Thursday, 28 January 2016

தாய் கத்ருவிடம் பாம்புகள் பெற்ற சாபம்! | ஆதிபர்வம் - பகுதி 20

ஆஸ்தீக பர்வம் - 8
பதிவின் சுருக்கம் : வினதைக்கும் கத்ருவுக்கும் இடையிலான பந்தயம்; தங்கள் தாயான கத்ருவிடம் சாபம் பெற்ற பாம்புகள்; கத்ருவின் சாபத்தை அங்கீகரித்த பிரம்மன்; விஷமுறிவு மருத்துவத்தைக் கசியபருக்குப் போதித்த பிரம்மன்...


சௌதி சொன்னார், "அமுதம் பாற்கடலில் எப்படிக் கடையப்பட்டது, பெரும் அழகும் ஒப்பிடமுடியாத சக்தியும் கொண்ட குதிரை உச்சைஸ்ரவஸ் எந்தச் சூழ்நிலையில் கிடைக்கப் பெற்றது போன்ற கதைகளை முழுமையாக உரைத்துவிட்டேன்.(1) இந்தக் குதிரையைக் குறித்துதான் கத்ரு வினதையிடம், "மனதிற்கினிய சகோதரி, உச்சைஸ்ரவம் எந்நிறம் கொண்டது என்பதை அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் சொல்வாயாக" என்று கேட்டாள்.(2) வினதை, "அந்தக் குதிரைகளின் இளவரசன் நிச்சயமாக வெண்மையானவன்தான். நீ என்ன நினைக்கிறாய் சகோதரி? இதைப்பற்றி நாம் பந்தயம் வைப்போம்" என்றாள் {வினதை}.(3) கத்ரு "ஓ இனிமையாகப் புன்னகைப்பவளே {வினதையே}, அக்குதிரையின் வால்பகுதி கருப்பு என்று நான் நினைக்கிறேன். அழகானவளே {வினதையே}, யார் தோற்கிறார்களோ அவர்கள் வெல்பவர்களுக்கு அடிமை என்று பந்தயம் வைப்போம்" என்றாள் கத்ரு."(4)

சௌதி தொடர்ந்தார், "இப்படியே ஓர் அடிமையாகத் தாழ்ந்த வேலை செய்ய ஒருவருக்கொருவர் பந்தயம் கட்டிக் கொண்ட அந்தச் சகோதரிகள், அடுத்த நாள் அந்தக் குதிரையை ஆராய்ந்து நிறைவு கொள்ளத் தீர்மானித்து வீட்டுக்குச் சென்றனர்.(5) கத்ரு, தனது சகோதரியை {வினதையை} ஏமாற்ற எண்ணங்கொண்டு, தான் அடிமையாகாமல் இருக்கும் பொருட்டு, தன் ஆயிரம் மகன்களிடமும் {பாம்புகளிடம்},(6) "வேகமாகச் சென்று அந்தக் குதிரையின் வால்பகுதியில் கருமையான முடிகளாக மாறி இருக்கும்படி" பணித்தாள். ஆனால் அவளது {கத்ருவின்} மக்களாகிய அந்தப் பாம்புகள், அவள் {கத்ரு} பணித்த வேலைக்குப் பணிய மறுத்தனர்.

அதனால் அவள் {கத்ரு} அவர்களை {பாம்புகளை} நோக்கி,(7) "பாண்டவப் பரம்பரையில் வருபவனும், விவேகமுள்ளவனுமான மன்னன் ஜனமேஜயன் நடத்தும் பாம்பு வேள்வியில், அக்னி உங்கள் அனைவரையும் உட்கொள்வானாக" என்று சபித்தாள்.(8) விதிவசத்தால், கத்ரு இப்படி மிகக்கொடூரமான சாபத்தை இடுவதைப் பெருந்தகப்பன் {பிரம்மன்} கேட்டான்.(9) பாம்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாகப் பெருத்திருப்பதைக் கண்டும், மற்ற உயிரினங்களின் நன்மைக்காகவும் கத்ருவின் இந்தச் சாபத்தைத் தேவர்கள் அனைவருடன் சேர்ந்து அவன் அங்கீகரித்தான்.(10)

பாம்புகள் மிகுந்த நச்சுத்தன்மையுடனும், பெரும் சக்தியுடனும், அதிகப் பலத்துடனும், எப்போதும் மற்ற உயிரினங்களைக் கடிக்கும் எண்ணத்துடன் இருப்பதாலும், பிற உயிர்களின் நன்மைக்காகவும், எல்லா உயிரினங்களையும் இழிவாக நடத்தும் அவற்றுக்கு, அவற்றின் தாயின் செய்கையானது பொருத்தமானதே. விதியானது மற்ற உயிரினங்களின் மரணத்தை விரும்புபவர்களுக்கு மரணத்தையே தண்டனையாகத் தரும். இவ்வாறெல்லாம் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட தேவர்கள் கத்ருவின் செயலை ஆதரித்தனர். {சாபத்தை அங்கீகரித்தனர்}.(11-13)

பிரம்மன் கசியபரை தன்னிடம் அழைத்து, "ஓ அனைவரையும் வெல்லக்கூடியவனே, தூய்மையானவனே, நீ பெற்றெடுத்த இந்தப் பாம்புகள் பெரும் உடலுடனும், கடுமையான விஷத்துடனும் இருக்கின்றன. எப்போதும் பிற உயிர்களைக் கடிக்கும் எண்ணங்கொண்ட இவை {பாம்புகள்} தங்கள் தாயாரால் சபிக்கப்பட்டுள்ளன. ஓ மகனே {கசியபனே}, அதற்காக நீ துயர் கொள்ளாதே.(14,15) பாம்பு வேள்வியில் பாம்புகளின் அழிவு என்பது முன்பே நிர்ணயிக்கப்பட்டதுதான்" என்று சமாதானம் சொன்னான். பிறகு, கடும் விஷத்தை முறிக்கும், விஷமுறிவு ஞானத்தை அந்தப் புகழ்பெற்றவருக்கு {கசியபருக்கு} உலகைப் படைத்த அந்தத் தெய்வீகமானவன் {பிரம்மன்} உபதேசித்தான்” {என்றார் சௌதி}.(16)

Wednesday, 27 January 2016

அமுதத்துக்காக தேவாசுரப் போர்! | ஆதிபர்வம் - பகுதி 19

ஆஸ்தீக பர்வம் - 7
பதிவின் சுருக்கம் : அமுதத்துக்காக நடந்த தேவாசுரப் போர்; ராகுவின் தலையைக் கொய்த நாராயணன்; போரை வென்ற தேவர்கள்; அமுதகலசத்தை நாராயணனிடம் கொடுத்த இந்திரன்...

அசுரர்கள் மற்றும் தேவர்களுடன் மோகினி
சௌதி சொன்னார், "தைத்தியர்களும் தானவர்களும் முதல்தரமான கவசங்களை அணிந்துகொண்டு ஆயுதங்களால் தேவர்களைத்[1] தாக்கினர்.(1) அந்த நேரத்தில் துணிவுள்ள தலைவனான விஷ்ணு, கவர்ச்சியான பெண்ணுருக் கொண்டு நரனுடன் சேர்ந்து தானவர்களின் கைகளிலிலிருந்து அமுதத்தைப் பறித்தான்.(2)


[1] தைத்தியர்கள் என்போர் திதி என்பவளுக்கும் கசியபருக்கும் பிறந்த பிள்ளைகளும், அவர்களது வம்சாவளியினரும் ஆவர். தானவர்கள் என்போர் தனு என்பவளுக்கும் கசியபருக்கும் பிறந்த பிள்ளைகளும், அவர்களது வம்சாவளியினரும் ஆவர். தேவர்கள் என்போர் அதிதி என்பவளுக்கும் கசியபருக்கும் பிறந்த பிள்ளைகளும், அவர்களது வம்சாவளியினரும் ஆவர். திதியும், தனுவும், அதிதியும் தக்ஷனின் மகள்கள் ஆவர். தக்ஷனின் 13 மகள்களைக் கசியபர் மணந்தார்.


"பெரும்பயத்தை உண்டாக்கக்கூடிய அந்த நேரத்தில் தேவர்கள் அமுதத்தை ஆவலுடன் விஷ்ணுவிடம் இருந்து பெற்றுக் குடித்தனர்.(3) தாங்கள் பெரிதும் விரும்பிய அமுதத்தைத் தேவர்கள் பருகிக் கொண்டிருக்கையில், ராகு என்ற தானவனும், தேவ வேடம் பூண்டு அமுதத்தைக் குடித்துக் கொண்டிருந்தான்.(4) அது ராகுவின் தொண்டைக்குள் செல்லும்போதுதான் சூரியனும், சந்திரனும் (அவனை அடையாளம் கண்டு) தேவர்களிடம் காட்டிக் கொடுத்தனர்.(5)

உடனே, அமுதத்தை அனுமதியின்றிப் பருகிய அந்தத் தானவனின் அலங்கரிக்கப்பட்ட தலையை நாராயணன் சக்கர ஆயுதத்தைக் கொண்டு வெட்டினான்.(6) அப்படிச் சக்கர ஆயுதத்தால் வெட்டுண்டதும், மலைமுகட்டை ஒத்திருந்ததுமான அந்தத் தானவனின் பெரிய தலை, வானத்தில் எழுந்து பயங்கரமாகக் கதறியது.(7) அந்தத் தானவனின் தலையற்ற உடல் பூமியில் விழுந்து உருண்டதால், மலைகளுடனும், கானகங்களுடனும், தீவுகளுடனும் இருந்த பூமி நடுங்கியது.(8) அச்சமயத்திலிருந்து ராகுவின் தலைக்கும் சூரிய சந்திரர்களுக்கும் நெடுநாள் பகை {தீராப்பகை} இருந்து வருகிறது. இந்த நாள்வரை ராகு சூரியனையும், சோமனையும் {சூரிய சந்திர கிரகணங்களின் போது} விழுங்கி வருகிறான்.(9)

அமுதம் பகிர்ந்தளித்த மோகினி
அதன் பிறகு நாராயணன் தனது கவர்ச்சிகரமான பெண்ணுருவை விடுத்து, பல ஆயுதங்களைத் தானவர்கள் மீது வீசி அவர்களை நடுங்கச் செய்தான்.(10) அப்படியே அந்த உப்புநீர் கடற்கரையில், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் பயங்கரமான போர் மூண்டது.(11) கூரிய ஈட்டிகளும், தோமரங்களும் பலதரமான ஆயுதங்களும் அனைத்து பக்கங்களிலும் ஆயிரக்கணக்கில் வீசப்பட்டன.(12) சக்கராயுதத்தால் தாக்கப்பட்டும், வாள், கணைகள், கதாயுதங்கள் இவற்றால் புண்பெற்றும் பெரும் எண்ணிக்கையிலான அசுரர்கள் இரத்தம் கக்கிப் பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்கள்.(13) இருபுறமும் கூரான வாட்களால் வெட்டப்பட்டு அசுரர்களின் உடல்களிலிருந்து, பிரகாசமாகத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்களின் தலைகள் போர்க்களத்தில் தொடர்ந்து விழுந்த வண்ணம் இருந்தன.(14) வல்லமை பொருந்திய அசுரர்கள், உடல் ரத்தத்தால் நனைக்கப்பட்டு எங்கும் இறந்து கிடந்தனர். அது பார்ப்பதற்குச் சிவப்பு நிற மலை முகடுகள் எங்கும் சிதறிக் கிடப்பது போல் இருந்தது.(15) பெரும் ஒளிவீசியபடி சூரியன் உதித்ததும்[2] ஆயிரமாயிரம் வீரர்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். எங்கும் துன்ப கூக்குரல்கள் கேட்டன.(16) தூரத்தில் இருந்து மோதிக் கொள்பவர்கள் இரும்பாலான ஏவுகணைகளைக் கொண்டு ஒருவரையொருவர் கீழே சாய்த்தனர். அருகில் இருந்து மோதிக் கொள்பவர்கள் கைமுட்டிகளின் குத்துக்களால் ஒருவரை மற்றவர் சாய்த்தனர்.(17) அங்குக் காற்றில் துன்ப ஒலிகளே நிறைந்திருந்தன. 'வெட்டு', 'குத்து', 'அவனை விடாதே', 'சாய்த்திடு', 'முன்னேறு' என்ற அலறல்கள் எப்போதும் கேட்டுக்கொண்டே இருந்தன.(18)


[2] கும்பகோணம் பதிப்பில் சூரியன் மறையும் காலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் சூரியன் சிவந்த போது என்றிருக்கிறது.

இப்படிப் போர் மூர்க்கமான முறையில் நடந்து கொண்டிருக்கையில், நரனும், நாராயணனும் களத்தில் இறங்கினர்.(19) நரனின் கைகளில் தெய்வீகமான வில்லைக் கண்ட நாராயணன், தானவர்களை அழிக்கும் தனது ஆயுதமான சக்கராயுதத்தை மனத்தில் நினைத்தான்.(20) எதிரிகளை அழிப்பதும், அக்னியையொத்த ஒளிகொண்டதும், போர்க்களத்தில் பயங்கரமானதுமான அந்தச் சுதர்சனச் சக்கரம், நினைத்த மாத்திரத்தில் வானிலிருந்து வந்தது.(21) அது {சுதர்சனம்} வந்ததும், பெரும் ஆற்றலுடையவனும், யானையின் துதிக்கைப் போன்ற கைகளையுடையவனுமான நாராயணன், இயல்புக்கு மீறிய காந்தியுடையதும், எரியும் தீயைப் போன்றதும், பயங்கரமானதும், எதிரிகளின் நகரங்களை அழிக்க வல்லதுமான அந்த ஆயுதத்தைப் பெரும் வேகத்தோடு வீசினான்.(22) யுக முடிவின் போது நெருப்பு எப்படி அனைத்தையும் உட்கொள்ளுமோ அப்படி, தீப்போன்று ஒளிர்ந்த அந்தச் சக்கரம் நாராயணனால் வேகமாக வீசப்பட்டவுடன் தொடர்ந்து எல்லா இடங்களிலும் விழுந்து தைத்தியர்களையும், தானவர்களையும் ஆயிரக்கணக்கில் எரித்தது.(23) சில நேரம் தீப்போல எரிந்து அவர்களை உட்கொண்டது, சில நேரம் வானிலிருந்து இறங்கிவந்து தாக்கியது, சில நேரம் பூதத்தைப் போல அவர்களின் உயிரைக் குடித்தது.(24)

மறுபுறத்தில் பெரும்பலம் பொருந்தியவர்களும், நெஞ்சுறுதி கொண்டவர்களுமான தானவர்கள், மழை பொழிந்த வெண்ணிற மேகங்களைப் போல் வானில் கிளம்பி, ஆயிரக்கணக்கான மலைகளை வீசி தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினர்.(25) மரங்களுடையதும், சமமான சிகரங்களுடையதுமான {சிகரங்கள் சரிந்ததுமான} அந்தப் பயங்கரமான மலைகள், வானிலிருந்து விழும்போது ஒன்றோடொன்று மோதிக்கொண்டு பெறும் உறுமல் ஒலியை உண்டாக்கின.(26) ஆயிரக்கணக்கான வீரர்கள் இடைவெளியின்றிக் கூச்சலிட்டதாலும், மலைகள் அதிலிருக்கும் காடுகளுடன் கீழே விழுந்ததாலும், காடுகளுடன் கூடிய பூமியானது நடுங்கிற்று. இப்படித் கணங்களும் {ருத்ரனைத் தொடர்பவர்கள்} அசுரர்களும் மோதிக்கொண்டிருக்கையில்,(27) நரன் தோன்றி, தனது பொன்தலைக் கணைகளால் அந்த மலைகளைத் தூள் தூளாக்கி சொர்க்கத்தைப் புழுதியால் மறைத்தான்.(28) இப்படித் தேவர்களால் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டதாலும், குழப்பப்பட்டதாலும் சீற்றமிகுந்த சக்கரமானது சொர்க்கத்தின் பகுதிகளையும் எரிகின்ற தழல் போலக் கலங்கடித்து அழுக்ககற்றி வருவதாலும், வலிமை வாய்ந்த தானவர்கள் பூமியின் குடலுக்குள்ளும், {பாதாளத்துக்குள்ளும்}, உப்பு நீர் கடலிலும் புகுந்தனர்.(29) வெற்றியடைந்த தேவர்கள், மந்தர மலைக்குத் தக்க மரியாதைகள் செய்து, அஃதை அதன் பழைய அடித்தளத்திலேயே {அது முன்பு இருந்த இடத்திலேயே} மீண்டும் நிறுவினர். அமுதுண்ட தேவர்கள் அவர்களது உற்சாகக்குரலால் தேவலோகத்தை எதிரொலிக்கச் செய்து விட்டு அவரவர் இருப்பிடத்திற்குச் சென்றனர்.(30,31) தேவர்கள் தேவலோகத்திற்கு வந்து உற்சாகமாக இருந்தனர். இந்திரனும் பிற தேவர்களும் அமுதத்தைப் பத்திரமாகப் பாதுகாக்கும் பொறுப்பை நாராயணனிடம் கொடுத்தார்கள்" {என்றார் சௌதி}.(32)

Tuesday, 26 January 2016

காலகூட நஞ்சையுண்ட மகேஸ்வரன்! | ஆதிபர்வம் - பகுதி 18

ஆஸ்தீக பர்வம் - 6
பதிவின் சுருக்கம் : மந்தர மலையைப் பெயர்த்தெடுத்த அனந்தன் என்ற பாம்பு; கடைவதற்காகப் பெருங்கடலை வேண்டிய தேவர்கள்; ஆமையின் முதுகில் மந்தர மலையை வைத்தது; வாசுகி என்ற பாம்பைக் கயிறாக்கி மந்தர மலையைக் கொண்டு அந்தப் பெருங்கடலைக் கடைந்த தேவர்களும், அசுரர்களும்; கடைந்ததில் இறுதியாக வந்த காலகூட நஞ்சு; பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் அந்த நஞ்சை விழுங்குவது; பெண்ணுரு கொண்ட நாராயணன்...

பாற்கடல் கடைதல்
"சௌதி சொன்னார், "மேகம்போன்ற முகடுகளைக் கொண்டதும், மந்தரம் என்றழைக்கப்பட்டதுமான ஒரு மலை இருந்தது. அந்தச் சிறந்த மலையெங்கும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்ட மூலிகைகள் நிறைந்திருந்தன.(1) எண்ணற்ற பறவைகள் தங்கள் மெல்லிசைகளை எழுப்பியும், விலங்குகள் இரையைத் தேடியும் அலைந்து கொண்டிருந்தன. தேவர்கள், அப்சரஸ்கள் மற்றும் கின்னரர்கள் அந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.(2) பதினோராயிரம் யோஜனைகள்[1] மேலெழுந்தவாரியும், அதே அளவு {சம பங்கு} கீழிறங்கியவாறும் அஃது இருந்தது.(3) தேவர்கள் கடலைக் கடையும் மத்தாக அந்த மலையைப் பயன்படுத்த எண்ணி, அதைப் பெயர்த்தெடுக்க முயன்றுத் தோற்றனர். ஆகவே அவர்கள், ஒன்றாக அமர்ந்திருந்த விஷ்ணு மற்றும் பிரம்மனிடம்,(4) "எங்கள் நன்மைக்காக இந்த மலையை எப்படிப் பெயர்த்தெடுப்பது என்று ஆலோசனை வழங்குவீராக" என்று வேண்டினர்."(5)


[1] அதாவது 88,000 மைல்கள் {1 யோஜனை = 8 மைல்கள்} மேலெழுந்தவாரியாக – புவி ஓட்டுக்கு மேல் தெரியும் பகுதி, கீழிறங்கியவாறு – பூமிக்குள் புதைந்து அமைந்த பகுதி

சௌதி தொடர்ந்தார், "ஓ பிருகு குல மைந்தரே{சௌனகரே}! விஷ்ணுவும் பிரம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.

அந்தத் தாமரைக்கண்ணன் (விஷ்ணு), கடினமான அவ்வரும்பணியைப் பாம்புகளின் இளவரசனான அனந்தனுக்குக் {திருமாலின் படுக்கையான ஆதிசேஷன் என்ற பாம்புக்கு} கொடுத்தான்.(6) ஓ பிராமணரே {சௌனகரே}, பிரம்மனாலும், நாராயணனாலும் அறிவுறுத்தப்பட்ட அந்தப் பலம்பொருந்திய அனந்தன், அந்த மலையை, அதன் கானகங்களுடனும், அவற்றில் வசித்த உயிர்களுடனும் பெயர்த்தெடுத்தான்.(7,8) தேவர்கள், கடலின் கரைக்கு அனந்தனுடன் வந்து, பெருங்கடலிடம் {சமுத்திரத்திடம்}, "ஓ கடலே! நாங்கள் உன்னைக் கடைந்து, அமுதத்தை எடுக்க வந்துள்ளோம்" என்றனர்.(9) அதற்கு அந்தப் பெருங்கடல், "அப்படியே ஆகட்டும், ஆனால் கிடைப்பனவற்றில் எனக்கும் பங்கு வேண்டும். கடையும்போது, அந்த மலையின் சுழற்சியால் ஏற்படும் கலக்கத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியும்" என்றது.(10) அதன்பிறகு தேவர்கள், ஆமை மன்னனிடம் {திருமாலின் கூர்ம அவதாரம்} சென்று, "ஓ ஆமை மன்னா! நீ அந்த மலையை உன் முதுகில் தாங்கிக் கொள்ள வேண்டும்" என்றனர்.(11) ஆமை மன்னனும் அதற்கு ஒப்புக்கொண்டதால், இந்திரன் மந்தர மலையை முன்னவனின் {ஆமையின்} முதுகில் வைக்கச் செய்தான்.(12)

தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாக வடித்து, வாசுகியை (பாம்பினை) கயிறாகப் பயன்படுத்தி, அமுதத்துக்காக அந்தக் கடலைக் கடைய ஆரம்பித்தனர். அசுரர்கள் வாசுகியின் தலைப் பக்கம் பிடித்துக் கொண்டனர், தேவர்கள் அவனது வால்பக்கம் பிடித்துக் கொண்டனர்.(13,14) அனந்தன், தேவர்களின் பக்கம் நின்று {தேவர்களின் நன்மைக்காக} வாசுகியின் தலையை உயர்த்துவதும், திடீரெனத் தாழ்த்துவதுமாக இருந்தான்.(15) தேவர்களும் அசுரர்களும் இழுத்த இழுப்பில், வாசுகியின் வாயிலிருந்து கரும்புகை நெருப்புடன் வெளிப்பட ஆரம்பித்தது.(16) அந்தப் புகை மேகமாக மாறி, இடி மின்னலுடன் கூடிய மழையைப் பொழிந்து களைத்துப் போன தேவர்களுக்குப் புத்துணர்ச்சி கொடுத்தது.(17) மத்தாகச் சுழன்ற மந்தர மலையில் இருந்து அனைத்துப் பக்கங்களிலும் விழுந்த மலர்களும் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன.(18)

ஓ பிராமணரே! {சௌனகரே}, கடலில் இருந்து ஒரு கடுமையான முழக்கம் கேட்டது. அஃது ஊழிக் காலத்தில் மேகங்கள் இடும் முழக்கத்திற்கு ஒப்பானதாக இருந்தது.(19) பெரிய நீர் விலங்குகள் அந்தப் பெரிய மலையின் சுழற்சியால் அந்த உப்பு நீரிலேயே தமது உயிரை விட்டன.(20) பாதாள உலகில் வசிப்பவர்களும், வருணனின் உலகில் வசித்தவர்களும் கொல்லப்பட்டனர்.(21) மந்தர மலை சுழன்று கொண்டிருக்கும்போது அதன் மீதிருந்து பறவைகளுடன் கூடிய பெரிய மரங்களும் வேருடன் பிடுங்கப்பட்டு நீருக்குள் விழுந்தன.(22) மேலும் பல மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து அவ்வப்போது நெருப்பை உண்டாக்கின. அப்படி அந்த மலை மின்னலுடன் கூடிய கருமேகம் போல் காட்சியளித்தது. (23) ஓ பிராமணரே! {சௌனகரே}, நெருப்புப் பரவி சிங்கங்களும், யானைகளும், மற்ற உயிரினங்களும் அதில் சாம்பலாகின.(24) பிறகு இந்திரன் பெரும் மழையைப் பொழிந்து அந்த நெருப்பை அடக்கினான்.(25)

ஓ பிராமணரே! {சௌனகரே}, இப்படியே கடைந்துகொண்டு சிலகாலம் ஆனதும், மரங்களின் பாலும் அமுதத்தின் தன்மை கொண்ட மூலிகைகளும் ஒன்றாகக் கலந்து அந்தக் கடலில் கலந்தது.(26) தேவர்கள், அந்தக் கூழுடனும், தங்கச்சாற்றுடனும் {தங்கரஸத்துடனும்} கலந்த நீரைக் குடித்தே அமரத்துவம் அடைந்தனர்.(27) கொந்தளித்த கடலின் பால் போன்ற நீர் {கொந்தளித்த அந்தப் பாற்கடல்} நன்றாகக் கடையப்பட்டு அந்தக் கூழான சாற்றின் தன்மையால் தெளிந்த நெய்யைப் போன்று காட்சியளித்தது. ஆனால் அப்போதும் அமுதம் தோன்றவில்லை.(28) தன் ஆசனத்தில் அமர்ந்திருந்த வரங்கொடுக்கும் பிரம்மன் முன்பு தேவர்கள் வந்து, "தகப்பனே, நாங்கள் களைப்படைந்தோம். மேலும் கடைவதற்கு எங்களிடம் பலம் இல்லை. அமுதம் இன்னும் உதிக்கவில்லை. எங்களுக்கு வேறு வழியில்லை. நாராயணனைத் தவிர எங்களுக்கு வேறு ஆதாரம் இல்லை {உதவுபவர் வேறு ஒருவருமில்லை}" என்றனர்.(29,30)

"இதைக் கேட்டதும் பிரம்மன், நாராயணனிடம், "ஓ தெய்வமே! தேவர்களுக்கு மீண்டும் கடலைக் கடைவதற்கான பலத்தை அருள்வாயாக" என்றான்.(31)

பிறகு நாராயணன் அவர்களது பல்வேறு வேண்டுதல்களை {பிரார்த்தனைகளை} நிறைவேற்ற உறுதிகூறி, "ஞானமுள்ளவர்களே, போதிய பலத்தை உங்களுக்குத் தருகிறேன். போய் மலையை மீண்டும் சரியான இடத்தில் வைத்து நீரைக் கடையுங்கள்" என்றார்.(32)

அப்படிப் பலத்தை மீண்டும் பெற்ற தேவர்கள் திரும்பவும் கடையத் தொடங்கினர்.(33) சிறிது காலத்திற்குப் பிறகு மென்மையான ஆயிரங்கதிர்களுடன் நிலவு (சந்திரன்) கடலில் இருந்து உதித்தான்.(34)

வெண்மையான உடையுடன் லட்சுமியும், அதன் பிறகு சோமமும், அதன்பிறகு வெள்ளைக் குதிரையும்,(35) அதன்பிறகு நாராயணனின் மார்பை அலங்கரிக்கும் தெய்வீக ரத்தினமான கௌஸ்துபமும் வெளிப்பட்டன.(36) லட்சுமி, சோமம், மனத்தின் வேகங்கொண்ட குதிரை என அனைவரும், மகிழ்ச்சியுடன் இருந்த தேவர்கள் முன்னிலையில் வந்தனர்.(37,38) அதன்பிறகு அமுதம் கொண்ட வெள்ளைப் பாத்திரத்தோடு தன்வந்தரி உதித்தான்.(39) அவனைப் பார்த்ததுமே, அசுரர்கள் "அஃது எங்களுடையது" என்று பெரிதும் கூச்சலிட்டனர்.(40)

நீண்ட நேரத்திற்குப் பிறகு, சிறந்த யானையான ஐராவதன், இரு ஜோடி வெள்ளைத் தந்தங்களுடனும், பெருத்த உடலுடனும் தோன்றினான். அவனை இடிக்குத் தலைவனான இந்திரன் எடுத்துக்கொண்டான்.(41) கடைதல் நடந்து கொண்டே இருந்தது. இறுதியாகக் காலகூட {ஹாலாஹலம் என்ற} நஞ்சு வெளிப்பட்டது[2].(42) புகையுடன் கூடிய நெருப்புடன் அஃது உலகத்தையே விழுங்கிவிடுவது போலத் தகித்தது. பயத்தைத் தரும் காலகூடத்தின் மணத்தை நுகர்ந்தே மூன்று உலகங்களும் உணர்விழந்தன.

[2] காலகூட நஞ்சுதான் முதலில் தோன்றியது என்று சொல்லும் பதிப்புகளும் இருக்கின்றன. அவையே சரியானதாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அமுதம் முதலிலேயே கிடைத்துவிட்டால், பிறகும் ஏன் கடலைக் கடைய வேண்டும்.

படைக்கப்பட்டவற்றின் பாதுகாப்புக்காக, பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் அந்த நஞ்சை எடுத்து விழுங்கினான்.(43) அந்தத் தெய்வீகமான மகேஸ்வரன் {சிவன்}, அந்த நஞ்சைத் தனது தொண்டையில் நிறுத்தினான். ஆகையால் அதுமுதல் அவன் நீலகண்டன் (நீல நிற தொண்டையுள்ளவன்) என அழைக்கப்படுகிறான் என்று சொல்லப்படுகிறது.(44) இந்த அற்புதமான நிகழ்வுகள் அனைத்தையும் கண்ட அசுரர்கள் நம்பிக்கையிழந்தனர். அமுதத்தையும், லட்சுமியையும் பெற தேவர்களைப் பகைத்துக் கொள்ளத் தயாராகினர்.(45)

அந்நேரத்தில் நாராயணன் தனது மயக்கும் மாய சக்தியின் உதவியால் (ஏமாற்றும் சக்தி) மதியைக் கவரும் பெண்ணுருக் கொண்டு தானவர்களிடம் இதமான காதல் மொழி பேசினான்.(46) தானவர்களும், தைத்தியர்களும் அந்த மங்கையின் பேரழகினாலும், கவர்ச்சியானாலும் மயக்கப்பட்டு, மதியிழந்து அனைவரும் சேர்ந்து அந்த அமுதத்தை அந்த அழகு மங்கையின் கையிலேயே கொடுத்தனர்" {என்றார் சௌதி}.(47)

Sunday, 24 January 2016

மேரு மலையில் தேவர்கள் தவம்! | ஆதிபர்வம் - பகுதி 17

ஆஸ்தீக பர்வம் - 5
பதிவின் சுருக்கம் : உச்சைஸ்வரவம் குறித்து விளக்கிய சௌதி; கடல் கடைந்த காரணத்தைக் கேட்ட சௌனகர்; அமுதத்திற்காக மேரு மலையில் தவமிருந்த தேவர்கள்; கடலைக் கடையச் சொன்ன நாராயணன்...

குதிரைகளின் அரசன் உச்சைஸ்ரவம்

சௌதி சொன்னார், "ஓ துறவியே, அந்தச் சமயத்தில் அந்த இரு சகோதரிகளும் {கத்ருவும், வினதையும்} கடலைக் {பாற்கடலைக்} கடையும் போது எழுந்ததும், தேவர்களால் வழிபடப்படுவதும், குதிரைகளின் ரத்தினமுமான {குதிரைகளின் அரசனான} தெய்வீகக் குதிரை உச்சைஸ்ரவஸ் அருகில் அணுகுவதைக் கண்டனர். தெய்வீகமானதும், அருள்நிறைந்ததும், அழியா இளமை கொண்டதும், படைப்புகளில் தலையாயப் படைப்பானதும், அடக்க முடியாத வீரியம் கொண்டதும், அனைத்து நற்குறிகளும் கொண்டதுமாக அந்தக் குதிரை {உச்சைஸ்ரவம்} அருளப்பட்டு இருந்தது"(1-3)

சௌனகர் {சௌதியிடம்}, "தேவர்கள் ஏன் அமுதத்துகாகக் கடலைக் கடைந்தனர்? பலம்பொருந்தியவனும் காந்திமிக்கவனுமான அந்தக் குதிரைகளில் சிறந்தவன் {உச்சைஸ்ரவன்} எப்போது, எச்சந்தர்ப்பத்தில் தோன்றினான்?" என்று கேட்டார்.(4)

சௌதி சொன்னார், ’ஒளிக்குவியல் போன்று பிரகாசிப்பதும், மேரு என்றழைக்கப்படுவதுமான ஒரு மலை இருந்தது. அதன் சிகரங்களில் விழும் தங்கம் போன்ற சூரிய ஒளியை அது பிரதிபலித்தது.(5) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் {அலங்கரிக்கப்பட்டது போல் இருப்பதும்} மிக அழகானதுமான அதில் தேவர்களும், கந்தர்வர்களும் உலவுவர். பாவங்கள் நிறைந்த மனிதர்களால் அந்த மலையை நெருங்கக்கூட முடியாது.(6) பயங்கரமான விலங்குகள் அந்த மலையின் சாரலில் அலைந்து கொண்டிருந்தன.(7) அது பல மூலிகைகளால் ஒளிவீசுவதாக விளங்கியது. அது சொர்க்கத்தை முத்தமிடுவது போன்ற உயரத்துடன், மலைகளிலேயே முதன்மையானதாக விளங்கியது. சாதாரண மக்கள் அந்த மலையில் ஏறச் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாது. (8)

அந்த மலை மரங்களாலும், அருவிகளாலும் அருளப்பட்டு, இனிய குரலில் மெல்லிசை பாடும் பறவைகளை எதிரொலித்துக்கொண்டு இருந்தது. ஒருமுறை தேவர்கள் அந்த மலையின் சிகரத்திலே ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சபையிலே அமர்ந்திருந்தனர்.(9) தவங்களைப் பயின்றவர்களும், அமுதத்திற்காக அற்புத நோன்பிருந்தவர்களுமான அவர்கள், அப்போது அமுதத்தை அடைய மிகுந்த ஆவலுடன் இருந்தனர். தேவர்களின் சபையானது கவலையில் இருப்பதைக் கண்ட நாராயணன் பிரம்மனிடம்,(10,11) "தேவர்களையும் அசுரர்களையும் கொண்டு அந்தக் கடலைக் கடையச் செய்யும். அப்படிச் செய்தால், அதில் அமுதமும், மருந்துகளும், ரத்தினங்களும் கிடைக்கும்" {என்று சொல்லிவிட்டுத் தேவர்களிடம்}, "ஓ தேவர்களே! கடலைக் கடையுங்கள், அமுதத்தைக் கண்டடைவீர்கள்" என்றான்."(12-13)

Saturday, 23 January 2016

அன்னையைச் சபித்த அருணன்! | ஆதிபர்வம் - பகுதி 16

ஆஸ்தீக பர்வம் - 4
பதிவின் சுருக்கம் : ஆஸ்தீகரின் வரலாற்றைச் சௌதியிடம் கேட்ட சௌனகர்; அதற்கு முன்னோட்டமாகக் கசியபரின் மனைவிகளான கத்ரு மற்றும் வினதையின் கதையைச் சொல்ல ஆரம்பித்த சௌதி; பாம்புகளைப் பெற்ற கத்ரு; தன் இரு முட்டைகளில் ஒன்றை உடைத்த வினதை; ஊனத்துடன் பிறந்த அருணன்; தாயைச் சபித்த அருணன்; கருடன் பிறப்பு ...

சௌனகர், "ஓ சௌதி, கற்றவரும், அறம்சார்ந்தவருமான ஆஸ்தீகரின் வரலாற்றை விரிவாக மேலும் விளக்குவாயாக. அதை அறியும் ஆவல் எங்களுக்கு அதிகமாக உள்ளது.(1) ஓ தகுதியானவனே {மலர்ந்த முகத்தை உடையவனே}, இனிமையாகவும், சரியான உச்சரிப்புடனும் நீ பேசுகிறாய்; நாங்கள் உனது பேச்சால் பெரும் மனநிறைவை அடைந்துள்ளோம். நீயும் உனது தந்தை {ரோமஹர்ஷணர்} போலவே பேசுகிறாய்.(2) உன் தந்தை {ரோமஹர்ஷணர்}, எங்களை மனநிறைவு கொள்ளச் செய்ய எப்போதும் சித்தமாகவே இருப்பார். உனது தந்தை {ரோமஹர்ஷணர்} உன்னிடம் சொன்னவாறே அந்தக் கதையை விவரிப்பாயாக" என்று கேட்டார் {சௌனகர்}.(3)



சௌதி சொன்னார், "ஓ வெகுகாலம் வாழும் ஆசி கொண்டவர்களே, எனது தந்தையிடம் {ரோமஹர்ஷணரிடம்} கேட்டவாறே ஆஸ்தீகரின் வரலாற்றை விவரிக்கிறேன்.(4) ஓ பிராமணரே {சௌனகரே}, பொற்காலத்தில், பிரஜாபதிக்கு {தஷனுக்கு} இரு பெண் மக்கள் இருந்தனர். ஓ பாவமற்றவரே {சௌனகரே}, அந்தப் பெண்மக்கள் இருவரும் மிகுந்த அழகுடன் இருந்தனர்.(5) கத்ரு என்றும், வினதை என்றும் பெயர் கொண்ட அந்த இருவரும் கசியபருக்கு மனைவிகளாகினர்.(6) தமது இரு மனைவியரால் {கத்ரு, வினதையால்} கசியபர் பெரும் இன்பத்தை அடைந்தார். நிறைவடைந்த {திருப்தியடைந்த} அவர், பிரஜாபதியைப் {பிரம்மாவைப்} போல அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வரம் தருவதாகச் சொன்னார். தங்கள் தலைவன் தாங்கள் விரும்பிய வரத்தைத் தருவதாகச் சொன்னது கேட்டு அந்த இருமனைவியரும் {கத்ரு, வினதை} மிகவும் அகமகிந்தனர். கத்ரு, சம ஆற்றல் கொண்ட ஆயிரம் பாம்புகள் தனக்கு மகன்களாக வேண்டும் என்று விரும்பினாள்.(7,8) வினதையோ, கத்ருவின் அந்த ஆயிரம் பிள்ளைகளின் வல்லமையை (பலம், ஆற்றல், உருவம், வீரம் ஆகியவற்றில்) விஞ்சும் இரு மகன்கள் வேண்டும் என்று விரும்பினாள்.(9)

கத்ருவிற்கு அவளது தலைவன் பல குழந்தைகள் பெறும் வரத்தைக் கொடுத்தார். வினதையிடமும் கசியபர், "அப்படியே ஆகட்டும்" என்றார்.(10) வினதை தனது வேண்டுதல் நிறைவேறியதில் பெருமகிழ்ச்சி அடைந்தாள். ஆற்றலில் முதன்மையான இரு புதல்வர்களைப் பெற்று தனது வரம் நிறைவடைந்தது என்று மனநிறைவு கொண்டாள்.(11) கத்ருவும் தனது வேண்டுதலான ஆயிரம் மகன்களை அடைந்தாள். "உங்கள் கருக்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு, வரத்தால் மகிழ்ந்த தனது மனைவியர் இருவரிடமும் கூறிவிட்டுக் கானகத்திற்குச் சென்றார். {கசியபர்}."(12)

சௌதி தொடர்ந்தார், "இருபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {சௌனகரே}, வெகு காலத்திற்குப் பிறகு, கத்ரு ஆயிரம் முட்டைகளையும், வினதை இருமுட்டைகளையும் இட்டனர்.(13) அவர்களது பெண் பணியாட்கள், அந்த முட்டைகளைத் தனியாக வெதுவெதுப்பான பாத்திரங்களில் வைத்தனர். ஐநூறு {500} வருடங்கள் இப்படியே சென்றன.(14) கத்ருவால் இடப்பட்ட ஆயிரம் முட்டைகளும் வெடித்து, குஞ்சுகள் வெளியே வந்தன. ஆனால் வினதையின் இரட்டையர்கள் வெளிப்படவில்லை.(15)

பொறாமையால் உந்தப்பட்ட வினதை, தனது முட்டையில் ஒன்றை உடைத்தாள். மேலே வளர்ச்சியடைந்து, கீழே வளர்ச்சியடையாமல் {கால்கள் இல்லாமல்} இருந்த தன் கருவைக் கண்டாள். இதனால் அந்த முட்டையிலிருந்த குழந்தை {அருணன்} கோபம் கொண்டு,(16,17) "காலங்கனியும் முன்பே முட்டையை உடைத்ததால், நீ அடிமையாகச் சேவகம் செய்வாய். ஐநூறு வருடங்கள் பொறுத்திருப்பாயாக. உனது பொறுமையின்மையால் இன்னொரு முட்டையை உடைத்து அதை அழிக்காமலோ அல்லது பாதி வளர்ந்ததாய் ஆக்காமலோ இருந்தாயானால், அதிலிருந்து வரும் புகழ்பெற்ற குழந்தை உன்னை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பான். அந்தக் குழந்தை பலம்பெற முட்டையை அந்தக் காலம் வரை பத்திரமாகப் பாதுகாத்திருப்பாயாக"(18-21) என்று தனது தாய்க்கு {வினதைக்கு} சாபமிட்ட அந்தக்குழந்தை {அருணன்} வானத்துக்குப் பறந்தான்.

ஓ பிராமணரே, அவனே {அருணனே} காலையில் முதல் மணி நேரத்தில் தெரியும் சூரியனின் சாரதியாவான்! அதன்பிறகு ஐநூறு ஆண்டுகள் கடந்ததும், மீதமிருந்த மற்றொரு முட்டையை உடைத்துக் கொண்டு, பாம்புகளை உண்பவனான கருடன் வெளிப்பட்டான்.(22,23) ஓ பிருகு குலத்தின் புலியே {சௌனகரே}, ஒளியைக் கண்டதுமே, வினதையின் மகன் {கருடன்} தனது தாயை விட்டுப் பிரிந்தான். அந்தப் பறவைகளின் தலைவன் {கருடன்}, பசியை உணர்ந்து கட்டளையிடுபவர்களில் சிறந்தவரால் {பிரம்மனால்} தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் உணவைத் தேடி பறந்தான்”. {என்றார் சௌதி}.(24)

Friday, 22 January 2016

பெண் பாம்பை மணந்த ஜரத்காரு! | ஆதிபர்வம் - பகுதி 15

ஆஸ்தீக பர்வம் - 3
பதிவின் சுருக்கம் : பாம்புகளின் தாய் கத்ரு அளித்த சாபத்தில் இருந்து விடுபடவே வாசுகி தனது தங்கையை ஜரத்காருவுக்குத் திருமணம் செய்து கொடுத்தான் எனச் சௌதி சொல்லும் பீடிகை; ஆஸ்திகரின் வரலாறு சுருக்கமாக...

பாம்பு வேள்வி
சௌதி சொன்னார், "பிரம்மத்தை அறிந்த மனிதர்களில் முதன்மையானவர்களே, முன்பொரு சமயம் பாம்புகளின் தாய் {கத்ரு}, "காற்றைத் தேரோட்டியாகக் கொண்டவன் (அக்னி), ஜனமேஜயன் வேள்வியில் உங்களைச் சுட்டெரிப்பான்" என அந்தப் பாம்புகளைச் சபித்தாள்.(1) அந்தச் சாபத்தைச் சமன்செய்யவே {சாபத்தின் கொடுமையைத் தணிக்கவே} அந்தப் பாம்புகளின் தலைவன் {வாசுகி}, உயர்ந்த நோன்புகளை நோற்ற அந்த உயரான்ம முனிவருக்குத் {ஜரத்காருக்குத்} தனது தங்கையைக் {ஜரத்காருவை மணமுடித்து} கொடுத்தான்.(2) அந்த முனிவரும் {ஜரத்காருவும்} (சாத்திரங்களில்) சொல்லப்பட்டிருக்கும் முறையான சடங்குகளுடன் அவளை மணமுடித்தார். அவர்களுக்கு மகனாக உயரான்ம ஆஸ்தீகர் பிறந்தார்.(3) வேதங்களிலும் அதன் கிளைகளிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த அந்தப் புகழ்பெற்ற முனிவர் {ஆஸ்தீகர்} அனைத்திலும் சமமான கண்ணோட்டம் கொண்டவராக, தனது பெற்றோர் இருவரின் அச்சத்தையும் போக்கினார்.(4)

வெகு காலத்திற்குப் பிறகு, பாண்டவ வழியில் வந்த ஒரு மன்னன் {ஜனமேஜயன்} ஒரு பெரிய வேள்வியை நடத்தினான்.(5) அந்த {நாக} வேள்வி பாம்புகளின் அழிவிற்காக நடத்தப்பட்ட போது ஆஸ்தீகர், தனது சகோதரர்களும், தாய்வழி மாமன்களுமான அந்தப் பாம்புகளையும் மற்ற பாம்புகளையும் (நெருப்பு மரணத்திலிருந்து) காப்பாற்றினார். {ஜரத்காரு} தான் பிள்ளைப்பேறு பெற்றதால் அவரது மூதாதையர்களையும் விடுவித்தார்.(6,7) ஓ பிராமணரே {சௌனகரே}, {ஜரத்காரு} தனது கடுமையான விரதங்களாலும், தவத்தாலும், ஆழ்ந்த வேத கல்வியினாலும், தனது கடன்கள் அனைத்திலுமிருந்து விடுபட்டார். வேள்விகளால் தேவர்களை மனநிறைவு கொள்ளச் செய்து, பிரம்மச்சரியத்தால் முனிவர்களை மனநிறைவு கொள்ளச் செய்து, பிள்ளைப்பேறு பெற்றதால் தனது மூதாதையர்களையும் {யாயாவரர்களையும்} மனநிறைவு கொள்ளச் செய்தார்.(8,9)

இப்படியாகக் கடுமையான நோன்புகளை நோற்றவரான ஜரத்காரு, தனது மூதாதையர்களின் {யாயாவரர்களின்} தளையை விடுவித்து அவர்களுக்குத் தான் பட்டிருந்த பெருங்கடனைத் தீர்த்தார்.(10) இப்படிச் சிறந்த அறத்தைப் புரிந்த ஜரத்காரு, தனது மைந்தன் ஆஸ்தீகரை {சந்ததிக்காக} விட்டு பல வருடங்கள் கழித்து மேலுலகம் சென்றார். இதுவே ஆஸ்திகரின் கதை [1]; நான் உள்ளபடியே சொல்லிவிட்டேன். ஓ பிருகு குலத்தின் புலியே {சௌனகரே}, இன்னும் வேறு என்ன நான் சொல்ல வேண்டும்" {என்றார் சௌதி}.(11)

[1] ஜரத்காருவின் கதை இங்கே {ஆதிபர்வத்தின் பகுதிகள் 13 முதல் 15 வரை} சுருக்கமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ஆதிபர்வத்தின் பகுதிகள் 45 முதல் 48 வரை விரிவாக மீண்டும் சொல்லப்பட்டிருக்கிறது.

Thursday, 21 January 2016

வாசுகியின் தங்கை பெயரும் ஜரத்காரு! | ஆதிபர்வம் - பகுதி 14

ஆஸ்தீக பர்வம் - 2
பதிவின் சுருக்கம் : தனக்கான மணப்பெண்ணைத் தேடி உலகம் முழுவதும் அலைத்த ஜரத்காரு; வாசுகி என்ற பாம்பு தன் தங்கையை ஜரத்காருவுக்கு அளிக்கச் சம்மதித்தது; ஜரத்காருவின் திருமணம்...

சௌதி சொன்னார், "அந்தக் கடுமையான விரதங்களை மேற்கொள்ளும் பிராமணன் {ஜரத்காரு}, உலகம் முழுதும் தேடி அலைந்தும் மனைவி கிடைத்தாளில்லை.(1) ஒருநாள், அடர்ந்த கானகத்தின் ஆழத்திற்குள் சென்று, தனது மூதாதையர் சொன்னதை நினைவுகூர்ந்து, மெல்லிய குரலில் தனக்கு மனைவி வேண்டும் என்று மூன்று முறை வேண்டினார்.(2) அப்பொழுது வாசுகி {என்ற பாம்பு மன்னன்} எழுந்து, தனது தங்கையை {மனைவியாக} ஏற்றுக்கொள்ள அந்த முனிவருக்கு {ஜரத்காருவிற்குக்} கொடுத்தான். ஆனால், அந்தப் பிராமணர் அவளுக்கும் தனது பெயர் {ஜரத்காரு என்று} இருக்காது என்று நினைத்து அவளைப் பெற்றுக் கொள்ளத் தயங்கினார்.(3) அந்த உயரான்ம ஜரத்காரு தனக்குள் 'எனது பெயரில்லாத எந்தப் பெண்ணையும் நான் ஏற்க மாட்டேன்' என நினைத்துக் கொண்டு,(4) வாசுகியிடம், "ஓ பாம்பே, உனது தங்கையின் பெயர் என்ன என்ற உண்மையைக் கூறுவாயாக" என்று கேட்டார் {ஜரத்காரு}.(5)

வாசுகி, "ஓ ஜரத்காரு, இவள் எனது தங்கையாவாள், இவளது பெயரும் ஜரத்காருவே. இந்தக் கொடியிடை மங்கையை உமது மனைவியாக நான் உமக்குக் கொடுக்கிறேன்; ஏற்றுக்கொள்வீராக. ஓ பிராமணர்களில் சிறந்தவரே, உமக்காகவே இவளை வளர்த்தேன். அதனால் இவளை ஏற்றுக் கொள்வீராக" என்று கூறி தன் அழகான தங்கையைக் கொடுத்தான். பின் ஜரத்காருவும் அவளை உரிய சடங்குகளுடன் மணம் செய்து கொண்டார். {என்றார் சௌதி}.(6,7)

Tuesday, 19 January 2016

ஜரத்காருவும் யாயாவரர்களும்! | ஆதிபர்வம் - பகுதி 13

ஆஸ்தீகப் பர்வம் - 1

பதிவின் சுருக்கம் : தன் மூதாதையர்களான யாயாவரர்களைக் கண்ட ஜரத்காரு; ஜரத்காருவை நிந்தித்த யாயாவரர்கள்; திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த ஜரத்காரு...

சௌனகர் {சௌதியிடம்}, "மன்னர்களில் புலியான மன்னன் ஜனமேஜயன், எக்காரணம் கொண்டு பாம்புகளின் இனத்தை அழிக்கும் குறிக்கோளுடன் வேள்வி நடத்தினான்?(1) ஓ சௌதி, முழுக்கதையையும் எங்களுக்குச் சொல்வாயாக. இருபிறப்பாளரில் சிறந்தவரும், துறவிகளில் முதன்மையானவருமான ஆஸ்தீகர், சுடர்விட்டெரியும் நெருப்பிலிருந்து பாம்புகளை ஏன் காப்பாற்றினார்?(2) அந்தப் பாம்பு வேள்வியை நடத்திய ஏகாதிபதி {ஜனமேஜயன்} யாருடைய மைந்தன்? அந்த இருபிறப்பாளரில் {பிராமணர்களில்} சிறந்தவர் {ஆஸ்தீகர்} யாருடைய மைந்தன்? எங்களுக்குச் சொல்வாயாக" என்றார்.(3)

Sunday, 17 January 2016

உணர்விழந்த ருரு! | ஆதிபர்வம் - பகுதி 12

(பௌலோம பர்வம் - 9)
பதிவின் சுருக்கம் : ஜனமேஜயன் நடத்திய வேள்வி குறித்து ருரு சஹஸ்ரபத்திடம் கேட்பது; சஹஸ்ரபத் மறைந்துவிடுவது; ஓடிக் களைத்து உணர்விழந்த ருரு, தந்தையிடம் ஆஸ்திகர் வரலாறு கேட்பது ...

பிரமதியும் ருருவும்
{சௌனகர் மற்றும் முனிவர்களிடம்} சௌதி தொடர்ந்தார், "ருரு அதன்பிறகு, "இருபிறப்பாளரில் {பிராமணர்களில்} சிறந்தவரே {சஹஸ்ரபத்தே}, ஏன் ஜனமேஜயன் பாம்புகளின் அழிவை விரும்பினான்?(1) ஞானமிகுந்த ஆஸ்தீகர் ஏன் பாம்புகளைக் காப்பாற்றினார்? எப்படிக் காப்பாற்றினார்? அதை முழுவதும் அறிய ஆவலுடன் உள்ளேன்" என்றான்.(2)

முனிவர் {சஹஸ்ரபத்}, "ஓ ருருவே, இந்த முக்கியமான ஆஸ்தீக வரலாற்றை, பிராமணர்களின் உதடுகளால் {வாயிலாக} நீ அறிவாய்" என்று சொல்லி மறைந்து விட்டார்."(3)

சௌதி தொடர்ந்தார், "மறைந்த முனிவரைத் {சஹஸ்ரபத்தைத்} தேடி ருரு ஓடினான். அந்தக் கானகத்தில் அவரைக் கண்டுபிடிக்கமுடியாமல், களைத்துச் சோர்வடைந்து தரையில் விழுந்தான்.(4) முனிவர் {சஹஸ்ரபத்} சொன்னதை மனத்தில் நினைத்துப் பார்த்தான். மிகவும் குழம்பிப் போய்ப் புலன் உணர்வை இழந்தான்.(5) உணர்வு மீண்டதும், ருரு தனது இல்லத்திற்கு வந்து, தனது தந்தையிடம் {பிரமதியிடம்} இந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டான். அப்படிக் கேட்கப்பட்டதால், அவனது தந்தையும் {பிரமதியும்} கதையைச் முழுவதுமாகச் சொன்னார்" {என்றார் சௌதி}.(6)

Saturday, 16 January 2016

ருருவுக்கு சஹஸ்ரபத்தின் அறிவுரை! | ஆதிபர்வம் - பகுதி 11

(பௌலோம பர்வம் - 8)
பதிவின் சுருக்கம் : சஹஸ்ரபத்தும் ககமனும்; ககமனை அச்சமூட்டிய சஹஸ்ரபத்; சஹஸ்ரபத் பெற்ற சாபம்; சகஸ்ரபத்துக்கு அளிக்கப்பட்ட சாப விமோசனம்...

சௌதி தொடர்ந்தார், ``அந்தத் துந்துபா பாம்பானது {சஹஸ்ரபத்} ருருவிடம், "முன்பு ஒரு காலத்தில், ககமன் என்ற பெயரில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.(1) அவன் பேச்சில் அவசரப்படுபவனாகவும், கடுந்தவங்களின் பயனால் ஆன்மச் சக்தி கூடியவனாகவும் இருந்தான். ஒருநாள் அவன் {ககமன்} நெருப்பு வேள்வி (அக்னி ஹோத்ரம்) செய்து கொண்டிருக்கும்போது, புற்களால் பாம்பு போன்ற தோற்றத்தைச் செய்து, அதைக்காட்டி விளையாட்டுக்காக அவனை {ககமனை} அச்சுறுத்தினேன். அவன் உடனே மயக்கமுற்று விழுந்தான்.(2) உண்மை பேசுபவனும், தனது விரதங்களில் உறுதியாய் இருக்கும் துறவியுமான அவன் புலனுணர்வு மீண்டவுடன், கோபம் கொண்டு,(3) "சக்தியில்லாத பொய்ப்பாம்பைக் காட்டி என்னை

Wednesday, 13 January 2016

சஹஸ்ரபத் பெற்ற சாபம்! | ஆதிபர்வம் - பகுதி 10

(பௌலோம பர்வம் - 7)
பதிவின் சுருக்கம் : நீர்ப்பாம்புகளுக்கு நேரும் அநீதி குறித்துச் சொன்ன பாம்பு; துந்துபா பாம்பின் முற்பிறவி வரலாறு; சகஸ்ரபத் எனும் முனிவன்...

சௌதி சொன்னார், "{பாம்பின்} அந்த வார்த்தைகளைக் கேட்ட ருரு, "எனது உயிருக்கு ஒப்பான, எனது அன்பு மனைவி ஒரு பாம்பால் கடிக்கப்பட்டாள். ஓ பாம்பே, அதுமுதல் எனது வழியில் வரும் எந்தப் பாம்பையும் கொல்வது எனும் பயங்கரமான உறுதிமொழியை ஏற்றுள்ளேன். எனவே, இப்போது உன்னை நான் அடிக்கப் போகிறேன். நீ உனது உயிரை இழக்கப் போகிறாய்" என்றான்.(1,2)

அதற்குத் துந்துபா, "ஓ பிராமணா, மனிதர்களைக் கடிக்கும் பாம்பினம் வேறு வகை. பெயரளவில் மட்டுமே பாம்புகளாக இருக்கும் துந்துபாக்களை {நீர்ப்பாம்புகளை} நீ கொல்வது தகாது.(3) கடிக்கும் வகையிலான பாம்புகளின் நற்பேறுகள் எங்களுக்கு {நீர்ப்பாம்புகளுக்கு} கிடைப்பதில்லை. ஆனால் அவற்றுக்கு நேரும் கெடுதிகள் அனைத்தும் எங்களுக்கும் {நீர்ப் பாம்புகளுக்கு} நேருகின்றன. அவற்றின் துயரம் எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் அவற்றின் மகிழ்ச்சி எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஆகையால் தவறான புரிதலால் துந்துபாக்களைக் {டுண்டுபங்களைக் = நீர்ப்பாம்புகளைக்} கொன்றுவிடாதே" என்றது."(4)

"சௌதி தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைப் பாம்பிடமிருந்து கேட்ட முனிவர் ருரு, அது பயத்தில் திகைத்து நிற்பதையும், அது நீர்ப்பாம்பே என்பதையும் கண்டு, அந்தத் துந்துபாவைக் {நீர்ப்பாம்பை} கொல்லவில்லை.(5) ஆறு குணங்களைக் கொண்ட முனிவனான அந்த ருரு, "ஓ பாம்பே, முழுவதுமாகச் சொல். இந்த உருவத்தில் இருக்கும் நீ யார்?" என்றான்.(6) அதற்கு அந்தத் துந்துபா, "ஓ ருரு, முன்பு நான் சஹஸ்ரபத் என்ற பெயர் கொண்ட ஒரு முனிவனாக இருந்தேன். ஒரு பிராமணனின் சாபத்தால் இந்தப் பாம்புருவிற்கு மாறினேன்" என்றது.(7) ருரு, "ஓ பாம்புகளில் சிறந்தவனே, கோபத்தில் இருந்த பிராமணனின் சாபத்துக்கு நீ ஏன் ஆளானாய்? இன்னும் எவ்வளவு காலத்துக்கு உன்னுடைய {இந்த} பாம்புருவம் தொடரும்?" என்று கேட்டான்.(8)

Tuesday, 12 January 2016

பாம்பினத்தை அழிப்பதாக ருரு ஏற்ற உறுதி | ஆதிபர்வம் - பகுதி 9 (பௌலோம பர்வம் - 6)

பதிவின் சுருக்கம் : ருருவின் புலம்பல்; ருருவின் பாதி ஆயுளைக் கொண்டு மீண்டும் உயிர்பெற்ற பிரமத்வரை; ருரு பிரமத்வரை திருமணம்; துந்துபா பாம்பைக் கண்ட ருரு...

சௌதி சொன்னார், "பிரமத்வரையின் உயிரற்ற சடலத்தைச் சுற்றி புகழ்பெற்ற பிராமணர்கள் அமர்ந்திருக்கும்போது, பெரும் துக்கமடைந்த ருரு அடர்ந்த கானகத்தின் ஆழத்துக்குச் சென்று சத்தம்போட்டு கதறி அழுதான்.(1) துயரத்தால் உந்தப்பட்டுப் பரிதாபகரமாக ஒப்பாரி வைத்தான். தன் அன்பிற்குரியவளான பிரமத்வரையை நினைத்த ருரு தன் துக்கத்தைத் தீர்த்துக்கொள்ளப் பின் வரும் வார்த்தைகளில்,(2) “ஐயோ! {அந்தப்} பேரழகி இப்படிக் கட்டாந்தரையில் கிடந்து என் துயரைப் பெருகச் செய்தாளே! இதைவிட எங்களுக்கும், அவள் நண்பர்களுக்கும் துயர் தருவது ஏது?(3) நான் கொடையளித்திருந்தால், தவம் செய்திருந்தால், மேலோரை எப்போதும் மதித்திருந்தால், இந்தச் செயல்களின் புண்ணியம் என் அன்பிற்குரியவளை உயிர்மீட்டுத் தரட்டும்!(4) நான் பிறந்ததிலிருந்து ஆசைகளை அடக்கி, நோன்புகளைக் கடைப்பிடித்திருந்தேன் என்றால் அந்த அழகான பிரமத்வரை தரையிலிருந்து எழுந்திருக்கட்டும்” என்று புலம்பினான்.(5)

தன் துணையை இழந்ததினால் ருரு இப்படிக் கதறிக்கொண்டிருக்கையில், தேவலோகத் தூதுவன் ஒருவன், அந்தக் கானகத்துக்கு வந்து, அவனிடம் {ருருவிடம்},(6) "ஓ ருருவே, உனது துயர் மேலீட்டால் நீ இப்போது உதிர்த்தாயே வார்த்தைகள், அவை பயனற்றவை. ஓ நல்லவனே, இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு நாட்கள் முடிந்தால், அவர்கள் திரும்பி வருவதில்லை.(7) கந்தர்வருக்கும், அப்சரசுக்கும் பிறந்த அந்தப் பரிதாபத்திற்குரிய குழந்தையின் நாட்கள் முடிந்துவிட்டன. அதனால் மகனே, நீ உன் இதயத்தைத் துயருக்குப் பறிகொடுக்காதே.(8) இருந்தாலும், ஒப்பற்ற தேவர்கள் அவளது உயிரை மீட்கும் வழி குறித்து முன்பே சொல்லி வைத்துள்ளனர். நீ அதன்படி நடந்தால் பிரமத்வரை {மீண்டும்} கிடைக்க வாய்ப்பிருக்கிறது" என்றான்.(9)

ருரு, "ஓ தேவலோகத் தூதுவரே! அந்தத் தேவர்கள் என்னதான் கட்டளையிட்டிருகின்றனர். முழுவதும் {முழு விவரம்} கூறினால், நான் (அதைக் கேட்டு) அப்படியே நடந்துகொள்வேன். என்னைத் துன்பத்திலிருத்து விடுவிப்பதே உமக்குத் தகும்” என்றான்.(10) அதற்குத் தேவதூதுவன், "உனது வாழ்நாட்களில் பாதியை உனது துணைக்குக் கொடுக்க வேண்டும். பிருகுவின் பரம்பரையில் வந்த ஓ ருருவே, உனது பிரமத்வரை தரையில் இருந்து எழுந்து வருவாள்" என்றான்.(11)

ருரு, "ஓ தேவதூதர்களில் சிறந்தவரே, நான் எனது வாழ்நாளில் பாதியை எனது துணைக்கு அதிவிருப்பத்துடன் கொடுப்பேன். எனது அன்புக்குரியவளை மறுபடியும் அவளது {பழைய} உடைகளுடனே, அழகான அவள் தோற்றத்துடனே எழுப்புவீராக" என்றான்."(12)

சௌதி சொன்னார், "பிறகு நற்குணங்கள் கொண்டவர்களாகிய கந்தர்வ மன்னனும் (பிரமத்வரையின் தகப்பனும்), தேவதூதனும், இருவரும் தர்மதேவனிடம் சென்று,(13) "ஓ அறமன்னா {தர்மராஜா}, உமக்கு விருப்பமிருந்தால் {சம்மதமிருந்தால்} ருருவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இனிமையான பிரமத்வரையை, அவனது {ருருவின்} பாதி வாழ்நாட்களைக் கொண்டு உயிர்ப்பிப்பாயாக" என்றான்.(14) அதற்கு அந்த அறமன்னன், "ஓ தேவதூதா, உனது விருப்பத்தின்படியே, ருருவின் பாதி ஆயுளைக் கொண்டு, அவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பிரமத்வரை எழுந்திருக்கட்டும்" என்றான்."(15)

சௌதி தொடர்ந்தார், "அறமன்னன் இவ்வாறு சொன்னதும், தேர்ந்த நிறமுடைய அந்த மங்கை பிரமத்வரை, ருருவின் பாதி ஆயுளை எடுத்துக் கொண்டு, தூக்கத்திலிருந்து எழுவதைப் போல் எழுந்தாள்.(16) ருரு தனது பாதி ஆயுளைத் தனது துணை உயிர்த்தெழ தந்ததால், பின்னர் அவனது ஆயுள் சுருங்கியது.(17)

ஒரு நன்னாளில், அவர்களது தந்தைமார், அவர்களுக்கு முறையான சடங்குகளுடன் திருமணம் செய்து வைத்தனர். அந்தத் தம்பதியினரும் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் தங்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.(18) அவ்வளவு அழகான, கிடைப்பதற்கரிதான, தாமரை இதழ்களின் காந்தியை ஒத்த மங்கையை மணந்து கொண்ட பிறகும் கூட, ருரு {பாம்பினத்தின் மீது கொண்ட கோபம் காரணமாக} பாம்பினத்தையே அழிப்பதாக உறுதியேற்றான்.(19) எப்பொழுதெல்லாம் அவன் பாம்பைக் கண்டானோ அப்பொதெல்லாம் பெரும்கோபத்தில் நிறைந்து, ஒரு ஆயுதத்தை எடுத்து அந்தப் பாம்பைக் கொன்று வந்தான்.(20)


ஓ பிராமணரே {சௌனகரே}, ஒரு நாள் ருரு ஒரு பெரிய கானகத்திற்குள் நுழைந்தான். அங்கே ஒரு வயதான துந்துபா {டுண்டுப} வகையைச் {நீர்பாம்பு வகை} சார்ந்த ஒரு பாம்பு தரையில் கிடப்பதைக் கண்டான்.(21) கோபத்தால் உந்தப்பட்ட ருரு, அந்தப் பாம்பைக் கொல்ல மரணக்கோல் {யமனின் தண்டத்தைப்} போல இருந்த தன் தடியை உயத்தினான். அப்போது அந்தத் துந்துபா {தண்ணீர்ப்பாம்பு} ருருவிடம்,(22) "ஓ பிராமணா! நான் உனக்கு எந்தக் கெடுதலையும் செய்யவில்லையே. பிறகு ஏன் கோபங்கொண்டு என்னைக் கொல்ல வருகிறாய்" என்றது" {என்றார் சௌதி}.(23)

ருருவும் பிரமத்வரையும்! | ஆதிபர்வம் - பகுதி 8

பதிவின் சுருக்கம் : மேனகைக்குப் பிறந்த பிரமத்வரையின் கதை; சியவனனின் பேரன் ருரு; பிரமத்வரையை விரும்பிய ருரு; பிரமத்வரைக்கும், ருருவுக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்; மணப்பெண்ணைக் கடித்த பாம்பு; தனிமையில் சென்ற ருரு....

சௌதி சொன்னார், "ஓ பிராமணரே, பிருகுவின் மைந்தன் சியவனன், தனது மனைவி சுகன்யாவின் {சுகன்னியின்} கருவறையில் ஒரு மைந்தனைப் பெற்றெடுத்தான். அந்த மைந்தன்தான் ஒப்பற்ற சக்தி கொண்ட, புகழ்பெற்ற பிரமதி ஆவான்.(1) பிரமதி கிரீடச்சி {கிருதாசி} கருவறையில் ருருவைப் பெற்றான். ருரு, தனது மனைவி பிரமத்வரையின் மூலம் சுனகன் என்ற மகனைப் பெற்றான்.(2) ஓ பிராமணரே, அபரிமிதமான சக்தி கொண்ட ருருவின் வரலாற்றை முழுவதுமாகக் கூறுகிறேன் கேட்பீராக.(3)

முன்பொரு காலத்தில் தவசக்தியும், கல்வியும், அனைத்துயிரிடமும் அன்பு செலுத்தும் குணமும் கொண்ட ஸ்தூலகேசர் என்ற ஒரு முனிவர் இருந்தார்.(4) ஓ பிராமண முனிவரே {சௌனகரே}, அந்த நேரத்தில், கந்தர்வர்களின் மன்னன் விஸ்வாவசு, தேவலோக நடனமங்கை மேனகையுடன் நெருக்கமாக இருந்தான்.(5) ஓ பிருகுவின் வழித்தோன்றலே {சௌனகரே}, அந்த அப்சரஸ் மேனகை, அவளது நேரம் நெருங்கியதும், ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கருகே ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.(6)


புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தையை அவள் ஆற்றங்கரையிலேயே விட்டுச் சென்று விட்டாள். ஓ பிராமணரே {சௌனகரே}, மேனகை என்ற அந்த அப்சரஸ் இரக்கத்தையும், வெட்கத்தையும் துறந்து அங்கிருந்து சென்றுவிட்டாள்.(7) பெரும் தவவலிமை பொருந்திய ஸ்தூலகேசர், ஆள் நடமாட்டமில்லாத நதிக்கரைப் பகுதியில் அந்தக் குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தையானது இறப்பில்லாதவர்களின் {தேவர்களின்} குழந்தை என்றும், அழகால் ஒளிவீசும் ஒரு பெண்குழந்தை என்றும் கண்டுகொண்டார்.(8,9) அந்தப் பெரும் பிராமணரும், முனிவர்களில் முதன்மையானவருமான ஸ்தூலகேசர், இரக்கத்தினால் {மனம்} நிறைந்து அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தார். அந்தக் குழந்தையும் அவருடைய புனிதமான இருப்பிடத்திலேயே {ஆசிரமத்திலேயே} வளர்ந்தாள்.(10)

உயர்ந்த மனம் படைத்தவரும், ஆசிர்வதிக்கப்பட்டவருமான ஸ்தூலகேசர் தெய்வீக விதிகளுக்குட்பட்டு {சாஸ்திரங்களுக்குட்பட்டு} பிறந்ததிலிருந்து செய்யவேண்டிய சடங்குகளையெல்லாம் அந்தந்த காலத்தில் அக்குழந்தைக்குச் செய்தார்.(11) தனது நற்குணங்களாலும், அழகாலும், மற்றும் எல்லாப் பண்புகளாலும் அனைத்துப் பெண்களையும் அவள் மிஞ்சி நின்றதால், பிரமத்வரை[1] என்று அந்த முனிவர் அவளை அழைத்தார்.(12) தெய்வத்திற்கு அஞ்சி நடக்கும் ருரு, ஒரு நாள் ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கு அருகே இருந்த பிரமத்வரையைக் கண்டு, காம தேவனின் {மன்மதனின்} கணையால் இதயத்தில் துளைக்கப்பட்டவன் ஆனான்.(13) ருரு, தனது நண்பர்கள் மூலம், பிருகுவின் மகனான தனது தந்தை பிரமதி, தன் ஆசையை அறியும்படி செய்தான்.

[1] பிரமதா என்றால் பெண்கள் என்று பொருள். வரா என்றால் சிறந்தவள் என்று பொருள். எனவே, பிரமத்வரா என்பது பெண்களிற்சிறந்தவள் என்ற பொருளைத் தரும்.

பிரமதி தனது மகனுக்காக மிகவும் புகழ்வாய்ந்த ஸ்தூலகேசரிடம் அவளைக் {பிரமத்வரையைக்} கேட்டான்(14). அவளது வளர்ப்புத்தந்தை {ஸ்தூலகேசர்}, அந்தக் கன்னிப்பெண் பிரமத்வரையை ருருவுக்கு நிச்சயித்துக் கொடுத்தார். திருமணம் அடுத்து வரும் வர்க தைவதா {பூரம்} நட்சத்திரத்தில்[2] என நிச்சயமானது.(15)

[2] கும்பகோணம் ஹஸ்தம் நட்சத்திரம் என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே பூரம் நட்சத்திரம் என்றே இருக்கிறது.

திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு, அந்த அழகான கன்னிப்பெண் மற்ற பெண்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது,(16) விதி வசத்தால் அவளது நேரம் நெருங்கி வந்தது. வழியில் சுருண்டு கிடந்த ஒரு பாம்பைக், கவனியாமல், அதை மிதித்துவிட்டாள்.(17) அந்த ஊர்வனவும் {பாம்பும்}, விதியின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் தூண்டப்பட்டு, கவனக்குறைவாக இருந்த அவளது உடம்பில் தனது நஞ்சுப் பற்களைச் செலுத்தியது.(18)

பாம்பால் கடிபட்டதும், அவள் {பிரமத்வரை} உணர்விழந்து தரையில் விழுந்தாள். அவளது நிறம் மங்கி ஒளி குன்றியது.(19) கலைந்த கேசத்துடன் கிடந்த அவள் துன்பத்தைத் தருகின்ற ஒரு காட்சி பொருளானாள். காண்பதற்கு இனிமையானவளான அவள் இறந்து கிடப்பதைக் காண்பது வேதனையைத் தந்தது.(20) விஷம் ஏறி, தரையில் விழுந்து கிடந்த அந்தக் கொடியிடையாள், தூங்குபவளை போலக் காட்சியளித்து, அந்நிலையிலும், உயிரோடு இருந்தபோதை விட அழகாக இருந்தாள்.(21)

வளர்ப்புத் தந்தையும் {ஸ்தூலகேசரும்}, மற்ற முனிவர்கள் அனைவரும் அங்கு வந்து, அழகான தாமரை மலரைப் போலத் தரையில் அசைவில்லாமல் கிடக்கும் அவளைக் {பிரமத்வரையை} கண்டனர்.(22) சுவஸ்தியாத்ரேயர், மஹாஜானு, குசிகர், சங்கமேகலர்,(23) உத்தாலகர், கடர், அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஸ்வேதர், பரத்வாஜர், கௌணகுத்சியர், ஆர்ஷ்டிஷேணர், கௌதமர்,(24) பிரமதி, அவனது மகனான ருரு, மற்றும் அந்தக் கானகத்தில் வசிப்போர் ஆகியோர் அங்கே வந்தனர். பாம்பு கடித்ததால், தரையில் உயிரற்ற சடலமாகக் கிடக்கும் அந்த மங்கையைக் கண்டு அனைவரும் துக்கத்தில் அழுதனர். இந்த நிகழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட ருரு அந்த இடத்தைவிட்டு அகன்றான்." {என்றார் சௌதி}.(25)

Monday, 11 January 2016

விலகினான் அக்னி! | ஆதிபர்வம் - பகுதி 7

பதிவின் சுருக்கம் : பொய் சாட்சி சொல்வதின் தீமை; அனைத்துப் புறங்களில் இருந்தும் விலகிக் கொண்ட அக்னி; பிரம்மனின் அறிவுரை; சாபத்தின் பாதிப்புக் குறைப்பு...

சௌதி சொன்னார், "பிருகுவின் சாபத்தால் கோபங்கொண்ட அக்னிதேவன், முனிவரிடம் {பிருகுவிடம்}, "ஓ பிராமணரே {பிருகுவே}, என்னிடம் நீர் இப்படிக் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதற்கு என்ன பொருள்?(1) நான் பெருமுயற்சி செய்து, பாரபட்சமின்றி உண்மையைப் பேசி, நீதியை நிலைக்கச் செய்த போது, வரம்பு {விதிகளை} மீறியதாகத் தாம் என்மேல் எவ்வாறு குற்றம் சாட்ட முடியும்? என்னைக் கேட்டதால், நான் உண்மையான பதிலைச் சொன்னேன்.(2) ஓர் உண்மையை அறிந்தவனைச் சாட்சியாகக் கூப்பிட்டு விசாரிக்கும்பொழுது, அவன் உண்மைக்கு மாறாகப் பேசினால், அவனது முன்னோர்கள் ஏழு தலைமுறையினரையும், சந்ததியினர் ஏழு தலைமுறையினரையும் பாழாக்கியவனாவான் {நரகத்தில் தள்ளியவனாவான்}.(3) தான் முழுவதும் அறிந்திருந்தும், அறிந்ததை முழுமையாகக் கூறவில்லை என்றால், அவனும் குற்ற உணர்வால் கறைபட்டிருப்பான்.(4) என்னாலும் உமக்குச் சாபமிட முடியும். ஆனால் பிராமணர்கள் என்னால் பெரிதும் மதிக்கப்படுபவர்கள். இவையெல்லாம் உமக்கும் தெரிந்தாலும், ஓ பிராமணரே, நான் சொல்வதைக் கேளும்!(5)

எனது தவசக்தியால், நான் என்னைப் பெருக்கிக் கொண்டு, பல உருவங்களில் இருக்கிறேன். தினசரி ஹோமங்கள் நடக்கும் இடங்களிலும், வருடக்கணக்காக நடைபெறும் வேள்விகளிலும் இருக்கிறேன்.(6) (திருமணம் போன்ற) புனிதச் சடங்குகள், பலிகள் எங்கெல்லாம் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இருக்கிறேன். என் தழல்களின் மேல் வேத விதிகளின் படி இடப்படும் நெய்யைத் தேவர்களும், பித்ருக்களும் பெற்றுச் சாந்தம் அடைகின்றனர்.(7) தேவர்களும், பித்ருக்களும் நீர் {தண்ணீர்} ஆவர். தர்ஷம், பூர்ணமஷம் என்னும் வேள்விகளில் அளிக்கப்படுவனவற்றில் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் சமபங்கு உரிமை உள்ளது.(8) ஆகையால் தேவர்களே பித்ருக்கள், பித்ருக்களே தேவர்கள். ஒரேமாதிரியான {சமமான} அவர்களைச் சேர்த்து வைத்தும், பிரித்தும் சந்திரனின் மாறுதல்களுக்கு ஏற்ப வழிபடப்படுகிறார்கள்.(9)

அந்தத் தேவர்களும் பித்ருக்களும் என் மீது ஊற்றப்படுவதையே உண்கின்றனர். எனவே, என்னைத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்குமான வாய் என்று அழைக்கிறார்கள்.(10) புதுமதியில் (அமாவாசையில்) பித்ருக்களும், முழுமதியில் (பௌர்ணமியில்) தேவர்களும், தூய்மையாக்கப்பட்ட நெய்யை, எனது வாய்மூலமாகத்தான் உண்கிறார்கள். அவர்களின் வாயாக இருப்பதால், அனைத்தையும் (சுத்தமானதும், சுத்தமில்லாததும்) உண்பவனாக எவ்வாறு நான் ஆக முடியும்?” என்றான் {அக்னி}.(11)

அதன்பிறகு, அக்னி சிறிது யோசித்துவிட்டு பிராமணர்களின் ஹோமங்களிலிருந்தும், நீண்ட வேள்விகளிலிருந்தும், புனிதச் சடங்குகள் மற்றும் வைபவங்களிலிருந்தும் என எல்லா இடங்களிலிருந்தும் விலகிக் கொண்டான்.(12) நெருப்பில்லாததால் ஓம்களும், வஷட்களும், சுவதாக்களும், சுவாஹாக்களும் (பிரார்த்தனைகளில் சொல்லப்படும் மந்திரங்கள்) இல்லாமல்[1], அனைத்து உயிரினங்களும் துயரடைந்தன.(13)


[1] ஓம் என்று வேதம் ஓதுவது, வஷட் என்று வேள்வி செய்வது, சுவதா என்று பிதுர்க்கடன் {சிராத்தம்} செய்வது, சுவாகா என்று ஹோமம் செய்வது ஆகியன நின்று போயின என்பது இங்கே பொருள்.

கவலை கொண்ட முனிவர்கள், தேவர்களிடம் சென்று, "குறைவற்றவர்களே! அக்னி இல்லாமல் வேள்விகள் மற்றும் சடங்குகள் தொடர்ந்து நின்று போனதால் மூன்று உலகங்களும் குழப்பத்தில் உள்ளன. காலந்தாழ்த்தாமல் இந்தக் காரியத்தில் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுங்கள்" என்றனர். பிறகு முனிவர்களும் தேவர்களும் சேர்ந்து பிரம்மனிடம் சென்றனர்.(14,15) அவனிடம் {பிரம்மனிடம்} அக்னியின் சாபத்தைப் பற்றியும், அதனால் அனைத்து விழாக்களும் தடைப்பட்டிருப்பதையும் பற்றிய விவரங்களையும் எடுத்துரைத்தனர். அவர்கள், "ஓ நற்பேறுபெற்றவரே! ஏதோ காரணத்திற்காகப் பிருகு முனிவரால் அக்னி சபிக்கப்பட்டிருக்கிறான்.(16) உண்மையில் தேவர்களுக்கு வாயாக இருப்பவனும், வேள்விகளில் தரப்படுவதை முதலில் உண்பவனும், வேள்வி நெய்யை உண்பவனுமாகிய அக்னியானவன் எவ்வாறு வரைமுறை இல்லாமல் அனைத்தையும் உண்ணும் நிலைக்கு ஆளாகலாம்?” என்று கேட்டனர்.(17)

இந்த வார்த்தைகளைக் கேட்ட அண்டப்படைப்பாளன் {பிரம்மன்}, அக்னியைத் தன் முன் வர ஆணையிட்டான். பிரம்மன் தன்னைப் போன்றே அனைத்தையும் படைப்பவனும், என்றும் நிலைத்திருப்பவனுமான அக்னியிடம் மென்மையான வார்த்தைகளால்,(18) "உலகங்களைப் படைத்தவன் நீயே, அவற்றை அழிப்பவன் நீயே! மூவுலகங்களைப் பாதுகாப்பவன் நீயே! வேள்விகள் அனைத்தையும் வளர்ப்பவனும் நீயே!(19) எனவே, சடங்குகள் தடைபெறாமல் இருக்குமாறு நடந்து கொள்வாயாக. ஓ வேள்வி நெய்யை உண்பவனே, நீயே எல்லாவற்றிற்கும் தலைவனாக இருக்கும்போது, ஏன் இவ்வளவு மூடனாக நடந்து கொள்கிறாய்?(20) அண்டத்தில் என்றுமே தூய்மையானவன் நீயே! அண்டத்தை நிலைத்திருக்க வைத்திருப்பவனும் நீயே! உன் முழு உடலாலும் வரைமுறையில்லாமல் அனைத்தையும் உண்ணும் தாழ்ந்த நிலைக்கு நீ ஆளாகமாட்டாய்.(21)

ஓ தழல்களால் ஆனவனே, பின்புறத்தில் இருக்கும் தழல்கள் {ஜ்வாலைகள்} மட்டுமே அனைத்தையும் உண்ணும்[2]. (ஊனுண்ணிகள் அனைத்தின் வயிற்றிலும் இருக்கும்) இறைச்சியை உண்ணும் உன்னுடைய உடலும்[3] வரைமுறையில்லாமல் அனைத்தையும் உண்ணும். எப்படிக் கதிரவனின் கதிர்பட்டதும் எல்லாம் தூய்மையாகின்றனவோ,(22) அப்படியே உன் தழல்களால் எரிக்கப்படுபவை அனைத்தும் தூய்மையாகும். ஓ நெருப்பே, தானாக உருவான எல்லாம்வல்ல சக்தி நீயே.(23) ஓ தலைவனே, உனது அந்தச் சக்தியால் {பிருகு} முனிவரின் சாபம் உண்மையாகட்டும். உன் வாயில் படைக்கப்படுவனவற்றில் உனக்குச் சேர வேண்டிய பங்கையும், தேவர்களுக்குச் சேர வேண்டிய பங்கையும் எடுத்துக் கொண்டு உனது பணியைத் தொடர்வாயாக" என்றான் {பிரம்மன்}.(24)

[2] தீயின் நாக்கு (அனல்) என்பது முன்பகுதி ஆகும். கனல் எனப்படும் கீழ்ப்பகுதி மட்டுமே தான் பற்றிய பொருட்கள் அனைத்தையும் உண்ணும். அனல் எனும் மேற்பகுதி, எரியும் (உண்ணப்படும்) பொருளிலிருந்து விலகியே இருக்கும்.

[3] இறைச்சியுண்ணும் விலங்குகளின் வயிற்றில் செரிமானம் செய்யும் அக்னி, செரிக்காததைச் செரிக்க வைப்பது. எல்லா உயிரினங்களின் வயிற்றிலும் உணவை செரிப்பதற்காக ஜாடராக்னி என்ற பெயரில் அக்னி இருக்கிறான். அவன் இறைச்சியைச் செரிக்கச் செய்யும் போது உண்ணத்தகாததை உண்பவனாகக் கருதப்படுகிறான்.

சௌதி தொடர்ந்தார், "அக்னி அந்தப் பிதாமகனிடம் {பிரம்மனிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்றான். மிக உயர்ந்த தலைவனின் {பிரம்மனின்} ஆணைப்படியே, அக்னி தனது வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான்.(25) தேவர்களும், முனிவர்களும், தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே மகிழ்ச்சியுடன் திரும்பினர். முனிவர்கள், சடங்குகளையும், வேள்விகளையும் செய்யத் தொடங்கினார்கள்.(26) உலகில் அனைத்து உயிரினங்களும், மேலுலகில் தேவர்களும் மகிழ்வுற்றனர். அக்னியும் பாவத்திலிருந்து விடுபட்டதால் மகிழ்ந்தான்.(27)

ஓ அறுகுணங்கொண்டவரே! இவ்வாறு பழங்காலத்தில் பிருகுவினால் அக்னி சபிக்கப்பட்டான். புலோமை, அரக்கனின் {புலோமனின்} அழிவு,  சியவனனின் பிறப்பு ஆகியனவற்றுடன் தொடர்புடைய பழைய வரலாறுகள் இவ்வாறே இருக்கின்றன" {என்றார் சௌதி}.(28) 

Sunday, 10 January 2016

சியவனன் பிறப்பு! | ஆதிபர்வம் - பகுதி 6

பதிவின் சுருக்கம் : சியவனன் பிறப்பும் பெயர்க்காரணமும்; ராட்சசன் மாண்டது; பிருகுவிடமிருந்து அக்னிக்குக் கிடைத்த சாபம்...

சௌதி சொன்னார், "ஓ பிராமணரே {சௌனகரே}, இந்த வார்த்தைகளை நெருப்பு தேவனிடமிருந்து {அக்னியிடமிருந்து} கேட்ட அரக்கன் {புலோமா}, ஆண் காட்டுப் பன்றியின் உருவமெடுத்து, காற்றின் வேகத்துக்கு இணையாக, மனத்தின் வேகத்துடன், அந்த மங்கையைக் {புலோமையைக்} கைப்பற்றித் தூக்கிச் சென்றான்.(1)

இந்தப் பெரும் கொடுமையைத் தாங்கமுடியாமல் கோபப்பட்ட பிருகுவின் குழந்தை, கருப்பையிலிருந்து நழுவி விழுந்தது. அதனாலேயே அந்தக் குழந்தைக்குச் சியவனன்[1] என்று பெயர் வந்தது.(2) குழந்தை, தாயின் கருவிலிருந்து நழுவியதையும், அந்தக் குழந்தை சூரியனைப் போல ஒளிர்வதையும் கண்ட ராட்சசன் {புலோமன்} அந்தப் பெண்ணின் {பிருகுவின் மனைவி புலோமையின்} மீதிருந்த பிடியை விட்டுக் கீழே விழுந்து சாம்பலாக மாறினான்.(3)



[1] சியவனன் [அ] ச்யவனன் என்றால் நழுவி விழுந்தவன் என்று பொருள். ச்யவனம் என்றால் நழுவுதல் என்று பொருள்.

ஓ பிருகு பரம்பரையில் வந்த பிராமணரே, துயரத்தால் தடுமாறிப் போயிருந்த அந்த அழகிய புலோமை, பிருகு மைந்தனான தனது குழந்தை சியவனனை எடுத்துக் கொண்டு நடந்துசென்றாள்.(4) தனது மைந்தனின் {பிருகுவின்} களங்கமற்ற மனைவி {புலோமை} அழுதுகொண்டிருப்பதைப் பெருந்தகப்பன் பிரம்மனே கண்டான்.(5) அனைவருக்கும் பெருந்தகப்பனான அவன் {பிரம்மன்}, குழந்தையிடம் பாசம் கொண்ட அவளைத் தேற்றினான். அவளது {புலோமாவின்} கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த்துளிகள் ஒரு பெரிய நதியை உண்டாக்கின.(6) அந்த ஆறு பெரும் துறவியான பிருகுவின் மனைவியுடைய காலடிகளைத் தொடர்ந்தது. உலகங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} தனது மகனின் {பிருகுவின்} மனைவியைத் {புலோமாவை} தொடரும் அந்த ஆற்றைக் கண்டு, அதற்கு வதுசாரை[2] என்று பெயர் வைத்தான் {பிரம்மன்}. அது சியவனனின் ஆசிரமத்தைக் கடந்து செல்கிறது.(7,8) {அதாவது பின்னாளில் இந்த ஆற்றின் கரையில் தன்னுடைய ஆசிரமத்தை சியவனன் அமைத்துக் கொண்டான்}. இந்த விதத்தில்தான் பிருகுவின் மைந்தனான பெரும் ஆன்ம சக்தியுள்ள சியவனன் பிறந்தான்.

[2] வதுசாரை என்றால் பெண்ணுடன் சென்றது என்று பொருள். வது - பெண்; சாரை - ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லும் வரிசை.

பிருகு, தனது குழந்தை சியவனனையும், அதன் அழகான தாயையும் {மனைவி புலோமையையும்} கண்டார். முனிவர் {பிருகு} கோபத்தில்,(9) "உன்னைக் கடத்த முடிவு செய்து வந்த ராட்சசனிடம் யார் உன்னைக் காட்டிக் கொடுத்தது? ஓ மனதிற்கினிய புன்னகை கொண்டவளே {புலோமையே}, நீ என் மனைவியென்று ராட்சசனுக்குத் தெரிந்திருக்க முடியாது.(10) எனவே, அப்படி உன்னை அரக்கனிடம் சொன்னது {காட்டிக் கொடுத்தது} யார் என்பதைச் சொல், எனது கோபத்தால் அவனைச் சபிக்கப் போகிறேன்" என்று கேட்டார்.(11)

அதற்குப் புலோமை "ஓ, அறுகுணங்கொண்டவரே, அக்னியே (நெருப்பு தேவனே} அந்த ராட்சசனிடம் {புலோமனிடம்} என்னைக் காட்டிக் கொடுத்தது. அவன் (அந்த ராட்சசன் {புலோமன்}}, குராரியைப் {பெண் அன்றிலைப்} போலக் கதறிக் கொண்டிருந்த என்னைக் கடத்திக் கொண்டு போனான்.(12) உமது மகனின் {சியவனனின்} தீவிரப் பிரகாசத்தால் தான் நான் காப்பாற்றப்பட்டேன். அரக்கன் (இந்தக் குழந்தையைப் பார்த்துத்தான்) {சியவனனைப் பார்த்துத்தான்} எனது மீதிருந்த பிடியைவிட்டு, கீழே விழுந்து சாம்பலானான்" என்றாள் {பிருகுவின் மனைவி புலோமை}.(13)

சௌதி தொடர்ந்தார், "புலோமையிடமிருந்து இந்த விவரத்தைக் கேட்ட பிருகு, மிகுந்த கோபங்கொண்டார். கட்டுக்கடங்காத கோபத்தால், "நீ அனைத்தையும் உண்பாயாக" என்று அக்னியைச் சபித்தார்" {என்றார் சௌதி}.(14)

Saturday, 9 January 2016

பிருகு பரம்பரை | ஆதிபர்வம் - பகுதி 5


"சௌனகர் சொன்னார், "குழந்தாய் {சௌதியே}, முன்பு, உன் தகப்பனார் அனைத்துப் புராணங்களையும், பாரதத்தையும் கிருஷ்ண துவைபாயனரிடம் கற்றுத் தேர்ந்திருந்தார். நீயும் அவற்றைக் கற்றறிந்திருக்கிறாயா?(1) அந்தப் பண்டைய ஆவணங்களில் வரிசை படுத்தப்பட்டிருப்பனவான, ஆர்வத்தைத் தூண்டும் கதைகள், விவேகமுள்ள முதல் தலைமுறையினரின் வரலாறுகள் ஆகிய அனைத்தையும் உன் தந்தை திரும்பக் கூறும்போது நாங்கள் கேட்டிருக்கிறோம்.(2) முதலில், பிருகு குலத்தின் வரலாற்றையே நான் அறிய விரும்புகிறேன். அந்த வரலாற்றை மறுபடியும் நீ விவரித்துச் சொல்வாயாக, நீ சொல்வதை நாங்கள் கவனத்துடன் கேட்போம்" என்றார்.(3)


சௌதி சொன்னார், "முன்பு வைசம்பாயனர் {வியாசரின் சீடர்} உட்பட உயர்-ஆன்ம அந்தணர்கள் படித்து ஓதியதையெல்லாம் நானும் கற்றிருக்கிறேன்;(4) என் தந்தை {ரோமஹர்ஷணர்} கற்றிருந்ததையெல்லாம் நானும் கற்றிருக்கிறேன். ஓ பிருகு பரம்பரையின் வழித்தோன்றலே {சௌனகரே}! இந்திரனாலும், தேவர்களாலும், முனிவர் குழுக்களாலும், மருத்துகளாலும் (காற்று) போற்றத்தக்க பிருகு குலத்தைக் குறித்தவற்றைக் கேட்பீராக.(5,6) ஓ பெருமுனிவரே, இந்தக் குடும்பத்தின் கதையைப் புராணங்களில் விவரித்திருப்பது போல விவரிக்கிறேன். நாம் அறிந்தவரையில், அருள்நிறைந்த பெருமுனிவர் பிருகு[1], தான்தோன்றியாகத் {சுயம்புவாகத்} தன்னாலேயே நிலைத்திருக்கும் பிரம்மனிடம் இருந்து வருணனின் வேள்வி ஒன்றில் பிறந்தவர் ஆவார். பிருகுவிற்குச் சியவனன் என்று ஒரு மகன் இருந்தான்; அவர் {பிருகு} அவன்மீது {சியவனன் மீது} மிகுந்த அன்புடனிருந்தார்.(7,8) சியவனனுக்கு நற்குணமிக்க பிரம்மாதி {பிரமதி} என்று ஒருவன் பிறந்தான். பிரம்மாதிக்கு தேவலோக நடனமாது கிரிடச்சி {கிருதாசி} மூலம் ருரு என்றொரு மகன் பிறந்தான்.(9) ருருவுக்கு, பிரமத்வரை என்ற தன் மனைவி மூலம் சுனகன் என்றொரு மகன் பிறந்தான். ஓ சௌனகரே![2] உமது பெரும் மூதாதையான அவர் {சுனகர்} தன் வழிகளில் மிகவும் நற்குணமிக்கவராகத் திகழ்ந்தார்.(10) தன்னைத் தவத்திற்கு {ஆன்மிகத்திற்கு} அர்ப்பணித்திருந்த அவர் {சுனகர்}, நற்பெயருடன், நீதிமானாக, வேதம் அறிந்தவர்களில் மேம்பட்டவராக இருந்தார். அவர் நற்குணமுள்ளவராக, உண்மையானவராக, ஒழுக்கமுடையவராகவும் இருந்தார்" என்று பதிலுரைத்தார் {சௌதி}.(11)

[1] பிருகு [அ] ப்ருகு என்றால் தானே தோன்றியவர் என்பது பொருளாம்.
[2] சுனகரின் வழிவந்தவர் என்பதால் சௌனகர்

சௌனகர், "ஓ சூத மைந்தனே {சௌதியே}, புகழ்பெற்ற பிருகுவின் மைந்தனுக்குச் சியவனன் என்று ஏன் பெயர் சூட்டப்பட்டது? அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக!" என்று கேட்டார்.(12)

சௌதி சொன்னார், "பிருகுவுக்குப் புலோமை என்ற பெயரில் ஒரு மனைவியிருந்தாள். பிருகு அவளிடம் {புலோமையிடம்} அன்புடன் இருந்தார். பிருகுவின் மைந்தனை {சியவனனை} சுமந்து அவள் {புலோமை} பெரிய உருவம் பெற்றாள்.(13) அந்த அறம்சார்ந்த இடத்தில் புலோமை அந்நிலையில் இருந்த போது, ஒருநாள், தன்னறத்திற்கு உண்மையுடன் இருப்பவர்களில் மேன்மையான பிருகு, அவளை {புலோமையை} வீட்டில் விட்டுவிட்டு, நீராடுவதற்காக {தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள} வெளியே சென்றார். அப்போதுதான், புலோமன் என்றழைக்கப்பட்ட {அவள் பெயரையே கொண்ட} ராட்சசன் ஒருவன், பிருகுவின் இல்லத்திற்கு வந்தான்.(14,15)  முனிவரின் இல்லத்திற்குள் நுழைந்த ராட்சசன் {புலோமன்}, எவ்விதத்திலும் களங்கமில்லாத பிருகுவின் மனைவியைக் {புலோமையைக்} கண்டான். அவளைக் கண்டதும் காமத்தில் நிறைந்து தன் அறிவை இழந்தான்.(16) அழகான புலோமை, கானகத்தின் கிழங்குகளையும், கனிகளையும் கொடுத்து அந்த ராட்சசனை உபசரித்தாள்.(17)

ஓ நன்முனிவரே {சௌனகரே}! அவளை {புலோமையைப்} பார்த்ததுமுதல் காமத்தீயில் வெந்துகொண்டிருந்த அந்த ராட்சசன் {புலோமன்} மிகவும் மகிழ்ந்து, அனைத்து வகையிலும் களங்கமில்லாத அவளை {புலோமையை} அபகரிப்பது எனத் தீர்மானித்தான்.(18) "என் திட்டம் நிறைவேறியது" என்று சொன்ன அந்த ராட்சசன் {புலோமன்}, அந்த அழகான பெண்ணை அபகரித்துச் செல்ல எண்ணினான். உண்மையில், மனதிற்கினிய புன்னகைக் கொண்ட அவளை {புலோமையை} அவளது தந்தை முன்னர் அவனுக்கு {ராட்சசன் புலோமாவிற்குத்தான்} நிச்சயித்திருந்தாலும்[3], பின்னர், முறையான சடங்குகளுடன் பிருகுவிற்கே அவளை {புலோமையை} அளித்தார். ஓ பிருகுகுலத்தவரே {சௌனகரே}, ஆழமான இந்தக் காயம் {புலோமையை பிருகுவிடம் இழந்தது} அந்த ராட்சசன் மனத்தைப் பெரும் பாடுபடுத்தியது, அந்தக் கணமே, அந்த மங்கையைக் {புலோமையைக்} கடத்துவதற்கு மிகவும் சிறந்த சந்தர்ப்பம் என்று நிச்சயித்தான். அறையின் மூலையில் வேள்வித்தீ சுடர்விட்டு எரிவதை அந்த ராட்சசன் {புலோமன்} கண்டான்.(19-21)

[3] புலோமையின் குழந்தைப் பருவத்தில் அவள் அழுது கொண்டிருந்த போது, அவளை அச்சுறுத்துவதற்காக, "ராட்சசா, இவளைப் பிடித்துக் கொள்!" என்று அவளது தந்தை சொன்னார். அப்போது, அங்கு மறைந்திருந்த புலோமன் என்ற ராட்சசன் அதைக் கேட்டு அவளையே தன் மனைவியாக நினைத்தான்.

அந்த நெருப்பிடம் அந்த ராட்சசன், "ஓ அக்னியே சொல், நியாயமாக இந்தப் பெண் யாருடைய மனைவி என்பதை எனக்குச் சொல்வாயாக.(22) நீயே தேவர்களின் வாயாக இருக்கிறாய்; அதனால் என் கேள்விக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறாய். மேலான நிறமுடைய இந்த பெண் முதலில் என்னால்தான் மனைவியாக வரிக்கப்பட்டாள், ஆனால் பிறகு இவள் தந்தை பொய்யனான பிருகுவிடம் இவளை ஒப்படைத்தான். இவளைத் தனிமையில் கண்ட நான், ஆசிரமத்திலிருந்து வலுக்கட்டாயமாக அபகரித்து செல்லத் தீர்மானித்திருப்பதால், பிருகுவின் மனைவியாக இவ்வழகிக் கருதத்தக்கவளா என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக. முதலில் எனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இந்தக் மெல்லிடையாளைப் பிருகு அடைந்தான் என்று நினைக்கும் போதே கோபத்தால் என் இதயம் எரிகிறது" என்றான் {புலோமன்}.(23-25)

"சௌதி தொடர்ந்தார், "இந்த வகையிலே அந்த ராட்சன் {புலோமன்}, தழலுடன் கூடிய அந்த நெருப்பு தேவனிடம் {அக்னியிடம்}, அந்த மங்கை பிருகுவின் மனைவிதானா என்று மீண்டும் மீண்டும் கேட்டான்.(26) அந்தத் தேவனோ {அக்னி} பதில் கூற அச்சப்பட்டான். “ஓ நெருப்பு தேவா {அக்னியே}" என்று சொன்ன அவன் {ராட்சசன் புலோமன்}, "ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் எப்போதும் உறைந்திருந்து அவன் அல்லது அவளின் நற்செயல்களுக்கும், தீச்செயல்களுக்கும் சாட்சியாக இருப்பவன் நீ.  ஓ மரியாதைக்குரியவனே {அக்னியே}! என் கேள்விக்கு உண்மையான பதிலைக் கூறுவாயாக.(27) என் மனைவியாக நான் தேர்ந்தெடுத்திருந்தவளை பிருகு அபகரிக்கவில்லையா? நான் முதலில் தேர்ந்தெடுத்ததால் இவள் என்னுடைய மனைவிதான் என்ற உண்மையை அறிவிப்பாயாக.(28) இவள் பிருகுவின் மனைவிதானா என்று நீ பதிலுரைத்த பின்பு, உன் கண்ணெதிரிலேயே இவளை இந்த ஆசிரமத்திலிருந்து நான் தூக்கிச் செல்வேன். எனவே நீ உண்மையுடன் பதிலுரைப்பாயாக” {என்று அந்த ராட்சசன் சொன்னான்}.(29)

சௌதி தொடர்ந்தார் “ஏழு தழல்களைக் கொண்ட அந்தத் தேவன் {அக்னி} அரக்கனின் வார்த்தைகளைக் கேட்டு பொய்யுரைக்கவும் அஞ்சி, அதேயளவு பிருகுவின் சாபத்திற்கும் அஞ்சி பெரும் துயருக்கு ஆளானான். நீண்ட நேரத்திற்குப் பிறகு அந்தத் தேவன் {அக்னி} மென்னொலி வார்த்தைகளால் பதிலளித்தான். (30)

"ஓ ராட்சசா {புலோமா}, இந்தப் புலோமையை முதலில் நீயே தேர்ந்தெடுத்தாய். ஆனால் முறையான புனிதமான சடங்குகளுடனும், வேண்டுதல்களுடனும் நீ அவளை {புலோமையை} ஏற்கவில்லை.(31) அருள் கிடைக்கும் என்ற விருப்பத்தில், வெகுதொலைவுக்கும் புகழ்மிகுந்த இந்த மங்கையை {புலோமையை}, பிருகுவுக்கு அவளது தகப்பன் அளித்தான்.(32) ஓ ராட்சசா, அவள் {புலோமா} உனக்கு அளிக்கப்படவில்லை. வேதச்சடங்குகளுடன், என் முன்னிலையில்தான் இந்த மங்கை பிருகு முனிவரால் முறையாக தன் மனைவியாக வரிக்கப்பட்டாள்.(33) இவளே அவள் என்று நானறிவேன். பொய்ம்மை பேச நான் துணிய மாட்டேன். ஓ ராட்சசர்களில் சிறந்தவனே, பொய்ம்மைக்கு இந்த உலகில் மதிப்பில்லை" என்று பதிலளித்தான் {அக்னி}.(34)

தாய் கத்ருவிடம் பாம்புகள் பெற்ற சாபம்! | ஆதிபர்வம் - பகுதி 20

ஆஸ்தீக பர்வம் - 8 பதிவின் சுருக்கம் :  வினதைக்கும் கத்ருவுக்கும் இடையிலான பந்தயம்; தங்கள் தாயான கத்ருவிடம் சாபம் பெற்ற பாம்புகள்; கத்ருவி...