நைமிச வனத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்ததும், குலபதி என்று அழைக்கப்பட்ட சௌனகரால் நடத்தப்பட்டதுமான பனிரெண்டு வருட வேள்வியில் பங்கெடுத்த முனிவர்கள் முன்பு, புராணங்களில் தெளிந்த புலமை கொண்ட லோமஹர்ஷணரின் மகனான சௌதி நின்று கொண்டிருந்தார்.(1)
புராணங்களை ஆழ்ந்த கவனத்துடன் கற்றதனால் அவற்றை முழுமையாக அறிந்தவரான அவர் {சௌதி} குவிந்த கரங்களுடன், "மன்னன் ஜனமேஜயனின் நாக வேள்விக்கு, ஒரு காரணமாயிருந்த உதங்கனின் வரலாற்றைக் கோடிட்டுக் காட்டிவிட்டேன்? மரியாதைக்கு உரியவர்களே, இப்போது நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன சொல்லட்டும்?" என்று கேட்டார்.(2)
அதற்கு அந்தப் புனிதமானவர்கள், "ஓ லோமஹர்ஷணரின் மகனே {சௌதியே}, எங்களுக்குக் கேட்பதில் ஆர்வமுள்ளதையே உம்மிடம் கேட்போம், நீரும் ஒவ்வொரு கதையாகச் சொல்வீராக.(3) எங்கள் தலைவரான {குலபதியான} சௌனகர், தற்போது நெருப்புக்கடன் செய்யும் புனித அறையில் {அக்னி ஹோத்ர சாலையில்} இருக்கிறார்.(4) தேவர்களும், அசுரர்களும் சம்பந்தப்பட்ட கதைகளில், அவர் தேர்ந்த புலமையுள்ளவராவார். அவருக்கு மனிதர்கள், பாம்புகள், கந்தர்வர்கள் குறித்த வரலாறுகள் நன்றாகத் தெரியும்.(5) மேலும், ஓ சௌதியே! கல்விமானான அந்தப் பிராமணரே {சௌனகரே} இந்த வேள்விக்குத் தலைவராவார்.
தன் உறுதிகளுக்கு உண்மையுள்ளவராக, சாத்திரங்கள் மற்றும் ஆரண்யகத்தில் பண்டிதராக, உண்மை பேசுபவராக, அமைதியை விரும்புபவராக, புலன்களை அடக்கியவராக, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி நோன்புகளை நோற்பவராக இருக்கும் அவரே {சௌனகரே} {இதற்குத்} தகுதிவாய்ந்தவராவார்.(6,7) எங்கள் அனைவருக்கும் அவர் மதிப்புக்குறியவராவார். எனவே, அவருக்காகக் {சௌனகருக்காகக்} காத்திருப்பதே நமக்குத் தகும்.(8) அவர் எப்போது வந்து, உயர்ந்த மதிப்புடைய தன் இருக்கையில் {தலைமை ஆசனத்தில்} அமர்கிறாரோ, அப்போது அந்த இருபிறப்பாளர்களில் சிறந்தவர் {சௌனகர்} உம்மிடம் கேட்பனவற்றிற்குப் பதிலளிப்பீராக" என்றார்கள்.(9)
சௌதி, "அப்படியே ஆகட்டும். அந்த உயரான்ம தலைவர் {சௌனகர்} வந்து அமர்ந்ததும், அவரது கேள்விகளுக்கேற்றபடி, பல வகையான தலைப்புகளிலான புனிதமான கதைகளை நான் உரைப்பேன்" என்று சொன்னார்.(10)
சிறிது நேரங்கழித்து, தனது கடமைகள் அனைத்தையும் முடித்து, கடவுளரைத் துதிகளாலும் {மந்திரங்களாலும்}, ஆவிகளை {பிதிர்களை} நீர்க்காணிக்கையாலும் அமைதிப்படுத்திய அந்தச் சிறப்புவாய்ந்த அந்தணர் (சௌனகர்), பிறகு, நிம்மதியுடன் அமர்ந்திருந்தவர்களும், கடும் நோன்புகளைக் கொண்டவர்களுமான அந்தத் தவசிகளின் கூட்டத்துக்கு {சபைக்கு} எதிரில் சௌதி எங்கு அமர்ந்திருந்தாரோ அந்த வேள்வி நடக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தார். தத்தமது இருக்கையில் அமர்ந்திருந்த ரித்விக்குகள், சாத்யர்கள் ஆகியோருக்கு மத்தியில் அமர்ந்த அந்தச் சௌனகர் பின்வருமாறு பேசினார்.(11,12)
No comments:
Post a Comment