(பௌலோம பர்வம் - 7)
பதிவின் சுருக்கம் : நீர்ப்பாம்புகளுக்கு நேரும் அநீதி குறித்துச் சொன்ன பாம்பு; துந்துபா பாம்பின் முற்பிறவி வரலாறு; சகஸ்ரபத் எனும் முனிவன்...
சௌதி சொன்னார், "{பாம்பின்} அந்த வார்த்தைகளைக் கேட்ட ருரு, "எனது உயிருக்கு ஒப்பான, எனது அன்பு மனைவி ஒரு பாம்பால் கடிக்கப்பட்டாள். ஓ பாம்பே, அதுமுதல் எனது வழியில் வரும் எந்தப் பாம்பையும் கொல்வது எனும் பயங்கரமான உறுதிமொழியை ஏற்றுள்ளேன். எனவே, இப்போது உன்னை நான் அடிக்கப் போகிறேன். நீ உனது உயிரை இழக்கப் போகிறாய்" என்றான்.(1,2)
அதற்குத் துந்துபா, "ஓ பிராமணா, மனிதர்களைக் கடிக்கும் பாம்பினம் வேறு வகை. பெயரளவில் மட்டுமே பாம்புகளாக இருக்கும் துந்துபாக்களை {நீர்ப்பாம்புகளை} நீ கொல்வது தகாது.(3) கடிக்கும் வகையிலான பாம்புகளின் நற்பேறுகள் எங்களுக்கு {நீர்ப்பாம்புகளுக்கு} கிடைப்பதில்லை. ஆனால் அவற்றுக்கு நேரும் கெடுதிகள் அனைத்தும் எங்களுக்கும் {நீர்ப் பாம்புகளுக்கு} நேருகின்றன. அவற்றின் துயரம் எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் அவற்றின் மகிழ்ச்சி எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஆகையால் தவறான புரிதலால் துந்துபாக்களைக் {டுண்டுபங்களைக் = நீர்ப்பாம்புகளைக்} கொன்றுவிடாதே" என்றது."(4)
"சௌதி தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைப் பாம்பிடமிருந்து கேட்ட முனிவர் ருரு, அது பயத்தில் திகைத்து நிற்பதையும், அது நீர்ப்பாம்பே என்பதையும் கண்டு, அந்தத் துந்துபாவைக் {நீர்ப்பாம்பை} கொல்லவில்லை.(5) ஆறு குணங்களைக் கொண்ட முனிவனான அந்த ருரு, "ஓ பாம்பே, முழுவதுமாகச் சொல். இந்த உருவத்தில் இருக்கும் நீ யார்?" என்றான்.(6) அதற்கு அந்தத் துந்துபா, "ஓ ருரு, முன்பு நான் சஹஸ்ரபத் என்ற பெயர் கொண்ட ஒரு முனிவனாக இருந்தேன். ஒரு பிராமணனின் சாபத்தால் இந்தப் பாம்புருவிற்கு மாறினேன்" என்றது.(7) ருரு, "ஓ பாம்புகளில் சிறந்தவனே, கோபத்தில் இருந்த பிராமணனின் சாபத்துக்கு நீ ஏன் ஆளானாய்? இன்னும் எவ்வளவு காலத்துக்கு உன்னுடைய {இந்த} பாம்புருவம் தொடரும்?" என்று கேட்டான்.(8)
No comments:
Post a Comment