Thursday, 28 January 2016

தாய் கத்ருவிடம் பாம்புகள் பெற்ற சாபம்! | ஆதிபர்வம் - பகுதி 20

ஆஸ்தீக பர்வம் - 8
பதிவின் சுருக்கம் : வினதைக்கும் கத்ருவுக்கும் இடையிலான பந்தயம்; தங்கள் தாயான கத்ருவிடம் சாபம் பெற்ற பாம்புகள்; கத்ருவின் சாபத்தை அங்கீகரித்த பிரம்மன்; விஷமுறிவு மருத்துவத்தைக் கசியபருக்குப் போதித்த பிரம்மன்...


சௌதி சொன்னார், "அமுதம் பாற்கடலில் எப்படிக் கடையப்பட்டது, பெரும் அழகும் ஒப்பிடமுடியாத சக்தியும் கொண்ட குதிரை உச்சைஸ்ரவஸ் எந்தச் சூழ்நிலையில் கிடைக்கப் பெற்றது போன்ற கதைகளை முழுமையாக உரைத்துவிட்டேன்.(1) இந்தக் குதிரையைக் குறித்துதான் கத்ரு வினதையிடம், "மனதிற்கினிய சகோதரி, உச்சைஸ்ரவம் எந்நிறம் கொண்டது என்பதை அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் சொல்வாயாக" என்று கேட்டாள்.(2) வினதை, "அந்தக் குதிரைகளின் இளவரசன் நிச்சயமாக வெண்மையானவன்தான். நீ என்ன நினைக்கிறாய் சகோதரி? இதைப்பற்றி நாம் பந்தயம் வைப்போம்" என்றாள் {வினதை}.(3) கத்ரு "ஓ இனிமையாகப் புன்னகைப்பவளே {வினதையே}, அக்குதிரையின் வால்பகுதி கருப்பு என்று நான் நினைக்கிறேன். அழகானவளே {வினதையே}, யார் தோற்கிறார்களோ அவர்கள் வெல்பவர்களுக்கு அடிமை என்று பந்தயம் வைப்போம்" என்றாள் கத்ரு."(4)

சௌதி தொடர்ந்தார், "இப்படியே ஓர் அடிமையாகத் தாழ்ந்த வேலை செய்ய ஒருவருக்கொருவர் பந்தயம் கட்டிக் கொண்ட அந்தச் சகோதரிகள், அடுத்த நாள் அந்தக் குதிரையை ஆராய்ந்து நிறைவு கொள்ளத் தீர்மானித்து வீட்டுக்குச் சென்றனர்.(5) கத்ரு, தனது சகோதரியை {வினதையை} ஏமாற்ற எண்ணங்கொண்டு, தான் அடிமையாகாமல் இருக்கும் பொருட்டு, தன் ஆயிரம் மகன்களிடமும் {பாம்புகளிடம்},(6) "வேகமாகச் சென்று அந்தக் குதிரையின் வால்பகுதியில் கருமையான முடிகளாக மாறி இருக்கும்படி" பணித்தாள். ஆனால் அவளது {கத்ருவின்} மக்களாகிய அந்தப் பாம்புகள், அவள் {கத்ரு} பணித்த வேலைக்குப் பணிய மறுத்தனர்.

அதனால் அவள் {கத்ரு} அவர்களை {பாம்புகளை} நோக்கி,(7) "பாண்டவப் பரம்பரையில் வருபவனும், விவேகமுள்ளவனுமான மன்னன் ஜனமேஜயன் நடத்தும் பாம்பு வேள்வியில், அக்னி உங்கள் அனைவரையும் உட்கொள்வானாக" என்று சபித்தாள்.(8) விதிவசத்தால், கத்ரு இப்படி மிகக்கொடூரமான சாபத்தை இடுவதைப் பெருந்தகப்பன் {பிரம்மன்} கேட்டான்.(9) பாம்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாகப் பெருத்திருப்பதைக் கண்டும், மற்ற உயிரினங்களின் நன்மைக்காகவும் கத்ருவின் இந்தச் சாபத்தைத் தேவர்கள் அனைவருடன் சேர்ந்து அவன் அங்கீகரித்தான்.(10)

பாம்புகள் மிகுந்த நச்சுத்தன்மையுடனும், பெரும் சக்தியுடனும், அதிகப் பலத்துடனும், எப்போதும் மற்ற உயிரினங்களைக் கடிக்கும் எண்ணத்துடன் இருப்பதாலும், பிற உயிர்களின் நன்மைக்காகவும், எல்லா உயிரினங்களையும் இழிவாக நடத்தும் அவற்றுக்கு, அவற்றின் தாயின் செய்கையானது பொருத்தமானதே. விதியானது மற்ற உயிரினங்களின் மரணத்தை விரும்புபவர்களுக்கு மரணத்தையே தண்டனையாகத் தரும். இவ்வாறெல்லாம் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட தேவர்கள் கத்ருவின் செயலை ஆதரித்தனர். {சாபத்தை அங்கீகரித்தனர்}.(11-13)

பிரம்மன் கசியபரை தன்னிடம் அழைத்து, "ஓ அனைவரையும் வெல்லக்கூடியவனே, தூய்மையானவனே, நீ பெற்றெடுத்த இந்தப் பாம்புகள் பெரும் உடலுடனும், கடுமையான விஷத்துடனும் இருக்கின்றன. எப்போதும் பிற உயிர்களைக் கடிக்கும் எண்ணங்கொண்ட இவை {பாம்புகள்} தங்கள் தாயாரால் சபிக்கப்பட்டுள்ளன. ஓ மகனே {கசியபனே}, அதற்காக நீ துயர் கொள்ளாதே.(14,15) பாம்பு வேள்வியில் பாம்புகளின் அழிவு என்பது முன்பே நிர்ணயிக்கப்பட்டதுதான்" என்று சமாதானம் சொன்னான். பிறகு, கடும் விஷத்தை முறிக்கும், விஷமுறிவு ஞானத்தை அந்தப் புகழ்பெற்றவருக்கு {கசியபருக்கு} உலகைப் படைத்த அந்தத் தெய்வீகமானவன் {பிரம்மன்} உபதேசித்தான்” {என்றார் சௌதி}.(16)

No comments:

தாய் கத்ருவிடம் பாம்புகள் பெற்ற சாபம்! | ஆதிபர்வம் - பகுதி 20

ஆஸ்தீக பர்வம் - 8 பதிவின் சுருக்கம் :  வினதைக்கும் கத்ருவுக்கும் இடையிலான பந்தயம்; தங்கள் தாயான கத்ருவிடம் சாபம் பெற்ற பாம்புகள்; கத்ருவி...