(பௌலோம பர்வம் - 8)
பதிவின் சுருக்கம் : சஹஸ்ரபத்தும் ககமனும்; ககமனை அச்சமூட்டிய சஹஸ்ரபத்; சஹஸ்ரபத் பெற்ற சாபம்; சகஸ்ரபத்துக்கு அளிக்கப்பட்ட சாப விமோசனம்...
சௌதி தொடர்ந்தார், ``அந்தத் துந்துபா பாம்பானது {சஹஸ்ரபத்} ருருவிடம், "முன்பு ஒரு காலத்தில், ககமன் என்ற பெயரில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.(1) அவன் பேச்சில் அவசரப்படுபவனாகவும், கடுந்தவங்களின் பயனால் ஆன்மச் சக்தி கூடியவனாகவும் இருந்தான். ஒருநாள் அவன் {ககமன்} நெருப்பு வேள்வி (அக்னி ஹோத்ரம்) செய்து கொண்டிருக்கும்போது, புற்களால் பாம்பு போன்ற தோற்றத்தைச் செய்து, அதைக்காட்டி விளையாட்டுக்காக அவனை {ககமனை} அச்சுறுத்தினேன். அவன் உடனே மயக்கமுற்று விழுந்தான்.(2) உண்மை பேசுபவனும், தனது விரதங்களில் உறுதியாய் இருக்கும் துறவியுமான அவன் புலனுணர்வு மீண்டவுடன், கோபம் கொண்டு,(3) "சக்தியில்லாத பொய்ப்பாம்பைக் காட்டி என்னை அச்சுறுத்தினாய் ஆதலால், என் சாபத்தினால் நீ நஞ்சில்லாப் பாம்பாகப் போவாயாக" என்ற சபித்தான்.(4) ஓ துறவியே, எனக்கு அவனது தவமகிமை தெரியும், ஆகையால்,(5) கலங்கிய உள்ளத்துடன், கைகூப்பிக் குனிந்து, "நண்பா, விளையாட்டுக்காக, உன்னை மகிழ்விக்கவே அப்படிச் செய்தேன்.(6) என்னை மன்னிப்பதே உனக்குத் தகும். உன் சாபத்தைத் திருப்பி எடுத்துக் கொள்வாயாக" என்றேன்.
அப்படிக் கலங்கிய நிலையில் என்னைக் கண்ட அந்தத் துறவி {ககமன்}, சற்றே நெகிழ்ந்து சூடான கடுமையான மூச்சுடன், "நான் சொன்னது நடக்கவே வேண்டும்.(7,8) நான் சொல்வதைக் கேட்டு உனது இதயத்தில் பதிய வைத்துக் கொள்வாயாக.(9) ஓ நல்லவனே, பிரமதியின் தூய்மையான மைந்தன் ருரு எப்போது உன் முன் தோன்றுவானோ, அப்போது அவனைக் கண்ட மாத்திரத்தில் உனக்குச் சாப விடுதலை கிடைக்கும்" என்றான் {ககமன்}.(10)
நீயே அந்தப் பிரமதியின் மைந்தன் ருரு. எனது சுய உருவை அடைந்ததும், உனக்கு ஒரு நல்லதைச் சொல்கிறேன்" என்றான் துந்துபா {சஹஸ்ரபத்}.(11)
"அப்படிச் சொன்ன பிராமணர்களில் சிறந்தவனான அந்த ஒப்பற்ற மனிதன் {சஹஸ்ரபத்}, தனது பாம்பு வடிவம் நீங்கிப் பிரகாசமான உண்மை வடிவத்தை அடைந்தான்.(12) அதன்பிறகு சிறப்புமிக்க சக்தி கொண்ட ருருவிடம், "ஓ படைத்தவற்றில் முதன்மையானவனே, மனிதர்களுக்கு உயர்ந்த அறம் கொல்லாமையே.(13) எனவே, எந்தப் பிராமணனும் எந்த உயிரினத்தின் உயிரையும் எடுக்கக்கூடாது. பிராமணன் எப்போதும் மென்மையானவனாகவே இருக்க வேண்டும். இதுவே வேதங்களின் மிகப் புனிதமான விதி.(14) ஒரு பிராமணன் வேதங்களையும், வேதாங்கங்களையும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். உயிரினங்களுக்குக் கடவுள் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். எப்படி வேதங்களை நினைவில் வைத்திருப்பது முதற்கடமையோ அவ்விதமே எல்லா உயிர்களுக்கு நன்மை கருதுவதும், உண்மையோடு இருப்பதும், மன்னிப்பதும் {கடமையே} ஆகும். உனது கடமை, க்ஷத்திரியரின் கடமையன்று.(15,16) கடுமையாக நடந்து கொள்வது, செங்கோலுடன் அதிகாரம் செய்வது, குடிமக்களை முறையாக ஆள்வது ஆகியவை க்ஷத்திரியனின் கடமைகள். ஓ ருருவே, முன்பொரு காலத்தில் ஜனமேஜயன் பாம்புகளின் அழிவிற்காக ஒரு வேள்வி நடத்தியபோது[1] வேத சாத்திரங்களில் தேர்ந்தவரும், தவசக்தி மிக்கவரும், இருபிறப்பாளர்களில் சிறந்தவருமான ஆஸ்தீகரால் எப்படி அந்தப் பயங்கொண்ட பாம்புகளுக்கு விடுதலை கிடைத்தது என்ற வரலாற்றைக் கேட்பாயாக" என்றான் {சஹஸ்ரபத்}" {என்றார் சௌதி}.(17,18)
[1] ஆக இந்த ருருவின் கதை மகாபாரதம் நடந்த காலத்திற்குப் பிந்தையது மட்டுமல்ல, மகாபாரதக் கதை நடந்து, கணேசரைக் கொண்டு வியாசர் எழுதிய பிறகு, ஜனமேஜயன் வேள்வியில் மகாபாரதம் வைசம்பாயனரால் உரைக்கப்பட்ட பிறகே நடந்திருக்கிறது. எனவே, இது வியாசரின் சீடரான தன் தந்தை ரோமஹர்ஷணரால் முன்பு நைமிசாரண்யத்தில் சொல்லப்பட்டது என்று சௌதியால் சொல்லப்படும் வரலாறேயன்றி, வைசம்பாயனராலோ, வியாசராலோ சொல்லப்பட்டது அல்ல என்பது இங்கே தெளிவாகிறது.
No comments:
Post a Comment