத்தும் காலத்தையே தங்கள் வேர்களாகக் கொண்டிருக்கின்றன.(244) காலமே அனைத்துப் பொருள்களையும் படைக்கிறது; காலமே அனைத்து உயிரினங்களையும் அழிக்கிறது. காலமே உயிரினங்களை எரிக்கிறது, மேலும் காலமே அந்நெருப்பை அணைக்கவும் செய்கிறது.(245) மூன்று உலகிலும் நன்மை மற்றும் தீமையின் அனைத்து நிலைகளும் காலத்தாலேயே உண்டாக்கப்படுகின்றன. காலம் அனைத்துப் பொருள்களையும் வெட்டிக் குறுக்குகிறது, மேலும் புதியனவற்றையும் உண்டாக்குகிறது.(246) அனைத்துப் பொருட்களும் உறங்கும்போது காலம் மட்டுமே விழித்திருக்கிறது. காலமே எந்தப் பாதிப்புமின்றி அனைத்துப் பொருள்களையும் கடந்து செல்கிறது.(247) நீர் அறிந்தது போலவே, கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் அனைத்துப் பொருள்களும், நிகழ்கணத்தில் இருப்பவை யாவையும் காலத்தின் குழந்தைகளே என்பதை அறிந்து கொண்டு, உமது விவேகத்தை இழக்காமல் இருப்பதே உமக்குத் தகும்" என்றான் {சஞ்சயன்}".(248)
சௌதி சொன்னார், "கவல்கணன் மகன் {சஞ்சயன்}, தன் மகன்களுக்காகத் துயரில் மூழ்கியிருந்த அரசன் திருதராஷ்டிரனுக்கு இம்முறையில் ஆறுதலை அளித்து, அவனது {திருதராஷ்டிரனின்} மன அமைதியை மீட்டான்.(249)
துவைபாயனர் {வியாசர்} இந்த உண்மைகளையே தமது உட்பொருளாக எடுத்துக் கொண்டு, இவ்வுலகிற்காகக் கல்விமான்களாலும், புனிதமான புலவர்களாலும் இயற்றப்பட்ட புராணங்களில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு புனிதமான உபநிஷத்தை {பகவத்கீதையைத்} இயற்றினார்[9].(250)
பாரதம் குறித்த ஆய்வானது ஒரு பக்தி {பற்றார்வத்தின்} செயல்பாடாகும் {பாரதம் ஓதுவது புண்ணியமாகும்}. எவன் நம்பிக்கையுடன் {இவற்றில்} ஓர் அடியையேனும் படிப்பானோ அவனது பாவங்கள் முற்றிலுமாக நீக்கப்படுகின்றன {அழிக்கப்படுகின்றன}.(251) தேவர்கள், தேவ முனிவர்கள், நல்ல செயல்களைச் செய்யும் களங்கமற்ற பிரம்மமுனிவர்கள் ஆகியோர் இதற்குள் பேசப்பட்டிருக்கின்றனர்; அதே போல யக்ஷர்களும், பெரும் உரகர்களும் (நாகர்களும்) பேசப்பட்டிருக்கின்றனர்.(252) ஆறு குணங்களைக் கொண்ட அழிவற்ற வாசுதேவன் {கிருஷ்ணன்} இதற்குள் விளக்கப்பட்டிருக்கிறான். அவனே {கிருஷ்ணனே} உண்மையாளன், நீதிமான், தூயன், புனிதன், அழிவற்ற பிரம்மம், உண்மையான நிலையான ஒளி, அவனுடைய தெய்வீகச் செயல்களையே அறிவாளிகளும், கல்விமான்களும் மீண்டும் உரைக்கின்றனர்;(253,254) படைப்புக் கொள்கைகளையும், முன்னேற்றத்தையும், பிறவி, மரணம், மறுபிறவி ஆகியவற்றையும், இருப்பு மற்றும் இல்லாமையையும் கொண்ட அண்டம் அவனிலிருந்து {கிருஷ்ணனிலிருந்தே} உண்டானது.(255) இதற்குள் அத்யாத்மம் என்று அழைக்கப்படும் அதுவே (இயற்கையின் மேற்பார்வையிடும் தன்மையே) {கிருஷ்ணனே} ஐம்பூதங்களின் பண்புகளைப் பகிர்ந்தளிக்கிறது {பகிர்ந்தளிக்கிறான்} என்று சொல்லப்பட்டிருக்கிறது. "வடிவற்றது" என்பது போன்ற அடைமொழிகளால் “எவன் புருஷன்?” என்பது விளக்கப்பட்டிருக்கிறது;(256) பொதுவிதியில் இருந்து விலக்களிக்கப்பட்ட யதிகளில் முதன்மையானோரும், தியானம் மற்றும் தவம் செய்வோரும், கண்ணாடியில் பிம்பத்தைப் பார்ப்பது போல, தங்கள் இதயங்களில் வசிப்பதாக அதையே {அவனையே} காண்பார்கள்.(257)
நம்பிக்கை கொண்டவனும், பக்தியில் {பற்றார்வத்தில்} அர்ப்பணிப்பு கொண்டவனும், அறப்பயிற்சியில் நிலைத்திருப்பவனுமான ஒரு மனிதன், இந்தப் பகுதியைப் படிப்பதால், பாவத்திலிருந்து விடுபடுகிறான்.(258)
அறிமுகம் {அனுக்கிரமணிக அத்யாயம்} என்று அழைக்கப்படும் பாரதத்தின் இந்தப் பகுதியைத் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து கேட்கும் நம்பிக்கையாளன் இடர்பாடுகளுக்குள் வீழமாட்டான்.(259) அறிமுகத்தின் எந்தப் பகுதியையாவது இரு சந்திப்பொழுதுகளில் மீண்டும் உரைக்கும் ஒரு மனிதன், அந்தச் செயலின் போது, பகல், அல்லது இரவில் ஈர்க்கப்பட்ட பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.(260) பாரதத்தின் உடலான இந்தப் பகுதி உண்மையானதும், அமுதமானதுமாகும். தயிரில் உள்ள வெண்ணையைப் போலவும், இருகால்களைக் கொண்டோரில் பிராமணர்களைப் போலவும்,(261) வேதங்களில் ஆரண்யகத்தைப் போலவும், மருந்துகளில் அமுதத்தைப் போலவும்; நீர்க்கொள்ளிடங்களில் கடலைப் போலவும், நான்கு கால் கொண்டவற்றில் பசுவைப் போலவும்;(262) (குறிப்பிடப்பட்ட பொருள்களின் மத்தியில்) இவற்றைப் போலவே வரலாறுகளுக்கு மத்தியில் பாரதமும் சொல்லப்படுகிறது. ஒரு சிராத்தத்தின் போது, இவற்றில் ஓர் அடியையாவது பிராமணர்களுக்கு ஒருவன் உரைக்கச் செய்வானாயின், தன் மூதாதையருக்கு அவன் அளிக்கும் உணவும், நீரும் வற்றாததாகின்றன {அழிவில்லாதவை ஆகின்றன}.(263)
வரலாறு, புராணங்கள் ஆகியவற்றின் உதவியோடு வேதமானது விளக்கப்படலாம்;(264) ஆனால் வேதமோ குறைந்த அறிவைக் கொண்டோனின் விளக்கத்திற்கு {அவன் தன்னை மோசம் செய்வான் என்று} அஞ்சுகிறது. வியாசரின் இந்த வேதத்தை {இந்த மஹாபாரதத்தைப்} பிறருக்கு உரைக்கும் கல்வியாளன் பயனையே அறுவடை செய்கிறான்.(265) கருவைக் கொன்ற பாவத்தையோ, அதற்கு இணையானதையோ கூட இஃது அழித்துவிடும் என்பதில் ஐயமில்லை.(266) சந்திரனின் இந்தப் புனித அதிகாரத்தை[10]{இந்த அனுக்கிரமணிக அத்யாயத்தைப்} படிக்கும் ஒருவன், மொத்த பாரதத்தையுமே படித்தவனாவான் என நான் நினைக்கிறேன். எந்த மனிதன் மதிப்புடன் இந்தப் புனித படைப்பைத் தினமும் கேட்பானோ,(267) அவன் நீண்ட வாழ்வையும், புகழையும் அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்கிறான். முந்தைய நாட்களில், நான்கு வேதங்களை ஒரு பக்கத்திலும், பாரதத்தை மறுபக்கத்திலும் நிறுத்திப் பார்க்கும் காரியத்திற்காகக் கூடிய தேவர்கள், அவற்றைத் தராசில் நிறுத்தினர். பின்னதே {பாரதமே}, புதிர்களுடன் {உபநிஷத்துகளுடன்} கூடிய நான்குவேதங்களைவிடக் கனமாக இருந்ததால்,(268,269) அந்தக் காலத்தில் இருந்து அது மஹாபாரதம் (பெரும் பாரதம்) என்று இவ்வுலகில் அழைக்கப்படுகிறது. பொருள் மற்றும் உள்ளடக்கத்தின் கனம் ஆகிய இரண்டிலும் உயர்ந்த மதிப்பைக் கொண்டிருப்பதால்,(270) அது மஹாபாரதம் என்று பெயரிடப்பட்டது. எவன் அதன் பொருளை அறிவானோ, அவன் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் காக்கப்படுகிறான்.(271) தவம் பாவமற்றது, கல்வி தீங்கற்றது, இனங்கள் அனைத்திற்கும் பரிந்துரைக்கப்படும் வேதங்களின் கட்டளைகள் தீங்கற்றவை, உழைப்பால் அடையப்படும் செல்வம் தீங்கற்றது; ஆனால், அவற்றின் நடைமுறைகளில் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, அவை தீமையின் ஊற்றுக்கண்களாகின்றன {பாவத்தைத் தருகின்றன}" {என்றார் சௌதி}[11].(272)
அதன் பிறகு அவர், அறுபது நூறாயிரம் (அறுபது லட்சம் 60,00,000} செய்யுள்களுடன் {கிரந்தஸங்கியைகளுடன்} கூடிய மற்றொரு தொகுப்பைச் செய்தார்.
அவற்றில், முப்பது நூறாயிரத்தை {முப்பது லட்சத்தை 30,00,000} தேவர்களின் உலகம் அறிந்திருக்கிறது;(104)
பதினைந்து நூறாயிரத்தை {பதினைந்து லட்சத்தை 15,00,000} பித்ருக்களின் உலகம் அறிந்திருக்கிறது;
பதினான்கு நூறாயிரம் {பதினான்கு லட்சம் 14,00,000} கந்தர்வர்களுக்கு மத்தியில் அறியப்பட்டிருக்கிறது,
அதேவேளையில் ஒரு நூறூயிரமானது {ஒரு லட்சமானது 1,00,000} இந்த மனிதகுல உலகால் அறியப்பட்டிருக்கிறது.(105)
தேவர்களுக்கு அவற்றை {மஹாபாரதச் சுலோகங்களை} நாரதர் உரைத்தார், பித்ருக்களுக்குத் தேவலரும், கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களுக்குச் சுகரும்வெளியிட்டனர்;(106)
நீதியுடன் கூடிய கொள்கைகள் கொண்டவரும், வேதங்களை அறிந்தர் அனைவரிலும் முதன்மையானவருமான வியாசரின் சீடர்களில் ஒருவரான வைசம்பாயனரால்இவ்வுலகில் அவை உரைக்கப்பட்டன. சௌதியாகிய நானும், அந்த ஒரு நூறாயிரம் {ஒரு லட்சம் 1,00,000} செய்யுள்களையும் மீண்டும் சொல்லப் போகிறேன் என்பதை அறிவீராக.(107)
[5] இந்த 102ம் ஸ்லோகத்திற்குப் பிறகு, 103ம் ஸ்லோகத்திலிருந்து 272ம் ஸ்லோகம் வரையில் உள்ள 170 ஸ்லோகங்களுக்குள்ளாகவே இங்கே குறிப்பிடப்படும் நூற்றைம்பது {150} சுலோகங்களைக் கொண்ட அனுக்கிரமாணிகம் என்ற மஹாபாரதச் சுருக்கம் இருக்க வேண்டும்.
துரியோதனன், ஆசையால் உண்டாக்கப்பட்ட ஒரு பெரும் மரமாவான், கர்ணனே அதன் தண்டாவான்; சகுனி அதன் கிளைகளாவான்; துச்சாசனனே அதன் கனியும், மலர்களுமாவான்; பலவீனனான திருதராஷ்டிரனே அதன் வேராவான்.(108) {இந்த ஸ்லோகம் கங்குலியின் பதிப்பில் இல்லை}
யுதிஷ்டிரன் அறம் மற்றும் நல்லொழுக்கம் கொண்ட ஒரு பெரும் மரமாவான்,அர்ஜுனன் அதன் தண்டாவான், பீமசேனன் அதன் கிளைகளாவான், மாத்ரியின் மைந்தர்கள் இருவரும் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்} அதில் முழுதாக வளர்ந்த கனியும் மலர்களுமாவர். கிருஷ்ணன், பிரம்மன் மற்றும் பிராமணர்கள் அந்த மரத்தின் வேராவர்.(109)
பாண்டு தன் விவேகத்தாலும், ஆற்றலாலும் பல நாடுகளை அடக்கி, ஒரு விளையாட்டு வீரனாக, முனிவர்களுடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட காட்டில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட போது, தன் இணையோடு புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மானைக் கொன்றதால், மிகக் கடுமையானதும், தன் குடும்பத்து இளவரசர்கள் {பாண்டவர்கள்} வாழ்ந்தவரை, அவர்களது நடத்தைக்கு எச்சரிக்கையாக அமைந்ததுமான தீப்பேறு ஒன்றை அடைந்தான்.(110,111) அவர்களது {அந்த இளவரசர்களின்} தாய்மார் {குந்திமற்றும் மாத்ரி}, விதிகளை நிறைவேற்றும்பொருட்டு {பாண்டுவின் குலம் அழிந்து போகாமல் இருப்பதற்காக}, தேவர்களான தர்மன் {யமதர்மராஜன்}, வாயு, சக்ரன் {இந்திரன்}, தெய்வத்தன்மை கொண்ட அசுவினி இரட்டையர்கள் ஆகியோரைத் தங்கள் அரவணைப்புகளுக்கு மாற்றாக ஏற்றுக்கொண்டனர்[6].(112) அவர்களது வாரிசுகள் {பாண்டவர்கள்} தாய்மாரின் கவனிப்பின் கீழ், தவசிகள் சமூகத்தில், புனிதமான சோலைகள் மற்றும் அறவோருக்குச் சொந்தமான, தனிப்பட்ட, புனிதமான வசிப்பிடங்களில் வளர்ந்து வந்தபோது, தங்கள் முடிகளைத் தங்கள் தலைகளில் முடிந்து கட்டிக் கொண்டவர்களாகவும் {சடை தரித்தவர்களாகவும்}, பிரம்மச்சரிய வழக்கம் கொண்ட மாணவர்களாகவும் யாரைப் பின்தொடர்ந்து சென்றார்களோ, அந்த முனிவர்களால் அவர்கள், திருதராஷ்டிரன் மற்றும் அவனது மகன்களின் முன்னிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.(113-114) "இந்த எங்கள் சீடர்கள்" என்று சொன்ன அவர்கள் {முனிவர்கள்}, "உங்கள் மகன்களும், உங்கள் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர்; இவர்கள் பாண்டவர்களாவர்" என்றும் சொன்னார்கள். {பிறகு} இதைச் சொன்ன அந்த முனிவர்கள் மறைந்து போனார்கள்.(115)
[6] வேறொரு பதிப்பில், "பிறகு, பர்த்தாவினிடத்து அன்புள்ளவர்களாகிய குந்தி பதிவிரதாதர்மத்துக்குரிய துர்வாஸரிஷியின் மந்திரத்தையடைந்து புத்திரர்களை இச்சித்து அந்த மந்தித்தினால், தர்மதேவதை, வாயு, இந்திரன் இவர்களையழைத்தாள். குந்தி உபதேசித்த மந்திரத்தினால் மாத்திரி அசுவினி தேவர்களையழைத்தாள். பிறகு, பாண்டவர் யாவரும் குந்தி மாத்திரி இவர்களுடைய மந்திரங்களினாற் பிறந்தனர்" என்றிருக்கிறது.
அவர்கள் பாண்டுவின் மகன்களாக முனிவர்களால்} அறிமுகப்படுத்தப்பட்டதைக் கௌரவர்கள் {குருஜாங்கல நாட்டு மக்கள்} கண்ட போது, புகழ்பெற்ற {உயர்ந்த} வகுப்பைச் சார்ந்த குடிமக்கள் மிகவும் மகிழ்ச்சியாகக் கூச்சலிட்டனர்.(116) எனினும் சிலர், “அவர்கள் பாண்டுவின் மகன்கள் அல்ல” என்றனர்; சிலர் “அவர்களே {மகன்களே}” என்றனர்; மேலும் சிலரோ, அவன் {பாண்டு} இறந்து நெடுங்காலமானதைக் கண்டு, “அவர்கள் அவனது {பாண்டுவின்} வாரிசாக எவ்வாறு இருக்க முடியும்?” என்று கேட்டனர்.(117) இருப்பினும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும், "அனைத்து வகையிலும் அவர்களுக்கு நல்வரவு! தெய்வீக முன்னறிவாலேயே {காலம் நல்லதாக இருப்பதாலேயே} பாண்டுவின் குடும்பத்தை நாம் காண்கிறோம். அவர்களது வரவு நல்வரவாகவே அறிவிக்கப்பட வேண்டும்" என்ற கூக்குரல்கள் கேட்கப்பட்டன.(118) இந்த இசைவுப்பேரொலிகள் நின்றதும், சொர்க்கத்தின் அனைத்துப் புள்ளிகளிலும் {அனைத்துத் திசைகளிலும்} எதிரொலித்தவையான, கண்களுக்குப் புலப்படாத ஆவிகளின்[7]பாராட்டுகள், மிகப்பெரியனவாக இருந்தன. அங்கே இனிய நறுமணமிக்க மலர்களின் மழையும், சங்குகள் மற்றும் துந்துபிகளின் ஒலியும் இருந்தன. அந்த இளம் இளவரசர்களின் {பாண்டவர்களின்} வருகையின் போது இத்தகு ஆச்சரியங்கள் நடந்தன.(119,120) அந்தச் சந்தர்ப்பத்தில், குடிமக்கள் தங்கள் நிறைவை வெளிப்படுத்தும் வகையில், அவர்கள் அனைவரின் மகிழ்ச்சி நிறைந்த ஒலியானது, பாராட்டுகளாகப் பெருகி, சொர்க்கங்களையே {வானத்தையே} எட்டும் வகையில் மிகப் பெரியதாக இருந்தது.(121)
[7] ஆவி என்ற சொல் இங்கே பொருந்தவில்லை. வேறொரு பதிப்பில், "அந்தச் சத்தம் ஓய்ந்த பின் மறைந்திருந்த தேவதைகளுடைய பெருமுழக்கமானது எல்லாத் திசைகளிலும் எதிரொலியை உண்டாக்கிக் கொண்டு எழும்பியது" என்றிருக்கிறது.
திரௌபதி சுயம்வரத்தில் அர்ஜுனன் |
வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அறிவாலோசனைகள் {நல்ல உபாயங்கள்}, பீமசேனன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் வீரம் {சக்தி} ஆகியவற்றின் மூலம், (மகதத்தின் மன்னன்) ஜராசந்தனையும், செருக்குமிக்கச் சைத்யனையும் {சேதி நாட்டு மன்னன் சிசுபாலனையும்} கொன்று, தகுதிகள் கடந்த நிலையை அடைந்த யுதிஷ்டிரன், பொருள்கள் {அன்னம்}, காணிக்கைகள் {தக்ஷிணைகள்} ஆகியவை நிறைந்த மகத்தான ராஜசூய வேள்வியைச் செய்யும் உரிமையை அடைந்தான்.(128,129) இந்த வேள்விக்குத் துரியோதனன் வந்தான்; காணிக்கைகள், விலைமதிப்புமிக்கக் கற்கள் {முத்துக்கள்}, தங்கம் மற்றும் ரத்தினங்களையும்; பசுக்கள், மாடுகள், யானைகள், குதிரைகள் ஆகிய செல்வங்களையும்; ஆர்வத்தைத் தூண்டும் இழைமங்கள் {துணிகள்}, ஆடைகள் மற்றும் மேலாடைகளையும்; விலைமதிப்பற்ற சால்வைகள், விலங்கின் மென்மயிர் ஆடைகள், ரங்குவின் {ரங்கு என்ற மானின்} தோலாலான விரிப்புகளையும்; சுற்றிலும் சிதறிக் கிடக்கும் பாண்டவர்களின் பரந்த செல்வத்தையும் அவன் {துரியோதனன்} கண்டபோது, பொறாமையால் நிறைந்து, மிகவும் மகிழ்ச்சியற்றவனானான் {உற்சாகத்தை இழந்தவனானான்}.(130-132) தெய்வீக சபையின் பாணியில், (அசுரத்தச்சன்) மயனால்நேர்த்தியாகக் கட்டப்பட்ட சபா மண்டபத்தைக் கண்ட போது அவன் சினத்தால் எரிந்தான்.(133) அந்தக் கட்டடத்திற்குள் உள்ள குறிப்பிட்ட கட்டடக்கலை மாயங்களால் குழம்பத் தொடங்கிய போது, இழிந்த பரம்பரையைச் சேர்ந்த ஒருவனைப் போல அவன் {துரியோதனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் பீமசேனனால் ஏளனம் செய்யப்பட்டான்[8].(134)
[8] வேறொரு பதிப்பில், “அந்த ஸபையில் நாகரிகமறியாதவனைப் போல் தடுமாறி இடறி விழுந்த துரியோதனன் கிருஷ்ணனுக்கெதிரில் பீமஸேனனால் நகைக்கப்பட்டான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
பல்வேறு இன்பநுகர் பொருள்கள், பல்வேறு விலைமதிப்பற்ற பொருள்கள் ஆகிவற்றைப் பகிர்ந்தளிக்கும்போது, குறைவடைந்தவனாகவும், குருதியற்றவனாகவும், வெளிறியவனாகவும் அவனது மகன் {துரியோதனன்} மாறிக்கொண்டிருப்பதாகத் திருதராஷ்டிரனிடம் தெரிவிக்கப்பட்டது.(135) சில காலம் கழித்து, அந்தத் திருதராஷ்டிரன், தன் மகன் {துரியோதனன்} மீது கொண்ட பாசத்தின் காரணமாக, (பாண்டவர்களுடன்) அவர்கள் {கௌரவர்கள்} பகடை விளையாட தன் ஒப்புதலை அளித்தான். இதை அறியவந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} மிகவும் கோபமடைந்தான்.(136) இதனால் நிறைவையிழந்த {அதிருப்தியடைந்த} அவன், சச்சரவுகளைத் தவிர்க்க ஏதும் செய்யாமல், அந்த விளையாட்டையும், அதனால் எழுந்தவையும், நியாயப்படுத்தப்பட முடியாதவையும், பயங்கரமானவையுமான பரிமாற்றங்களைப் புறக்கணித்தான்;(137) விதுரன், பீஷ்மர், துரோணர், சரத்வானின் மகனான கிருபர் ஆகியோர் இருந்தாலும், அதை {அந்த விளையாட்டைத்} தொடர்ந்து வந்த பயங்கரப் போரில் அவன் {கிருஷ்ணன்} க்ஷத்திரியர்களைத் தங்களுக்குள் ஒருவரையொருவர் கொல்லச் செய்தான்.(138)
திருதராஷ்டிரன் - சஞ்சயன் |
சிந்தையற்ற {புத்தியில்லாத} துரியோதனனிடம் எப்போதும் வளர்ந்த மடமையின் பின்னால் சென்று நானும் மூடனானேன். பாண்டு மகன்களின் பெரும் செல்வங்களைக் காணச் சென்ற என் மகன் {துரியோதனன்}, மண்டபத்தில் {மண்டபத்தின் படிகளில்} ஏறிச் சென்ற போது, அவனது தடுமாற்றத்திற்காக ஏளனம் செய்யப்பட்டான்.(144)அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவனும், களத்தில் பாண்டுவின் மகன்களை வெற்றிகொள்ள இயலாதவனுமான அவன் {துரியோதனன்}, தானே படைவீரனாக இருப்பினும், தன் சொந்த முயற்சியால் நற்பேற்றை அடைய விரும்பாமல், காந்தாரத்தின் மன்னனுடைய {சகுனியுடைய} உதவியோடு, பகடையெனும் ஒரு நியாயமற்ற விளையாட்டை நடத்தினான்.(145,146) ஓ! சஞ்சயா, அதன்பேரில் நடந்தவையும், என் அறிவுக்கு எட்டியவையுமான அனைத்தையும் கேட்பாயாக. நான் சொல்லும் அனைத்தையும் நீ கேட்கும்போதே, அவை அனைத்தையும் நீ நினைத்துப் பார்த்தால், முன்கண்டுணரும் {தீர்க்கதரிசனக்} கண்களைக் கொண்ட ஒருவனாக என்னை நீ அறிவாய்.(147)
எப்போது அர்ஜுனன் வில்லை வளைத்து, ஆவலுடன் இலக்கைத் துளைத்து, அதைத் தரையில் வீழ்த்தினான் என்றும், கூடியிருந்த இளவரசர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கன்னிகையான கிருஷ்ணையை {திரௌபதியை} வெற்றிகரமாகக் கொண்டு சென்றான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(148)
சுபத்திரையை கடத்திய அர்ஜுனன் |
காண்டவவனத்தில் அர்ஜுனன் - கிருஷ்ணன் |
எப்போது ஐந்து பாண்டவர்களும், தங்கள் தாயான குந்தியுடன் அரக்கு வீட்டில் இருந்து தப்பித்தனர் என்றும், அவர்களுக்கான ஏற்பாடுகளை நிறைவேற்றுவதில் விதுரன்ஈடுபட்டான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(151)
எப்போது அர்ஜுனன், அரங்கில் உள்ள இலக்கைத் துளைத்துத் திரௌபதியை வென்றான் என்றும், துணிச்சல்மிக்கப் பாஞ்சாலர்கள், பாண்டவர்களைச் சேர்ந்தனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(152)
பீமன் ஜராசந்தன் மோதல் |
எப்போது பாண்டு மகன்கள் தங்கள் பொதுப்போர்த்தொடரில் {திக்விஜயத்தில்} நிலத்தின் தலைவர்களை வென்று, மகத்தான ராஜசூய வேள்வியைச் செய்தனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(154)
எப்போது திரௌபதி, கண்ணீரால் தடைபட்ட தன் குரலுடனும், இதயம் நிறைந்த வேதனையுடனும், தூய்மையற்ற {தீட்டுக்} காலத்தில், ஒற்றையுடுப்புடன் சபைக்கு இழுத்து வரப்பட்டாள் என்றும், பாதுகாவலர்களைக் கொண்டவளானாலும், பாதுகாவலர்களற்றவளைப் போல நடத்தப்பட்டாள் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(155)
எப்போது தீயவனும், பொல்லாதவனுமான துச்சாசனன், அவளது {திரௌபதியின்} அந்த ஒற்றையாடையை உருவ முயன்று, அவளது மேனியில் இருந்து ஒரு பெரும் துணிக்குவியலை மட்டுமே உருவி, அதன் முனையை அடைய முடியாமல் போனான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(156)
எப்போது யுதிஷ்டிரன், பகடையாட்டத்தில் சௌபலனால் {சகுனியால்} வீழ்த்தப்பட்டு, அதன் விளைவாக அவனது நாட்டை இழந்தும், ஒப்பற்ற ஆற்றலையுடைய அவனது தம்பிமாரால் கவனிக்கப்பட்டான் {சேவகம் செய்யப்பட்டான்} என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(157)
எப்போது நல்லோரான பாண்டவர்கள், துன்பத்துடன் அழுதுகொண்டே, தங்கள் அண்ணனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து காட்டுக்குச் சென்றனர் என்றும், தங்கள் நலமின்மையைத் தணிக்கப் பல்வேறு வகைகளில் முயன்றனர் என்றும் கேட்டேனோ, ஓ சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(158)
எப்போது யுதிஷ்டிரன், ஸ்நாதகர்களாலும், பிச்சை பெற்று வாழும் உன்னத மனம் கொண்ட பிராமணர்களாலும் காட்டுக்குள் பின்தொடரப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(159)
எப்போது அர்ஜுனன், ஒரு மோதலில், வேடனின் வடிவில் இருந்தவனும், தேவர்களுக்குத் தேவனுமான திரையம்பகனை (முக்கண்ணனை) {சிவனை} நிறைவு செய்து, பாசுபதம் என்ற பெரும் ஆயுதத்தை அடைந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(160)
எப்போது நீதிமானும், புகழ்பெற்றவனுமான அர்ஜுனன், தேவலோகங்களுக்குச் சென்று, இந்திரனிடமே தெய்வீக ஆயுதங்களை அடைந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(161)
எப்போது அர்ஜுனன், அதன் பிறகு காலகேயர்களையும், தேவர்களால் பாதிப்படைய முடியாதவர்களும், தாங்கள் அடைந்திருந்த வரத்தால் செருக்குடன் இருந்தவர்களுமான பௌலோமர்களையும் வென்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(162)
எப்போது எதிரிகளைத் தண்டிப்பவனான அர்ஜுனன், அசுரர்களின் அழிவுக்காக இந்திரலோகத்திற்குச் சென்று வெற்றியோடு திரும்பினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(163)
எப்போது பீமனும், பிருதையின் (குந்தியின்) பிற மகன்களும், வைஸ்ரவணனுடன் {குபேரனோடு} சென்று மனிதர்களால் அடைய முடியாத நாட்டை அடைந்தனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(164)
எப்போது என் மகன்கள், கர்ணனின் ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்டுச் சென்று, தங்கள் கோஷயாத்திரை பயணத்தின் போது, கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டனர் என்றும், அர்ஜுனனால் விடுவிக்கப்பட்டனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(165)
எப்போது தர்மன் (நீதிதேவன்), யக்ஷனின் வடிவில் வந்து, யுதிஷ்டிரனிடம் குறிப்பிட்ட கேள்விகளை முன்வைத்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(166)
எப்போது என் மகன்கள், விராடனின் ஆட்சிப்பகுதிகளுக்குள், தங்கள் மாற்றுவடிவத்தில் திரௌபதியுடன் வசித்த பாண்டவர்களைக் கண்டுபிடிக்கத் தவறினர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(167)
எப்போது என் தரப்பின் முக்கிய மனிதர்கள் அனைவரும், விராடனின் ஆட்சிப்பகுதிகளில் வசித்தவனும், ஒரே தேரில் வந்தவனுமான உன்னதமான அர்ஜுனனால் வெல்லப்பட்டனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(168)
எப்போது மதுகுலத்தவனும், ஓர் அடியால் மொத்த உலகத்தையும் மறைத்தவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களின் நன்மையில் இதயப்பூர்வமான ஆர்வம் கொண்டிருந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(இந்த ஸ்லோகம் மன்மதநாததத்தரின் பதிப்பில் சுலோகம் எண் 171-ஆக இருக்கிறது)
எப்போது மத்ஸ்யத்தின் {மத்ஸ்ய நாட்டின்} மன்னன் {விராடன்}, நல்லொழுக்கம் கொண்ட தன் மகள் உத்தரையை, அர்ஜுனனுக்குக் கொடுக்க முன்வந்தான் என்றும், அர்ஜுனனோ அவளை {உத்தரையைத்} தன் மகனுக்காக {அபிமன்யுவிற்காக} ஏற்றான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(169)
எப்போது யுதிஷ்டிரன், பகடையில் வீழ்த்தப்பட்டும், செல்வத்தை இழந்தும், நாடு கடத்தப்பட்டும், தன் தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்டும் கூட, ஏழு அக்ஷௌஹிணிகள் கொண்ட ஒரு படையைத் திரட்டினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(170)
எப்போது நாரதர், கிருஷ்ணனும், அர்ஜுனனுமாக இருப்போர் நரனும் நாராயணனுமாவர் என்றும், பிரம்மலோகத்தில் அவர்கள் ஒன்றாக இருந்ததைத் தாம் கண்டதாக அறிவித்ததையும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(172)
எப்போது கிருஷ்ணன், குருக்களிடம் {கௌரவர்களிடம்} மனிதகுலத்தின் நன்மைக்காக வந்து, அமைதியை ஏற்படுத்த விரும்பினான் என்றும், {ஆனால்} தான் வந்த நோக்கத்தை அடைய முடியாமல் திரும்பினான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(173)
எப்போது கர்ணனும், துரியோதனனும் கிருஷ்ணனைச் சிறைபிடிக்கத் தீர்மானித்தபோது, அவன் {கிருஷ்ணன்} மொத்த அண்டத்தையும் தன்னில் வெளிப்படுத்தினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(174)
எப்போது கிருஷ்ணன் புறப்படும் நேரத்தில், சோகத்தால் நிறைந்து, அவனது தேரின் அருகே நின்ற பிருதை (குந்தி), அவனால் {கிருஷ்ணனால்} ஆறுதலளிக்கப்பட்டாள் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(175)
எப்போது வாசுதேவன், சந்தனுவின் மகனான பீஷ்மர் ஆகியோர் பாண்டவர்களின் ஆலோசகர்களாக் இருந்தார்கள் என்றும், பரத்வாஜரின் மகனான துரோணர் அவர்களுக்கு ஆசி வழங்கினார் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(176)
எப்போது கர்ணன் பீஷ்மரிடம், "நீர் போரிடும் வரை நான் போரிட மாட்டேன்" என்று சொல்லிப் படையை விட்டு சென்றுவிட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(177)
எப்போது, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், அளவிலா ஆற்றலைக் கொண்ட காண்டீவ வில்லும் என இம்மூன்று பயங்கர சக்திகளும் ஒன்றாகச் சேர்ந்தன என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(178)
எப்போது அர்ஜுனன், குற்றவுணர்வுக்கு ஆட்பட்டுர தன் தேரில் மூழ்கிப் போக இருந்த {அழுதுகொண்டிருந்த} சமயத்தில், கிருஷ்ணன் அவனுக்கு உலகங்கள் அனைத்தையும் தன் உடலுக்குள் காட்டினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(179)
எப்போது எதிரிகளைத் துணையற்றவர்களாகச் செய்யும் பீஷ்மர், போர்க்களத்தில் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் தேர்வீரர்கள் கொன்றும், குறிப்பிட்டோரில் (பாண்டவர்களில்) ஒருவரையேனும் கொல்லவில்லை என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(180)
எப்போது கங்கையின் நீதிமிக்க மகனான பீஷ்மர், போர்க்களத்தில் தம்மைக் கொல்லும் வழிகளைக் குறிப்பிட்டார் என்றும், மேலும் அது {பீஷ்மரின் அழிவு} மகிழ்ச்சிநிறைந்த பாண்டவர்களால் நிறைவேற்றப்பட்டது என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(181)
எப்போது அர்ஜுனன் தன் தேருக்கு முன்னணியில் சிகண்டியை நிறுத்திக் கொண்டு, எல்லையில்லா வீரம் கொண்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவருமான பீஷ்மரைக் காயப்படுத்தினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(182)
எப்போது வயது முதிர்ந்த வீரரான பீஷ்மர், சோமகக் குலத்தை எண்ணிக்கையில் ஒரு சிலராகக் குறைத்தும், பல்வேறு காயங்களால் வெற்றிகொள்ளப்பட்டுக் கணைகளின் படுக்கையில் கிடந்தார் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(183)
எப்போது தண்ணீருக்கான தாகத்துடன் தரையில் கிடந்த பீஷ்மர், அர்ஜுனனை வேண்டிக்கொண்டதும், தரையைத் துளைத்து அவரது தாகத்தை அவன் {அர்ஜுனன்} தணித்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(184)
எப்போது குந்தி மகன்களின் {பாண்டவர்களின்} வெற்றிக்காக இந்திரன், சூரியனுடன் மற்றும் வாயு ஆகியோர் கூட்டணியாக ஒருங்கிணைந்தனரோ, ஊனுண்ணும் விலங்குகள் (அவர்களது {மேற்கண்ட மூன்று தேவர்களின்} மங்கலமற்ற இருப்பால்) நம்மை {சகுனங்களால்} அச்சுறுத்தினவோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(185)
எப்போது அற்புதப் போர்வீரரான துரோணர், களத்தில் நடந்த போரில் பல்வேறு வழிமுறைகளை வெளிப்படுத்தியும், பாண்டவர்களில் மேன்மையானவர்கள் {முக்கியமானவர்கள்} எவரையும் கொல்லமுடியவில்லையோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(186)
எப்போது நமது படையைச் சேர்ந்தவர்களும், அர்ஜுனனை வீழ்த்துவதற்காக நியமிக்கப்பட்டவர்களும், மஹாரதர்களுமான சம்சப்தகர்கள் அனைவரும், அர்ஜுனனாலேயே கொல்லப்பட்டனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(187)
எப்போது பிறரால் ஊடுருவப்பட முடியாதவையும், நன்கு ஆயுதம் தரித்த பரத்வாஜராலேயே {துரோணராலேயே} காக்கப்பட்டவையுமான நமது படைகளின் நிலைகளைச் சுபத்திரையின் துணிச்சல்மிக்க மகன் {அபிமன்யு}, தனியொருவனாகத் தாக்கி அதனுள் நுழைந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(188)
எப்போது அர்ஜுனனை வெற்றிக் கொள்ள முடியாத நமது மஹாரதர்கள், களிப்பான முகங்களுடன் சிறுவன் அபிமன்யுவால் சூழப்பட்டு மொத்தமாகக் கொல்லப்பட்டனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(189)
எப்போது குருட்டுக் கௌரவர்கள், அபிமன்யுவைக் கொன்றுவிட்டு மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர் என்றும், அதன்பேரில் கோபமடைந்த அர்ஜுனன், சைந்தவனை {ஜெயத்ரதனைச்} சுட்டும் வகையில் கொண்டாடப்படும் தன்னுரையைப் பேசினான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(190)
எப்போது அர்ஜுனன் சைந்தவனை {ஜெயத்ரதனைக்} கொல்ல சபதம் செய்து, தன் எதிரிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தனது அந்தச் சபதத்தை நிறைவேற்றினான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(191)
போரில் களைப்படைந்த குதிரைகளுக்கு கிருஷ்ணன் நீரருந்தச் செய்தல் |
எப்போது குதிரைகள் களைப்படைந்ததும், தன் தேரிலேயே நின்ற அர்ஜுனன், தன்னைத் தாக்கியோர் அனைவரையும் தடுத்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(193)
எப்போது விருஷ்ணி குலத்தின் யுயுதானன் {சாத்யகி}, துரோணரின் படையைக் குழப்பத்தில் ஆழ்த்தி, யானைகளின் முன்னிலையிலும் தாங்க முடியாத ஆற்றலை வெளிப்படுத்தி, கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் இருந்த இடத்திற்குச் சென்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(194)
எப்போது கர்ணன், பீமனைத் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தும், தன் வில்லின் முனையால் அவனை இழுத்தும், அவமானப்படுத்தும் வகையில் மட்டும் பேசிவிட்டு, அவனைத் தப்பிச் செல்ல அனுமதித்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(195)
எப்போது துரோணர், கிருதவர்மன், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ரத்தின் வீர மன்னன் (சல்லியன்) ஆகியோர் சைந்தவன் {ஜெயத்ரதன்} கொல்லப்படுவதைப் பொறுத்தார்கள் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(196)
எப்போது இந்திரனால் (கர்ணனுக்குக்) கொடுக்கப்பட தெய்வீக சக்தியை {ஈட்டி போன்ற ஆயுதத்தை}, மாதவன் {கிருஷ்ணன்} தனது தீயத் திட்டங்களால், அச்சந்தரும் முகத்தோற்றம் கொண்ட ராட்சசன் கடோத்கசனின் மீது ஏவச்செய்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(197)
எப்போது கர்ணனுக்கும், கடோத்கசனுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில், போரில் அர்ஜுனனை நிச்சயம் கொன்றிருக்கக்கூடிய அந்தச் சக்தியை {ஈட்டி போன்ற ஆயுதத்தைக்} கடோத்கசன் மீது கர்ணன் ஏவினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(198)
எப்போது திருஷ்டத்யும்னன், இறக்கத் தீர்மானித்த துரோணர், தமது தேரில் தனியாக இருந்த போது, போர் விதிகளை மீறிக் கொன்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(199)
எப்போது மாத்ரியின் மகனான நகுலன், மொத்தப் படையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே துரோணர் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} தனிப்போரில் ஈடுபட்டு, அவனுக்கு இணையாகத் தன்னை வெளிக்காட்டி, சுற்றிலும் தன் தேரில் வட்டமாகச் சுழன்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(200)
எப்போது துரோணர் இறந்ததன் பேரில், அவரது மகன் {அஸ்வத்தாமன்} நாராயணம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்தியும், பாண்டவர்களின் அழிவை அடையத் தவறினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(201)
எப்போது பீமசேனன், எவராலும் தடுக்கப்பட முடியாதபடி போர்க்களத்தில், தன் தம்பியான துச்சாசனனின் குருதியைக் குடித்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(202)
எப்போது எல்லையற்ற துணிச்சல் கொண்டவனும், போரில் வெல்லப்பட முடியாதவனுமான கர்ணன், தேவர்களாலேயே புரிந்து கொள்ள முடியாததும், சகோதரர்களுக்கிடையில் நடந்ததுமான அந்தப் போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(203)
எப்போது நீதிமானான யுதிஷ்டிரன், வீரனான துரோணர் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, துச்சாசனனையும், சீற்றமிக்கக் கிருதவர்மனையும் வெற்றிக் கொண்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(204)
எப்போது துணிச்சல்மிக்கவனும், போரில் கிருஷ்ணனையே எதிர்க்கத் துணிந்தவனுமான மத்ர மன்னன் {சல்லியன்}, யுதிஷ்டிரனால் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(205)
எப்போது மாயசக்தி கொண்டவனும், விளையாட்டு {சூதாட்டம்} மற்றும் வழிவழியான பகைக்கு வேராக இருந்தவனுமான தீய சுபலன் {சகுனி}, சகாதேவனால் போரில் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(206)
எப்போது களைப்படைந்த துரியோதனன், ஒரு தடாகத்துக்குச் சென்று, அதன் நீருக்குள் புகலிடத்தை அமைத்துக் கொண்டு, தன் பலத்தையும், தேரையும் இழந்தவனாக அங்கே தனியாகக் கிடந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(207)
எப்போது பாண்டவர்கள், வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} அந்தத் தடாகத்துக்குச் சென்று, அதன் கரையில் நின்று கொண்டு, அவமதிப்புகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத என் மகனிடம் {துரியோதனனிடம்} அவமதிப்பாகப் பேசத் தொடங்கினர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(208)
எப்போது கதாயுதங்களுடன் கூடிய ஒரு மோதலில், பல்வேறு புதிய (தாக்குதல் மற்றும் தற்காத்தல்) முறைகளுடன் கூடிய சுழற்சியை வெளிக்காட்டிய அவன் {துரியோதனன்}, கிருஷ்ணனின் ஆலோசனைகளின்படி நியாயமற்ற வழியில் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(209)
எப்போது துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்}, பிறரும் {கிருபரும், கிருதவர்மனும்}, உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலர்களையும், திரௌபதியின் மகன்களையும் கொன்று, பயங்கரமானதும், இகழ்வைத் தருவதுமான {அருவருப்பானதுமான} ஒரு செயலைச் செய்தனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(210)
எப்போது பீமசேனனால் பின்தொடரப்பட்ட அஸ்வத்தாமன், ஐஷீகம் என்றழைக்கப்பட்ட முதன்மையான ஆயுதத்தை வெளிப்படுத்தி, (உத்தரையின்) கருவறையில் இருந்த கருவை {பரீக்ஷித்தைக்} காயப்படுத்தினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(211)
எப்போது (அஸ்வத்தாமனால் வெளியிடப்பட்ட) பிரம்மசிரஸ் ஆயுதத்தை, "சஷ்டி" என்ற சொல்லைச் சொல்லி மற்றொரு ஆயுதத்தால் அர்ஜுனன் தடுத்தான் என்றும், அஸ்வத்தாமனின் தலையில் ஆபரணம் போல இருக்கும் குருப்பு ஒன்றை அவன் {அஸ்வத்தாமன்} கொடுக்க வேண்டியிருந்தது என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(212)
எப்போது விராடன் மகளின் {உத்தரையின்} கருவறையில் இருந்த கருவானது, அஸ்வத்தாமனின் வலிமைமிக்க ஆயுதத்தால் காயப்படுத்தப்பட்டது என்றும், துவைபாயனரும் {வியாசரும்}, கிருஷ்ணனும் அவனுக்கு {அஸ்வத்தாமனுக்குச்} சாபமளித்தனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(213)
ஐயோ! பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பெற்றோர், சகோதரர்கள் மற்றும் சொந்தங்களை இழந்தவளான காந்தாரியின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. பாண்டவர்களால் செய்யப்பட்டப் பணி கடினமானதாக இருக்கிறது; எந்த எதிரியுமற்ற ஓர் அரசானது அவர்களால் மீட்கப்பட்டிருக்கிறது.(214)
ஐயோ! போரானது பத்து பேரை மட்டுமே உயிருடன் விட்டு வைத்துள்ளது என்று நான் கேட்டேன்: நம் தரப்பில் மூவரும், பாண்டவர்களின் தரப்பில் எழுவரும், அந்தப் பயங்கரப் போரில் பதினெட்டு அக்ஷௌஹிணிகளின் க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.(215) என்னைச் சுற்றிலும் இருளாக இருக்கிறது, பொருத்தமான மயக்கம் என்னைத் தாக்குகிறது: ஓ சூதா, சுயநினைவு என்னைவிட்டு அகல்கிறது, என் மனமும் சஞ்சலமடைகிறது" என்றான் {திருதராஷ்டிரன்}".(216)
சௌதி சொன்னார், "இவ்வார்த்தைகளால் தன் விதியை நொந்து கொண்ட திருதராஷ்டிரன், கடும் வேதனையை அடைந்து, சிறிது நேரத்திற்கு உணர்வை இழந்தவனானான்; எனினும் புத்துயிரடைந்த அவன், பின் வரும் வார்த்தைகளை சஞ்சயனிடம் பேசினான்.(217)
{திருதராஷ்டிரன் சஞ்சயனிடம்}, "இவ்வாறு நடந்த பிறகு, ஓ! சஞ்சயா, தாமதமில்லாமல் என் உயிருக்கு ஒரு முடிவைக் கொடுக்க விரும்புகிறேன்; இனியும் அதைப் பேணிக் காப்பதற்கான சிறு பயன் ஒன்றையும் நான் காணவில்லை" என்றான்".(218)
சௌதி சொன்னார், "அறிவாளியான கவல்கணன் மகன் (சஞ்சயன்), கலங்கிப் போயிருந்த பூமியின் தலைவன் {திருதராஷ்டிரன்}, இவ்வாறு பேசிக்கொண்டும், வருந்திப்புலம்பிக் கொண்டும், பாம்பொன்றைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டும், மீண்டும் மீண்டும் மயங்கிக் கொண்டும் இருந்தபோது, ஆழ்ந்த பொருள் கொண்ட இவ்வார்த்தைகளில் {அவனிடம்} பேசினான்.(219)
{சஞ்சயன்}, ஓ! ராஜாவே {திருதராஷ்டிரரே}, பரந்துபட்ட முயற்சிகளைச் செய்த பெரும் பலமிக்க மனிதர்களைக் குறித்து வியாசரும், ஞானியான நாரதரும் பேசியதை நீர் கேட்டீர்;(220) தகுந்த குணங்களுடன் பிரகாசித்தவர்களும், தெய்வீக ஆயுதங்களின் அறிவியலை நன்கறிந்தவர்களும், மகிமையில் இந்திரனின் சின்னங்களுக்கு ஒப்பானவர்களும், பெரும் அரச குடும்பங்களில் பிறந்தவர்களுமான மனிதர்கள்;(221) நீதியால் உலகை வென்று, தகுந்த காணிக்கைகளை (பிராமணர்களுக்கு) அளித்துப் பெரும் வேள்வியைச் செய்தவர்களான அவர்கள், இவ்வுலகில் பெரும் புகழை அடைந்தும், இறுதியில் காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கினர் {இறக்கவே செய்தனர்}.(222,223)
வீரமான மஹாரதனான {வலிமைமிக்கத் தேர்வீரனான} சைப்யன், வெற்றியாளர்களுக்கு மத்தியில் பெரியவனான சிருஞ்சயன், சுஹோத்ரன், ரந்திதேவன், பெரும்புகழைக் கொண்ட {உசிக்கின் மகனாகிய} கக்ஷீவான், பாஹ்லீகன், தமனன், {சைத்யன்,} சர்யாதி, அஜிதன், நளன், எதிரிகளை அழிப்பவரான விஸ்வமித்திரர், பெரும் பலம் கொண்டவனான அம்பரீஷன், மருத்தன், மனு, இக்ஷ்வாகு, கயன், பரதன், தசரதன் மகனான இராமன்,சசவிந்து {சசிபிந்து}, பகீரதன், பெரும் பேறு பெற்ற கிருதவீரியன், ஜனமேஜயன், வேள்விகளைச் செய்வதற்குத் தேவர்களாலேயே துணைபுரியப்பட்டவனும், வசிப்பிடங்கள் மற்றும் வசியாயிடங்கள் ஆகியவற்றுடன் கூடிய பூமாதேவியின் மேனி எங்கும் வேள்விப்பீடங்கள் மற்றும் வேள்வி மரங்கள் {யூபஸ்தம்பம்} ஆகியவற்றால் குறிப்பிட்டவனும், நல்ல செயல்களைச் செய்தவனுமான யயாதி ஆகியோர் அப்படிப்பட்டோரே.(224,227) முன்பொரு சமயம், தன் பிள்ளைகளின் இழப்பால் மிகவும் துன்பப்பட்ட சைப்யனுக்கு இந்த இருபத்துநான்கு, ராஜாக்களும் தெய்வீக முனிவரான நாரதரால் குறிப்பிடப்பட்டனர்.(228)
இவர்களைத் தவிர, இன்னும் பலம் நிறைந்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், உன்னத மனம் கொண்டவர்களும், ஒவ்வொரு தகுந்த குணத்தாலும் ஒளிர்ந்தவர்களுமான வேறு ராஜாக்களும் இவர்களுக்கு முன்னே சென்றிருக்கின்றனர் {இறந்திருக்கின்றனர்}.(229) அவர்கள் பூரு, குரு, யது, சூரன், பெரும் புகழைக் கொண்ட விஸ்வகஸ்வன்; அணுஹன், யுவனாஸ்வன், ககுத்ஸ்தன், விக்ரமி, ரகு; விஜயன், விதிஹோத்ன், அங்கன், பவன், சுவேதன், பிருபத்குரு {பிருஹத்குரு}; உசீனரன், சத-ரதன், கங்கன், துலிதுஹன், துருமன்; தம்போத்பவன், பரன், வேனன், ஸகரன், ஸங்கிருதி, நிமி; அஜயன், பரசு, புண்டரன், சம்பு, புனிதமான தேவ-விரதன்; தேவாஹுயன் {தேவாஹ்வயன்}, {சுப்ரதிமன்,} சுப்ரதீகன், பிருஹத்-ரதன்; மஹாத்சாகன், வினிதாத்மன், சுக்கிரது, நிஷாதர்களின் மன்னன் நளன்; சத்தியவிரதன், சாந்தபயன், சுமித்திரன், தலைவன் சுபலன்; ஜானுஜங்கன், அனரண்யன், அர்க்கன், பிரியபிருத்யன், சுசி-விரதன், பலபந்து, நிராமர்த்தன், கேதுசிருங்கன், பிருஹத்பலன்; திருஷ்டகேது, பிருஹத்கேது, திருப்தகேது, நிராமயன்; அவிக்ஷித், சபலன், தூர்த்தன், கிருதபந்து, திருதே-சுத்தி; மஹாபுராணனன் சம்பவ்யன், பிரத்யங்கன், பரஹன், சுருதி ஆவர்.(230-236)
ஓ! தலைவா, இவர்களும், இன்னும் வேறு ராஜாக்களும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும், பத்து லட்சம் கணக்கிலும், பெரும் சக்தியும், அறிவும் வாய்ந்த இளவரசர்களும், பெரும் இன்பங்களை விட்டுத் தங்கள் {உமது} மகன்களைப் போலவே மரணத்தைச் சந்தித்தனர்.(237,238) அவர்களது நல்ல செயல்கள், வீரம், ஈகை, மகிமை, நம்பிக்கை, உண்மை, தூய்மை, எளிமை மற்றும் கருணை ஆகியவை, பெரும் கல்விமான்களான புனிதமான புலவர்களால் உலகின் முற்காலப் பதிவுகளில் வெளியிடப்பட்டன. உன்னதமான ஒவ்வொரு நற்குணத்துடனும் கூடிய அவர்களும் தங்கள் உயிரைவிட்டனர்.(239)
உமது மகன்கள், பேரார்வம், பேராசை மற்றும் தீய மனநிலை ஆகியவற்றால் தூண்டப்பட்ட தீயவர்களாகவே இருந்தனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் சாத்திரங்களை அறிந்தவராகவும், நுண்ணறிவும், ஞானமும் கொண்டவராக இருக்கிறீர்; சாத்திரங்களால் வழிநடத்தப்படுவதைத் தங்கள் அறிவாகக் கொண்டோர், தீயூழில் ஒருபோதும் மூழ்குவதில்லை.(240,241) ஓ! இளவரசரே {திருதராஷ்டிரரே}, விதியின் மென்மையையும், வன்மையையும் நீர் அறிந்தவராக இருக்கிறீர்; எனவே உமது பிள்ளைகளைப் பாதுகாப்பதைக் குறித்துக் கவலை கொள்வது உமக்குத் தகாது; மேலும் நடக்க வேண்டியவற்றுக்காக வருந்தாமலிருப்பதே உமக்குத் தகும்:(242) தன் ஞானத்தைக் கொண்டு விதியின் கட்டளைகளை எவரால் திசைதிருப்ப முடியும்? வருங்காலத் தேவைக்காக ஒருவனுக்காகக் குறிக்கப்பட்ட பாதையில் இருந்து எவனாலும் விலக முடியாது.(243)
இருப்பு மற்றும் இல்லாமை, இன்பம் மற்றும் துன்பம் ஆகிய அனைத்தும் காலத்தையே தங்கள் வேர்களாகக் கொண்டிருக்கின்றன.(244) காலமே அனைத்துப் பொருள்களையும் படைக்கிறது; காலமே அனைத்து உயிரினங்களையும் அழிக்கிறது. காலமே உயிரினங்களை எரிக்கிறது, மேலும் காலமே அந்நெருப்பை அணைக்கவும் செய்கிறது.(245) மூன்று உலகிலும் நன்மை மற்றும் தீமையின் அனைத்து நிலைகளும் காலத்தாலேயே உண்டாக்கப்படுகின்றன. காலம் அனைத்துப் பொருள்களையும் வெட்டிக் குறுக்குகிறது, மேலும் புதியனவற்றையும் உண்டாக்குகிறது.(246) அனைத்துப் பொருட்களும் உறங்கும்போது காலம் மட்டுமே விழித்திருக்கிறது. காலமே எந்தப் பாதிப்புமின்றி அனைத்துப் பொருள்களையும் கடந்து செல்கிறது.(247) நீர் அறிந்தது போலவே, கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் அனைத்துப் பொருள்களும், நிகழ்கணத்தில் இருப்பவை யாவையும் காலத்தின் குழந்தைகளே என்பதை அறிந்து கொண்டு, உமது விவேகத்தை இழக்காமல் இருப்பதே உமக்குத் தகும்" என்றான் {சஞ்சயன்}".(248)
சௌதி சொன்னார், "கவல்கணன் மகன் {சஞ்சயன்}, தன் மகன்களுக்காகத் துயரில் மூழ்கியிருந்த அரசன் திருதராஷ்டிரனுக்கு இம்முறையில் ஆறுதலை அளித்து, அவனது {திருதராஷ்டிரனின்} மன அமைதியை மீட்டான்.(249)
துவைபாயனர் {வியாசர்} இந்த உண்மைகளையே தமது உட்பொருளாக எடுத்துக் கொண்டு, இவ்வுலகிற்காகக் கல்விமான்களாலும், புனிதமான புலவர்களாலும் இயற்றப்பட்ட புராணங்களில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு புனிதமான உபநிஷத்தை {பகவத்கீதையைத்} இயற்றினார்[9].(250)
[9] வேறொரு பதிப்பில், "முனிஸ்ரேஷ்டராகிய கிருஷ்ணத்வைபாயனர் உலகங்களுக்கெல்லாம் நன்மைக்காகக் கருணையினாற் பாபத்தைப் போக்கத்தக்க உபநிஷத்தென்று சொல்லப்பட்ட பகவத்கீதையை இந்தப் பாரதத்திற்சொன்னார்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "பெரும் துவைபாயனர், இவ்வுண்மைகளைக் கொண்டு ஒரு புனிதமான உபநிஷத்தைத் தொகுத்தார்; அதுவே இவ்வுலகில் கல்விமான்களாலும், புனிதமான புலவர்களாலும் புராணங்களில் வெளியிடப்பட்டது" என்றிருக்கிறது.
பாரதம் குறித்த ஆய்வானது ஒரு பக்தி {பற்றார்வத்தின்} செயல்பாடாகும் {பாரதம் ஓதுவது புண்ணியமாகும்}. எவன் நம்பிக்கையுடன் {இவற்றில்} ஓர் அடியையேனும் படிப்பானோ அவனது பாவங்கள் முற்றிலுமாக நீக்கப்படுகின்றன {அழிக்கப்படுகின்றன}.(251) தேவர்கள், தேவ முனிவர்கள், நல்ல செயல்களைச் செய்யும் களங்கமற்ற பிரம்மமுனிவர்கள் ஆகியோர் இதற்குள் பேசப்பட்டிருக்கின்றனர்; அதே போல யக்ஷர்களும், பெரும் உரகர்களும் (நாகர்களும்) பேசப்பட்டிருக்கின்றனர்.(252) ஆறு குணங்களைக் கொண்ட அழிவற்ற வாசுதேவன் {கிருஷ்ணன்} இதற்குள் விளக்கப்பட்டிருக்கிறான். அவனே {கிருஷ்ணனே} உண்மையாளன், நீதிமான், தூயன், புனிதன், அழிவற்ற பிரம்மம், உண்மையான நிலையான ஒளி, அவனுடைய தெய்வீகச் செயல்களையே அறிவாளிகளும், கல்விமான்களும் மீண்டும் உரைக்கின்றனர்;(253,254) படைப்புக் கொள்கைகளையும், முன்னேற்றத்தையும், பிறவி, மரணம், மறுபிறவி ஆகியவற்றையும், இருப்பு மற்றும் இல்லாமையையும் கொண்ட அண்டம் அவனிலிருந்து {கிருஷ்ணனிலிருந்தே} உண்டானது.(255) இதற்குள் அத்யாத்மம் என்று அழைக்கப்படும் அதுவே (இயற்கையின் மேற்பார்வையிடும் தன்மையே) {கிருஷ்ணனே} ஐம்பூதங்களின் பண்புகளைப் பகிர்ந்தளிக்கிறது {பகிர்ந்தளிக்கிறான்} என்று சொல்லப்பட்டிருக்கிறது. "வடிவற்றது" என்பது போன்ற அடைமொழிகளால் “எவன் புருஷன்?” என்பது விளக்கப்பட்டிருக்கிறது;(256) பொதுவிதியில் இருந்து விலக்களிக்கப்பட்ட யதிகளில் முதன்மையானோரும், தியானம் மற்றும் தவம் செய்வோரும், கண்ணாடியில் பிம்பத்தைப் பார்ப்பது போல, தங்கள் இதயங்களில் வசிப்பதாக அதையே {அவனையே} காண்பார்கள்.(257)
நம்பிக்கை கொண்டவனும், பக்தியில் {பற்றார்வத்தில்} அர்ப்பணிப்பு கொண்டவனும், அறப்பயிற்சியில் நிலைத்திருப்பவனுமான ஒரு மனிதன், இந்தப் பகுதியைப் படிப்பதால், பாவத்திலிருந்து விடுபடுகிறான்.(258)
அறிமுகம் {அனுக்கிரமணிக அத்யாயம்} என்று அழைக்கப்படும் பாரதத்தின் இந்தப் பகுதியைத் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து கேட்கும் நம்பிக்கையாளன் இடர்பாடுகளுக்குள் வீழமாட்டான்.(259) அறிமுகத்தின் எந்தப் பகுதியையாவது இரு சந்திப்பொழுதுகளில் மீண்டும் உரைக்கும் ஒரு மனிதன், அந்தச் செயலின் போது, பகல், அல்லது இரவில் ஈர்க்கப்பட்ட பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.(260) பாரதத்தின் உடலான இந்தப் பகுதி உண்மையானதும், அமுதமானதுமாகும். தயிரில் உள்ள வெண்ணையைப் போலவும், இருகால்களைக் கொண்டோரில் பிராமணர்களைப் போலவும்,(261) வேதங்களில் ஆரண்யகத்தைப் போலவும், மருந்துகளில் அமுதத்தைப் போலவும்; நீர்க்கொள்ளிடங்களில் கடலைப் போலவும், நான்கு கால் கொண்டவற்றில் பசுவைப் போலவும்;(262) (குறிப்பிடப்பட்ட பொருள்களின் மத்தியில்) இவற்றைப் போலவே வரலாறுகளுக்கு மத்தியில் பாரதமும் சொல்லப்படுகிறது. ஒரு சிராத்தத்தின் போது, இவற்றில் ஓர் அடியையாவது பிராமணர்களுக்கு ஒருவன் உரைக்கச் செய்வானாயின், தன் மூதாதையருக்கு அவன் அளிக்கும் உணவும், நீரும் வற்றாததாகின்றன {அழிவில்லாதவை ஆகின்றன}.(263)
வரலாறு, புராணங்கள் ஆகியவற்றின் உதவியோடு வேதமானது விளக்கப்படலாம்;(264) ஆனால் வேதமோ குறைந்த அறிவைக் கொண்டோனின் விளக்கத்திற்கு {அவன் தன்னை மோசம் செய்வான் என்று} அஞ்சுகிறது. வியாசரின் இந்த வேதத்தை {இந்த மஹாபாரதத்தைப்} பிறருக்கு உரைக்கும் கல்வியாளன் பயனையே அறுவடை செய்கிறான்.(265) கருவைக் கொன்ற பாவத்தையோ, அதற்கு இணையானதையோ கூட இஃது அழித்துவிடும் என்பதில் ஐயமில்லை.(266) சந்திரனின் இந்தப் புனித அதிகாரத்தை[10]{இந்த அனுக்கிரமணிக அத்யாயத்தைப்} படிக்கும் ஒருவன், மொத்த பாரதத்தையுமே படித்தவனாவான் என நான் நினைக்கிறேன். எந்த மனிதன் மதிப்புடன் இந்தப் புனித படைப்பைத் தினமும் கேட்பானோ,(267) அவன் நீண்ட வாழ்வையும், புகழையும் அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்கிறான். முந்தைய நாட்களில், நான்கு வேதங்களை ஒரு பக்கத்திலும், பாரதத்தை மறுபக்கத்திலும் நிறுத்திப் பார்க்கும் காரியத்திற்காகக் கூடிய தேவர்கள், அவற்றைத் தராசில் நிறுத்தினர். பின்னதே {பாரதமே}, புதிர்களுடன் {உபநிஷத்துகளுடன்} கூடிய நான்குவேதங்களைவிடக் கனமாக இருந்ததால்,(268,269) அந்தக் காலத்தில் இருந்து அது மஹாபாரதம் (பெரும் பாரதம்) என்று இவ்வுலகில் அழைக்கப்படுகிறது. பொருள் மற்றும் உள்ளடக்கத்தின் கனம் ஆகிய இரண்டிலும் உயர்ந்த மதிப்பைக் கொண்டிருப்பதால்,(270) அது மஹாபாரதம் என்று பெயரிடப்பட்டது. எவன் அதன் பொருளை அறிவானோ, அவன் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் காக்கப்படுகிறான்.(271) தவம் பாவமற்றது, கல்வி தீங்கற்றது, இனங்கள் அனைத்திற்கும் பரிந்துரைக்கப்படும் வேதங்களின் கட்டளைகள் தீங்கற்றவை, உழைப்பால் அடையப்படும் செல்வம் தீங்கற்றது; ஆனால், அவற்றின் நடைமுறைகளில் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, அவை தீமையின் ஊற்றுக்கண்களாகின்றன {பாவத்தைத் தருகின்றன}" {என்றார் சௌதி}[11].(272)
No comments:
Post a Comment