[3] கங்குலியில் சபாபர்வத்தில் 80 பகுதிகள் உள்ளன.
அதன்பிறகு மூன்றாவதாக வருவது (காடு தொடர்பான) ஆரண்யகம் என்றழைக்கப்படும் பர்வம் ஆகும்.(142,143) இந்தப் பர்வத்தில் பாண்டவர்கள் காட்டுக்குச் செல்வதும், ஞானியான யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து குடிமக்கள் செல்வதும்,(144) தன்னைச் சார்ந்திருக்கும் பிராமணர்களுக்கு உணவும், நீரும் அளிக்கத் தௌமியரின் சொல் கேட்டு யுதிஷ்டிரன் நாளின் தேவனை {சூரியனைத்} துதித்தலும் சொல்லப்பட்டுள்ளது; சூரியனின் அருளால் உணவை உண்டாக்குவது; தலைவனின் நன்மைக்காகவே எப்போதும் பேசும் விதுரனை திருதராஷ்டிரன் வெளியேற்றுதல்;(145,146) விதுரன் பாண்டவர்களிடம் வந்ததும், பின்னவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் மீண்டும் அவன் திரும்பச் சென்றதும்;(147) காட்டில் வாழ்ந்துவரும் பாண்டவர்களை அழிக்க, கர்ணனின் தூண்டுதலின் பேரில் துரியோதனன் திட்டம் தீட்டுவது;(148) வியாசர் வருவதும், காட்டுக்குப் போகும் துரியோதனனைத் தடுத்தலும்; சுரபியின் வரலாறு;(149) மைத்திரேயரின் வரவு; அவர் திருதராஷ்டிரனுக்கு விதித்த நடைமுறையும்; துரியோதனனுக்கு அவர் அளித்த சாபமும்;(150) போரில் பீமன் கிர்மீரனைக் கொல்வது; சகுனியால் சூதாட்டத்தில் வஞ்சகமாக யுதிஷ்டிரன் வீழ்த்தப்பட்டதைக் கேட்டுப் பாஞ்சாலர்களும், விருஷ்ணி குலத்தின் இளவரசர்களும் வருவது; கிருஷ்ணனின் கோபத்தைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} தணிப்பது;(151,152) மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} திரௌபதி அழுது புலம்புவது; கிருஷ்ணன் அவளுக்கு உற்சாகமூட்டுவது;(153) {வியாச} முனிவரால் இங்கே சௌபனின் வீழ்ச்சியும் விளக்கப்படுகிறது; கிருஷ்ணன் சுபத்திரையையும், அவள் பிள்ளையையும் {அபிமன்யுவையும்} துவாரகைக்கு அழைத்துப் போவது;(154) திருஷ்டத்யும்னன் திரௌபதியின் மகனை பாஞ்சாலம் அழைத்துப் போவது; அழகான துவைத வனத்திற்குப் பாண்டுவின் மைந்தர்கள் செல்வது;(155) பீமன், யுதிஷ்டிரன், திரௌபதி விவாதம்;(156) பாண்டவர்களிடம் வியாசரின் வருகை, பிராதிசிம்ரிதி என்ற சக்தியை அவர் யுதிஷ்டிரனுக்கு அளித்தல்;(157) அதன்பிறகு, வியாசர் புறப்பாடு, பாண்டவர்கள் காம்யக வனம் செல்வது; சக்தி வாய்ந்த ஆயுதங்களை {அஸ்திரங்களைத்} தேடி அர்ஜுனன் அலைவது;(158) வேடுவ ரூபத்தில் இருக்கும் மகாதேவனுடன் {சிவனுடன்} அர்ஜுனன் போர்புரிவது; லோகபாலகர்களைச் சந்தித்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெறுவது;(159) அவனது {அர்ஜுனனின்} இந்திரலோகப் பயணமும், அதன் விளைவாகத் திருதராட்டிரன் அடைந்த கவலையும்;(160) வழிபடத்தக்க பெருமுனிவர் பிருகதஸ்வரைச் சந்திக்கும் போது, அவரிடம் யுதிஷ்டிரனின் அழுகையும், துயருரைப்பும் விளக்கப்படுகிறது.(161)
இந்த இடத்தில்தான் புனிதமானதும், மிகத்துயர்நிறைந்ததும், தமயந்தியின் பொறுமையையும், நளனின் குணத்தையும் எடுத்துரைப்பதுமான நளனின் கதை சொல்லப்படுகிறது.(162) அதே பெருமுனிவரிடம் இருந்து யுதிஷ்டிரன் பகடையின் (சூதாட்டத்தின்) புதிர்களை {இரகசியம்} அறிவது; அதன்பிறகு, மேலுலகிலிருந்து பாண்டவர்கள் இருந்த இடத்திற்குப் பெருமுனி லோமசர் வருகை,(163) சகோதரன் அர்ஜுனன் சொர்க்கத்தில் இருப்பதைத் தெரிவித்த முனிவரை, அந்த உயர் ஆன்ம காட்டுவாசிகள் {பாண்டவர்கள்} வரவேற்றது;(164) புனிதப் பயணம் மேற்கொள்ளும் பாண்டவர்கள், பல்வேறு புண்ணியத்தலகளுக்குச் செல்வது;(165) பிறகு பெருமுனிவர் நாரதர் புண்ணியத்தலமான புடஸ்டாவுக்குப் புனிதப் பயணம் செல்வதும்; உயர் ஆன்மப் பாண்டவர்களின் புனிதப் பயணமும்.(166) இங்கேதான் இந்திரன் கர்ணனிடம் காதணிகளை வாங்குவது விளக்கப்படுகிறது. மேலும் இங்கேதான் கயனின் வேள்வி மகத்துவம் விளக்கப்படுகிறது.(167)
பிறகு அசுரன் வாதாபியை அகத்தியர் உண்பதும், வாரிசு பெறும் விருப்பத்தால் லோபாமுத்திரையைத் திருமணம் செய்வதும் சொல்லப்பட்டுள்ளது.(168) பிறகு பிள்ளைப் பருவம் முதலே ரிஷ்யசிருங்கர் பிரம்மச்சரிய வாழ்வை ஏற்ற கதை சொல்லப்படுகிறது; பிறகு ஜமதக்னி முனிவரின் மைந்தனும், பேராற்றல் கொண்டவருமான இராமரின் {பரசுராமரின்} வரலாறும்,(169) கார்த்தவீரியன் மற்றும் ஹைஹயர்களின் மரணமும் விளக்கப்படுகிறது; பிரபாசம் என்றழைக்கப்படும் புனிதத்தலத்தில் பாண்டவர்களும், விருஷ்ணிகளும் சந்திப்பது;(170) பிருகு முனிவரின் மைந்தனான சியவனன், சர்யாதி மன்னனின் வேள்வியில் அசுவினி இரட்டையர்களைச்
{மற்ற தேவர்களால் அவர்களுக்கு விலக்கப்பட்டிருந்த} சோம பானம் அருந்தச் செய்த நிகழ்வுடன் கூடிய சுகன்யாவின் கதையும், (அதன் மூலம் நன்றியுடன் கூடிய அசுவினி இரட்டையர்களிடம் இருந்து வரமாக) முடிவில்லாத இளமையைச் சியவனன் பெறுவதும் சொல்லப்படுகிறது[4]. பிறகு மன்னன் மாந்தாதாவின் வரலாறு விளக்கப்படுகிறது;(171,172) பிறகு ஜந்துவின் வரலாறு; மன்னன் சோமகன், தன் ஒரே மகனை (ஜந்துவை) வேள்வியில் காணிக்கையாக்கி, நூறு மகன்களை அடைந்தது;(173) பிறகு பருந்து மற்றும் புறாவின் அற்புத வரலாறு; இந்திரன், அக்னி மற்றும் தர்மனால் சோதிக்கப்படும் மன்னன் சிபி {சிபிச்சக்கரவர்த்தி};(174) வருணனின் மகனும், ஏரணவியலாளருமான {தர்க்கவியலாளருமான} வந்தினுக்கும், அஷ்டவக்கிர முனிவருக்கும் இடையில் ஜனகரின் வேள்வியில் நடக்கும் சச்சரவு;(175.176) பெரும் அஷ்டவக்கிரனால் வந்தின் {வாதில்} வீழ்த்தப்படுவதும், பெருங்கடலின் ஆழத்தில் இருந்து அம்முனிவரின் தந்தை விடுதலையடைவதும்.
[4] கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில், “பிருகுபுத்திரராகிய ச்யவனமுனி சர்யாதிமுனிவருடைய யாகத்தில் அசுவினிதேவர்களுக்கு ஸோம்பானம் செய்வித்ததையும், அசுவினிதேவர்கள் இந்தச் சியவனமுனிக்கு யௌவனம் கொடுத்ததையும் பற்றிய ஸுகன்னியின் உபாக்கியானமும், மாந்தாதாவென்னும் ராஜாவின் உபாக்கியானமும் இதிற்சொல்லப்பட்டிருக்கின்றன” என்றிருக்கிறது.
பிறகு யவக்கிரீதியின் கதை மற்றும் பெரும் ரைவ்யனின் கதை;(177) பிறகு கந்தமாதனத்திற்குப் புறப்பட்டு (பாண்டவர்கள்) நாராயண ஆசிரமத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டது; திரௌபதியின் வேண்டுகோளுக்கிணங்க கந்தமாதனத்தில் (இனிய நறுமணமிக்க மலரைத்தேடி) பீமன் மேற்கொள்ளும் பயணம்.(178) பீமன் தன் வழியில், ஒரு வாழைத்தோப்பில் வைத்து பெரும் ஆற்றலைக் கொண்ட பவனனின் மகனான {வாயு மைந்தன்} அனுமானைச் சந்திப்பது;(179) பீமன் தடாகத்தில் குளித்து, (தான் தேடி வந்த) நறுமணமிக்க மலருக்காகப் பிற மலர்களைப் அழிப்பது; வலிமிக்க ராட்சசர்களுடன் அவன் {பீமன்} போரிடுவது(180), பெரும் ஆற்றலைக் கொண்ட மணிமான் மற்றும் பிற யக்ஷர்களுடன் அவன் போரிடுவது; பீமன் அசுரன் ஜடனை அழிப்பது;(181) அரசமுனியான விருஷபர்வனை (பாண்டவர்கள்) சந்திப்பது; ஆர்ஷ்டிசேனரின் ஆசிரமத்திற்குப் புறப்பட்டு, அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வது;(182) (பழிதீர்ப்பதற்காக) திரௌபதியால் தூண்டப்படும் பீமன். பிறகு, கைலாச மலைச்சரிவில், மணிமான் தலைமையிலான வலிமைமிக்க யக்ஷர்களுடன் பீமசேனன் பயங்கரமாகப் போரிடுவது சொல்லப்படுகிறது; பிறகு வைஸ்ரவணனுடன் (குபேரனுடன்) பாண்டவர்கள் சந்திப்பதும், யுதிஷ்டிரனின் காரியத்திற்காகப் பல தெய்வீக ஆயுதங்களை அடைந்து வந்த அர்ஜுனனைச் சந்திப்பதும்;(183,184) ஹிரண்யபுரத்தில் வசிக்கும் நிவாதகவசர்களுடன் அர்ஜுனன் பயங்கரமாக மோதுவது;(185) பௌலோமர்கள் மற்றும் காலகேயர்களுடனும் மோதுவது; அர்ஜுனன் கரங்களில் அவர்களுக்கு ஏற்படும் அழிவு;(186) யுதிஷ்டிரனின் முன்னிலையில் தெய்வீக ஆயுதங்களைக் காட்சிப்படுத்தத் தொடங்கும் அர்ஜுனனும், அதைத் தடுத்த நாரதரும்;(187) கந்தமாதனத்தில் இருந்து பாண்டவர்கள் இறங்குவது; காட்டில் மலையைப் போன்ற பெரும்பாம்பொன்றிடம் {நகுஷனிடம்} பீமன் அகப்படுவது;(188) குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு யுதிஷ்டிரன் பதிலளித்ததும், அந்தப் பாம்பின் சுருளில் இருந்து {பீமன்} விடுபடுவது;(189) காம்யக வனத்திற்குப் பாண்டவர்கள் திரும்புவது.
இங்கேதான் வலிமைமிக்கப் பாண்டுவின் மகன்களை வாசுதேவன் {கிருஷ்ணன்} மீண்டும் சந்திப்பது விளக்கப்படுகிறது; மார்க்கண்டேயரின் வருகையும், அவரால் பல்வேறு கதைகள் உரைக்கப்படுதலும்(190,191), அந்தப் பெரும் முனிவரால் வேனனின் மகனான பிருதுவின் வரலாறு உரைக்கப்படுகிறது; சரஸ்வதி மற்றும் முனிவர் தார்க்ஷியரின் கதைகளும் உரைக்கப்படுகின்றன.(192) இதன் பிறகு, மத்ஸ்யத்தின் {மீனின்} கதை; மற்றும் பிற பழங்கதைகளை மார்க்கண்டேயர் உரைப்பது;(193) இந்திரத்யும்னன் மற்றும் துந்துமாரனின் கதைகள்; பிறகு கற்புடைய மனைவியின் வரலாறு; அங்கிரஸின் வரலாறு;(194) திரௌபதி மற்றும் சத்யபாமா சந்திப்பும், உரையாடலும்; துவைதவனத்திற்குப் பாண்டவர்கள் திரும்புவது;(195) கன்றுகளைக் கணக்கெடுத்தலும் {கோஷயாத்திரையும்}, துரியோதனன் கைப்பற்றப்படுவதும்; அந்தப் பொல்லாதவன் தூக்கிச் செல்லப்படும்போது அர்ஜுனன் அவனை மீட்பது;(196) யுதிஷ்டிரனின் மான் கனவு; பாண்டவர்கள் மீண்டும் காம்யக வனத்திற்குள் நுழைவதும்,(197) விரீஹித்ரௌணிகம் எனும் நெடுங்கதையும் இங்கே சொல்லப்படுகிறது. இங்கே துர்வாசரின் கதை உரைக்கப்படுகிறது;(198)
பிறகு ஆசிரமத்திலிருந்து ஜெயத்ரதனால் திரௌபதி அபகரிக்கப்படுவது; கடத்தியவனைப் பின்தொடர்ந்து சென்று பிடித்து, அவனது முடியை பீமன் சிரைப்பது ஆகியன இங்கே உரைக்கப்படுகின்றன. ராமன் தன் ஆற்றலால் எவ்வாறு போரில் ராவணனைக் கொன்றான் என்ற ராமனின் நெடும் வரலாறு இங்கே சொல்லப்படுகிறது. இங்கே சாவித்ரியின் கதையும் சொல்லப்படுகிறது;(199-201), இந்திரன் கர்ணனின் குண்டலங்களைப் பெற்று அதற்குப் பதிலாக, வீசப்பட்டால் ஒருவனை மட்டும் நிச்சயம் கொல்லக்கூடிய சக்தி ஆயுதத்தைக் கொடுப்பது.(202) (நீதி தேவன்) தர்மன் {யமன்} தன் மகனுக்கு (யுதிஷ்டிரனுக்கு) அறிவுரை வழங்கிய ஆரண்யம் என்றழைக்கப்படும் கதை; வரத்தை அடைந்து மேற்கு நோக்கிச் செல்லும் பாண்டவர்கள் இங்கு விவரிக்கப்படுகின்றனர்.(203) இவையே மூன்றாவது பர்வமான ஆரண்யக பர்வத்தில் வருவன. இருநூற்று அறுபத்து ஒன்பது {269} பகுதிகளுக்குள்[5] பதினோராயிரத்து அறுநூற்று அறுபத்து நாலு {11664} பாடல்களைக் {சுலோகங்களைக்} கொண்டது இந்தப் பர்வம்.
[5] கங்குலியில் வனபர்வத்தில் 313 பகுதிகள் இருக்கின்றன.
அதன்பிறகு வருவது விரிவானதும், விராடம் என்றழைக்கப்படுவதுமான பர்வமாகும்.(204-206) விராடனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் வரும் பாண்டவர்கள், அந்நகரத்தின் புறநகர்ப்பகுதியில் உள்ள மயானத்தில் ஒரு பெரிய சமி {வன்னி} மரத்தைக் கண்டு, அதில் தங்கள் ஆயுதங்களை {பதுக்கி} வைப்பது.(207) இங்கேதான் அவர்கள் {பாண்டவர்கள்} நகருக்குள் நுழைவதும், மாறுவேடத்தில் அங்கே தங்குவதும் உரைக்கப்படுகிறது. பிறகு, காமத்தால் மதியிழந்து திரௌபதியை வேண்டும் தீய கீசகனைப் பீமன் கொல்வது; இளவரசன் துரியோதனனால் புத்திசாலி ஒற்றர்கள் நியமிக்கப்படுவது; வலிமைமிக்கப் பாண்டு மகன்களைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் தோற்பது;(208-210) முதலில் திரிகர்த்தர்களால் விராடனின் பசுக்கள் கவரப்படுவதும்; அதைத் தொடர்ந்த பயங்கரப் போரும்;(211) பகைவனால் விராடன் கைப்பற்றப்படுவதும்; அவனைப் பீமசேனன் மீட்பதும்;(211) பாண்டவன் (பீமன்) பசுக்களை விடுவிப்பது;(212) குருக்களால் மீண்டும் விராடனின் பசுக்கள் கைப்பற்றப்படுவது; தனியொருவனான அர்ஜுனனால் போரில் குருக்கள் அனைவரும் வீழ்த்தப்படுவதும்;(213) மன்னனின் பசுக்கள் விடுவிக்கப்படுவதும்; சுபத்திரையின் மூலமான தன் மகனும், எதிரிகளை அழிப்பவனுமான அபிமன்யுவுக்காக விராடனின் மகள் உத்தரையை அர்ஜுனன் ஏற்பதும் சொல்லப்படுகின்றன. இவையே விரிவான நான்காம் பர்வமான விராட பர்வத்தின் உள்ளடக்கங்கள் ஆகும்.(214,215) பெருமுனிவரான வியாசர் அறுபத்தி ஏழு {67} பகுதிகளாக[6] இதைப் பிரித்து, இரண்டாயிரத்து ஐம்பது {2050} பாடல்களுக்குள் {சுலோகங்களுக்குள்} இதை அடக்கியுள்ளார்.(216,217)
No comments:
Post a Comment