பதிவின் சுருக்கம் : மேனகைக்குப் பிறந்த பிரமத்வரையின் கதை; சியவனனின் பேரன் ருரு; பிரமத்வரையை விரும்பிய ருரு; பிரமத்வரைக்கும், ருருவுக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்; மணப்பெண்ணைக் கடித்த பாம்பு; தனிமையில் சென்ற ருரு....
சௌதி சொன்னார், "ஓ பிராமணரே, பிருகுவின் மைந்தன் சியவனன், தனது மனைவி சுகன்யாவின் {சுகன்னியின்} கருவறையில் ஒரு மைந்தனைப் பெற்றெடுத்தான். அந்த மைந்தன்தான் ஒப்பற்ற சக்தி கொண்ட, புகழ்பெற்ற பிரமதி ஆவான்.(1) பிரமதி கிரீடச்சி {கிருதாசி} கருவறையில் ருருவைப் பெற்றான். ருரு, தனது மனைவி பிரமத்வரையின் மூலம் சுனகன் என்ற மகனைப் பெற்றான்.(2) ஓ பிராமணரே, அபரிமிதமான சக்தி கொண்ட ருருவின் வரலாற்றை முழுவதுமாகக் கூறுகிறேன் கேட்பீராக.(3)
முன்பொரு காலத்தில் தவசக்தியும், கல்வியும், அனைத்துயிரிடமும் அன்பு செலுத்தும் குணமும் கொண்ட ஸ்தூலகேசர் என்ற ஒரு முனிவர் இருந்தார்.(4) ஓ பிராமண முனிவரே {சௌனகரே}, அந்த நேரத்தில், கந்தர்வர்களின் மன்னன் விஸ்வாவசு, தேவலோக நடனமங்கை மேனகையுடன் நெருக்கமாக இருந்தான்.(5) ஓ பிருகுவின் வழித்தோன்றலே {சௌனகரே}, அந்த அப்சரஸ் மேனகை, அவளது நேரம் நெருங்கியதும், ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கருகே ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.(6)
முன்பொரு காலத்தில் தவசக்தியும், கல்வியும், அனைத்துயிரிடமும் அன்பு செலுத்தும் குணமும் கொண்ட ஸ்தூலகேசர் என்ற ஒரு முனிவர் இருந்தார்.(4) ஓ பிராமண முனிவரே {சௌனகரே}, அந்த நேரத்தில், கந்தர்வர்களின் மன்னன் விஸ்வாவசு, தேவலோக நடனமங்கை மேனகையுடன் நெருக்கமாக இருந்தான்.(5) ஓ பிருகுவின் வழித்தோன்றலே {சௌனகரே}, அந்த அப்சரஸ் மேனகை, அவளது நேரம் நெருங்கியதும், ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கருகே ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.(6)
புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தையை அவள் ஆற்றங்கரையிலேயே விட்டுச் சென்று விட்டாள். ஓ பிராமணரே {சௌனகரே}, மேனகை என்ற அந்த அப்சரஸ் இரக்கத்தையும், வெட்கத்தையும் துறந்து அங்கிருந்து சென்றுவிட்டாள்.(7) பெரும் தவவலிமை பொருந்திய ஸ்தூலகேசர், ஆள் நடமாட்டமில்லாத நதிக்கரைப் பகுதியில் அந்தக் குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தையானது இறப்பில்லாதவர்களின் {தேவர்களின்} குழந்தை என்றும், அழகால் ஒளிவீசும் ஒரு பெண்குழந்தை என்றும் கண்டுகொண்டார்.(8,9) அந்தப் பெரும் பிராமணரும், முனிவர்களில் முதன்மையானவருமான ஸ்தூலகேசர், இரக்கத்தினால் {மனம்} நிறைந்து அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தார். அந்தக் குழந்தையும் அவருடைய புனிதமான இருப்பிடத்திலேயே {ஆசிரமத்திலேயே} வளர்ந்தாள்.(10)
உயர்ந்த மனம் படைத்தவரும், ஆசிர்வதிக்கப்பட்டவருமான ஸ்தூலகேசர் தெய்வீக விதிகளுக்குட்பட்டு {சாஸ்திரங்களுக்குட்பட்டு} பிறந்ததிலிருந்து செய்யவேண்டிய சடங்குகளையெல்லாம் அந்தந்த காலத்தில் அக்குழந்தைக்குச் செய்தார்.(11) தனது நற்குணங்களாலும், அழகாலும், மற்றும் எல்லாப் பண்புகளாலும் அனைத்துப் பெண்களையும் அவள் மிஞ்சி நின்றதால், பிரமத்வரை[1] என்று அந்த முனிவர் அவளை அழைத்தார்.(12) தெய்வத்திற்கு அஞ்சி நடக்கும் ருரு, ஒரு நாள் ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கு அருகே இருந்த பிரமத்வரையைக் கண்டு, காம தேவனின் {மன்மதனின்} கணையால் இதயத்தில் துளைக்கப்பட்டவன் ஆனான்.(13) ருரு, தனது நண்பர்கள் மூலம், பிருகுவின் மகனான தனது தந்தை பிரமதி, தன் ஆசையை அறியும்படி செய்தான்.
[1] பிரமதா என்றால் பெண்கள் என்று பொருள். வரா என்றால் சிறந்தவள் என்று பொருள். எனவே, பிரமத்வரா என்பது பெண்களிற்சிறந்தவள் என்ற பொருளைத் தரும்.
பிரமதி தனது மகனுக்காக மிகவும் புகழ்வாய்ந்த ஸ்தூலகேசரிடம் அவளைக் {பிரமத்வரையைக்} கேட்டான்(14). அவளது வளர்ப்புத்தந்தை {ஸ்தூலகேசர்}, அந்தக் கன்னிப்பெண் பிரமத்வரையை ருருவுக்கு நிச்சயித்துக் கொடுத்தார். திருமணம் அடுத்து வரும் வர்க தைவதா {பூரம்} நட்சத்திரத்தில்[2] என நிச்சயமானது.(15)
[2] கும்பகோணம் ஹஸ்தம் நட்சத்திரம் என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே பூரம் நட்சத்திரம் என்றே இருக்கிறது.
திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு, அந்த அழகான கன்னிப்பெண் மற்ற பெண்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது,(16) விதி வசத்தால் அவளது நேரம் நெருங்கி வந்தது. வழியில் சுருண்டு கிடந்த ஒரு பாம்பைக், கவனியாமல், அதை மிதித்துவிட்டாள்.(17) அந்த ஊர்வனவும் {பாம்பும்}, விதியின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் தூண்டப்பட்டு, கவனக்குறைவாக இருந்த அவளது உடம்பில் தனது நஞ்சுப் பற்களைச் செலுத்தியது.(18)
பாம்பால் கடிபட்டதும், அவள் {பிரமத்வரை} உணர்விழந்து தரையில் விழுந்தாள். அவளது நிறம் மங்கி ஒளி குன்றியது.(19) கலைந்த கேசத்துடன் கிடந்த அவள் துன்பத்தைத் தருகின்ற ஒரு காட்சி பொருளானாள். காண்பதற்கு இனிமையானவளான அவள் இறந்து கிடப்பதைக் காண்பது வேதனையைத் தந்தது.(20) விஷம் ஏறி, தரையில் விழுந்து கிடந்த அந்தக் கொடியிடையாள், தூங்குபவளை போலக் காட்சியளித்து, அந்நிலையிலும், உயிரோடு இருந்தபோதை விட அழகாக இருந்தாள்.(21)
வளர்ப்புத் தந்தையும் {ஸ்தூலகேசரும்}, மற்ற முனிவர்கள் அனைவரும் அங்கு வந்து, அழகான தாமரை மலரைப் போலத் தரையில் அசைவில்லாமல் கிடக்கும் அவளைக் {பிரமத்வரையை} கண்டனர்.(22) சுவஸ்தியாத்ரேயர், மஹாஜானு, குசிகர், சங்கமேகலர்,(23) உத்தாலகர், கடர், அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஸ்வேதர், பரத்வாஜர், கௌணகுத்சியர், ஆர்ஷ்டிஷேணர், கௌதமர்,(24) பிரமதி, அவனது மகனான ருரு, மற்றும் அந்தக் கானகத்தில் வசிப்போர் ஆகியோர் அங்கே வந்தனர். பாம்பு கடித்ததால், தரையில் உயிரற்ற சடலமாகக் கிடக்கும் அந்த மங்கையைக் கண்டு அனைவரும் துக்கத்தில் அழுதனர். இந்த நிகழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட ருரு அந்த இடத்தைவிட்டு அகன்றான்." {என்றார் சௌதி}.(25)
No comments:
Post a Comment